under review

அ. சீனிவாசன்

From Tamil Wiki
அ. சீனிவாசன்

அ. சீனிவாசன் (அய்யப்ப நாயுடு சீனிவாசன்; பாரதி சீனிவாசன்: ஆகஸ்ட் 6, 1925 - ஜுலை 24, 2006) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர். தொழிற்சங்கவாதி; அரசியல்வாதி; சுதந்திரப் போராட்ட வீரர். இந்திய விமானப் படையில் பணியாற்றினார். அரசியல் கட்சிகள் பலவற்றில் இணைந்து செயல்பட்டார். தமிழக அரசால் இவரது படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

பிறப்பு, கல்வி

அ. சீனிவாசன், ஆகஸ்ட் 6, 1925 அன்று, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜபுரம் கிராமத்தில், அய்யப்ப நாயுடு-வெங்கடம்மாள் இணையருக்குப் பிறந்தார். தொடக்கக் கல்வியை மகாராஜபுரம் கிராமப் பள்ளியில் பயின்றார். சாத்தூர் எட்வர்ட் உயர்நிலைப் பள்ளி, வற்றாயிருப்பு இந்து நடுநிலைப் பள்ளி, விருதுநகர் க்ஷத்திரிய வித்தியாசாலை பள்ளிகளில் உயர்நிலைக் கல்வி கற்றார். மதுரையில் பட்டப்படிப்பு படித்தார். ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளைக் கற்றார்.

தனி வாழ்க்கை

அ. சீனிவாசன், 1943-ல், இந்திய விமானப் படையில் சேர்ந்து ராணுவப் பயிற்சியும், தொழில் பயிற்சியும் பெற்று பொறியாளராகப் பணியாற்றினார். சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு 1947-ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதழாளராகவும், சுதந்திர எழுத்தாளராகவும் செயல்பட்டார். மனைவி, நாகலட்சுமி. மகன், ஏ.எஸ். வாசன்; மகள்கள், பாகீரதி, வைதேகி.

அ. சீனிவாசன் புத்தகங்கள்

இலக்கிய வாழ்க்கை

அ. சீனிவாசன், குழந்தைப் பருவம் முதலே பெற்றோர் மூலம் ராமாயணம், மகாபாரதம், நளவெண்பா, பிரபந்தங்கள் பற்றி அறிந்திருந்தார். இளமைப் பருவத்தில் சுயமாக விரும்பித் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றார். பாரதி, கம்பன் படைப்புகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சிலப்பதிகாரத்தை ஆர்வத்துடன் கற்றார். கல்கி, சரத்சந்திரர், பங்கிம் சந்திரர் நாவல்கள், மணிக்கொடி இதழ் சிறுகதைகளை வாசித்து படைப்பிலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். கம்பன், ஆழ்வார்கள், பாரதி, சிலப்பதிகாரம், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆய்வு நோக்கில் பல நூல்களை எழுதினார். தொழிலாளர் நலன், முன்னேற்றம், விவசாயிகள் பிரச்சனைகள் பற்றி ‘ஜனசக்தி’, ’மார்க்சீய ஒளி’ போன்ற இதழ்களில் பல கட்டுரைகளை எழுதினார். ‘விஜயபாரதம்’, ‘பசுத்தாய்’ போன்ற இதழ்களில் ஆன்மிகம், தத்துவம், சமயம் சார்ந்து பல கட்டுரைகளை எழுதினார். பாரதி குறித்துப் பல நூல்களை எழுதியதால் ‘பாரதி சீனிவாசன்’ என்று அழைக்கப்பட்டார். பொதுவுடைமை இயக்கம் சார்ந்த அரசியல், பொருளாதாரம், தத்துவம் குறித்த பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

இதழியல்

அ. சீனிவாசன், ஜனசக்தி வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். அதனை நாளிதழாக வெளியிட்டு அதன் ஆசிரியர் பொறுப்பு வகித்தார். ’மார்க்சீய ஒளி’ மாத இதழில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார். ‘சாந்தி’, ‘ஹார்பர் தொழிலாளி’, ‘தொழிற்சங்கச் செய்தி’ முதலிய இதழ்களில் பணியாற்றினார். ‘இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு’ இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

பதிப்புலகம்

அ. சீனிவாசன், ‘கர்ம யோகி பதிப்பகம்’ என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி, தன் நூல்கள் சிலவற்றைப் பதிப்பித்து வெளியிட்டார். தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை, சிறந்த நூலுக்கு உதவி என்ற திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற்று தனது நூல்கள் சிலவற்றை வெளியிட்டார்.

அரசியல்

அ. சீனிவாசன் இளம் வயது முதலே அரசியல் ஈடுபாடு கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1939-ல், இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்ந்த யுத்த எதிர்ப்புக் கூட்டங்களில் கலந்துகொண்டார். அதற்காகக் கைது செய்யப்பட்டு சிறுவன் என்பதற்காக விடுதலை செய்யப்பட்டார். 1942-ல் நிகழ்ந்த ஆகஸ்ட் புரட்சியில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு, வயது குறைவு காரணமாக விடுவிக்கப்பட்டார். ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான காங்கிரஸ் சோஷலிஸக் கட்சியில் சில காலம் உறுப்பினராக இருந்தார். இந்திய பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து அதன் உறுப்பினராகப் பணியாற்றினார். கட்சிப் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டார்.

1949-ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் காவல்துறை அடக்குமுறைக்கு உள்ளாகி மதுரை மற்றும் சேலம் சிறைகளில் கடும் தண்டனை அனுபவித்தார். 1951-ல் விடுதலையான பின் மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டார். 1984, 1991-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் சிவகாசி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளராகவும் தேசியக்குழு உறுப்பினராகவும் பணிபுரிந்தார். 1999-ல் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆனார். அக்கட்சியின் மாநில இலக்கிய அணித் தலைவராகப் பணியாற்றினார். தொழிற்சங்கங்கள் சார்பாகப் பல்வேறு தொழிலாளர் போராட்டங்களை முன்னெடுத்தார். தொழிற்சங்கவாதியாகச் செயல்பட்டார்.

பொறுப்புகள்

  • ராஜபாளையம் நகரசபை உறுப்பினர்
  • ராஜபாளையம், தளவாய்புரம், சிவகாசி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சென்னை துறைமுகம், ஆவடி டாங்க் தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம் முதலிய இடங்களில் தொழிற்சங்கங்களை உருவாக்கி அதன் தலைவராகச் செயல்பட்டார்.
  • சென்னை கப்பல் கூடத் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்.

விருதுகள்

  • மார்க்சிய ஒளி ஆசிரியர் பணிக்காக சிறந்த இதழாளருக்கான சர்வதேசப் பட்டயம்
  • சோவியத் நாட்டின் நேரு விருது
  • தமிழ் வளர்ச்சித்துறை சிறந்த நூலுக்கான பரிசு - பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை நூல்
  • தமிழ் வளர்ச்சித்துறை சிறந்த நூலுக்கான பரிசு - பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி நூல்
  • தமிழ் வளர்ச்சித்துறை சிறந்த நூலுக்கான பரிசு - சிலப்பதிகாரத்தில் வைதீக கருத்துக்கள்

மறைவு

அ. சீனிவாசன், ஜுலை 24, 2006-ல் காலமானார்.

நாட்டுடைமை

அ. சீனிவாசனின் நூல்கள், அவரது மறைவுக்குப் பின் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

ஆவணம்

தமிழ் இணையக் கல்விக்கழக மின்னூலகத்தில் அ. சீனிவாசனின் நூல்கள் சில சேகரிக்கப்பட்டுள்ளன.

இலக்கிய இடம்

பொதுவுடைமை இயக்கக் கொள்கைகள் சார்ந்து அ. சீனிவாசன் மொழிபெயர்த்திருக்கும் நூல்கள் முக்கியமானவை. அ. சீனிவாசன், பொதுவுடைமை இயக்கம் சார்ந்த பல நூல்களை மொழிபெயர்த்த அறிஞராகவும், கம்பன், பாரதி இயல் ஆய்வில் ஈடுபட்ட எழுத்தாளர்களுள் ஒருவராகவும் மதிப்பிடப்படுகிறார்.

அ. சீனிவாசன் நூல்கள்

நூல்கள்

கட்டுரைத் தொகுப்புகள்
  • ஆழ்வார்களும் பாரதியும்
  • தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை
  • பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி
  • பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி (புதிய வடிவம்)
  • பாரதியின் உரைநடைமொழி
  • பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்
  • பாரதியின் தேசீயம்
  • பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை
  • மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும் அவைகளின் சிறப்பும் இன்றைய பொருத்தமும்
  • கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்
  • கம்பன் ஒரு சமுதாயப் பார்வை
  • கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2
  • கம்பன் காவியத்தில் விதியின் பிழையும் அறத்தின் வெற்றியும்-1
  • கம்பன் காவியத்தில் விதியின் பிழையும் அறத்தின் வெற்றியும்-2
  • கல்யாணராமனும் பரசுராமனும்
  • ஶ்ரீராமனும் கோதண்டமும்
  • கீதை அமுதம்
  • சிலப்பதிகாரத்தில் வைதீக கருத்துக்கள்
  • சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும் - ஓர் ஆய்வு
  • கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி...
  • சித்தனி
  • மார்க்சிய பொருளாதாரத் தத்துவம்
  • ஜீவாவின் தமிழ்ப் பணிகள்
மொழிபெயர்ப்புகள்
  • மார்க்சிய-லெனினியத் தத்துவ ஞானம்
  • காரல்மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு
  • மார்க்சிய தத்துவம்
  • மார்க்சியமும் பகவத் கீதையும்
  • வரலாற்றியல் பொருள் முதல்வாதம்
  • அரசியல் தத்துவத்தின் அடிப்படைகள்
  • ஐக்கிய முன்னணித் தந்திரம்
பிரசுரங்கள்
  • சியாம பிரசாத் முகர்ஜி வாழ்க்கை வரலாறு
  • பாரதிய ஜனசங்கம் முதல் பாரதிய ஜனதா கட்சி வரை - ஐம்பது ஆண்டு வரலாற்றுக் குறிப்புகள்
  • நெசவாளர்களும் நெசவாளர் பிரச்சனைகளும்
  • நெசவாளர்களும் நெசவுத் தொழிலும்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Mar-2023, 16:52:47 IST