under review

அ.இராகவன்

From Tamil Wiki

To read the article in English: A. Raghavan. ‎

அ.இராகவன்
அ.இராகவன்

அ.இராகவன்: (ஏப்ரல் 1902 - மார்ச் 8,1981) சாத்தான்குளம் அருணாசலக் கவிராயர் இராகவன். பண்பாட்டு ஆய்வாளர், நுண்கலை ஆய்வாளர், அரும்பொருள் சேகரிப்பாளர், நாணயவியலாளர். தமிழ்ப்பண்பாட்டை நகைகள், விளக்குகள் ஆகிய பொருட்களினூடாக விளக்கியவர், கொற்கை உள்ளிட்ட தொல்நகரங்களைப் பற்றி ஆராய்ந்தவர்.

பிறப்பு, கல்வி

இராகவன் ஏப்ரல் 22,1902-ல் பழைய திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளம் ஊரில் அருணாச்சலக் கவிராயரின் மகனாகப் பிறந்தார். ஆசிரியப் பயிற்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

இராகவன் 1924 முதல் 1930 வரை சாத்தான் குளத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

இராகவன் ,சாத்தான் குளத்தில் ஆசிரியராகப் பணிபுரியும்போது ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார். திருநெல்வேலியில் பணியாற்றிய கா.சுப்ரமணிய பிள்ளை, திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், பா. தாவூத்ஷா ஆகியவர்களோடு உறவு உருவாகவே பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபட்டார். 1930-ல் ஈரோட்டில் நிறுவப்பட்ட பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது மேற்பார்வையில் குடியரசு பதிப்பகம் இருபதுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டது.

1935-ல் இராகவன் எழுதிய 'பெண்ணுரிமையும் மதமும்’ என்ற நூல் வெளிவந்தது. 'கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்?’, ’கடவுளர் கதைகள்’ போன்ற கடவுள் மறுப்பு நூல்களை எழுதினார். 1935- வரை பெரியாரோடு இணைந்து சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றிய அ.இராகவன் ப.ஜீவானந்தம் சுயமரியாதை இயக்கத்திலிருந்து வெளியேறி 'சுயமரியாதை சமதர்மக் கட்சியைத் தொடங்கிய போது அதில் சேர்ந்தார். 1937-ல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

இந்தியாவிற்கு 1947-ல் அரசியல் விடுதலை கிடைத்தபோது அரசியலார்வத்தை இழந்த இராகவன் கொழும்பு சென்று, அங்கு "சரஸ்வதி அழுத்தகம்" என்னும் அச்சகம் ஒன்றைத் தொடங்கினார்.

இதழியல்

1936-ல் ப.ஜீவானந்தத்தின் ஒத்துழைப்புடன் அறிவு என்னும் இதழை நடத்தினார்.

பண்பாட்டு ஆய்வுகள்

இலங்கையில் இருக்கையில் பண்பாட்டு ஆய்வு, தொல்பொருள் சேகரிப்பில் ஆர்வம் கொண்டார். ராயல் ஏசியாட்டிக் சொஸைட்டி, காசி இந்தியப் பழங்காசு ஆய்வு நிறுவனம் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். 1960-ம் ஆண்டு பாளையங்கோட்டைக்குத் திரும்பி தமிழகத்தின் தொல்நகரங்கள் தொடர்ந்த அகழாய்வுச் செய்திகளையும் சிந்து சமவெளி ஆய்வுச் செய்திகளையும் தொகுத்து ஆராய்ந்தார்.

சிங்கப்பூர் தமிழ் முரசு இதழில் தொடராகத் தன் ஆய்வுகளை எழுதினார். 'தமிழர் பண்பாட்டில் தாமரை’ 'தமிழ்நாட்டுத் திருவிளக்குகள்’ என்னும் இரண்டு தொடர்கள் வெளியாயின. தமிழ்நாட்டுத் திருவிளக்குகள் தமிழகத்தில் கல்லிலும் உலோகத்திலும் மண்ணிலும் செய்யப்படும் விளக்குகளின் வடிவங்கள் எப்படி மாறிவந்துள்ளன என்றும், அவை வழிபாடுகள் ஆசாரங்கள் ஆகியவற்றில் எந்த வகைகளில் இடம்பெறுகின்றன என்றும், அவற்றின் குறியீட்டுப்பொருள் குறித்தும் எழுதப்பட்ட பண்பாட்டு ஆய்வுநூல்.தமிழர் பண்பாட்டில் தாமரை என்னும் நூல் தமிழ்ப்பண்பாட்டில் தாமரை எவ்வண்ணம் கவியுருவகமாகவும் மதக்குறியீடாகவும் உள்ளது என ஆராய்கிறது.

ராகவன் எழுதிய 'தமிழ்நாட்டு அணிகலன்கள்’ என்ற நூல் தமிழர்களின் நகைகளை சிற்பங்களில் இருந்தும் தொல்பொருட்களில் இருந்தும் தொகுத்துக்கொண்டு அவற்றின் குறியீட்டு அர்த்தம், சடங்குகளின் அவற்றின் பொருள் ஆகியவற்றையும் அணிகளின் வடிவங்களையும் அணிகள் செய்யும் முறையையும் வெவ்வேறு உலோகங்களையும் பற்றி விரிவாக ஆராய்கிறது கல்வெட்டுச் சான்றுகள், சிற்ப நூல் சான்றுகள் ஆகியவற்றின் துணையோடு சுமார் ஐந்நூறு அணிகலன்களின் பெயர்ப்பட்டியல் ஒன்றையும் அளிக்கிறார்.

’இசையும், யாழும்’ என்னும் நூல், தமிழிசையின் வரலாற்றை யாழின் பரிணாமத்தின் வழியாக ஆராய்கிறது. யாழ் எப்படி வெவ்வேறு வகையான வீணைகள் ஆகியது என்று விரிவான படங்களுடன் விவாதிக்கும் நூல் அது இசையில் உருவாக்கிய மாற்றங்களை ஆராய்கிறது. தமிழர்களின் கப்பல் கட்டும் கலை பற்றிய செய்திகளைத் தொகுத்துச் சொல்லும் 'நம் நாட்டுக் கப்பற்கலை,’ என்னும் நூல் இலக்கியச் சான்றுகள் மற்றும் சிற்பநூல் சான்றுகள் வழியாக தமிழர்களின் கப்பல்கலை எப்படி இருந்தது என்று விளக்குகிறது. கப்பலின் அமைப்பு, அதன் துணைக்கருவிகள், அதன் சிற்பவியல் ஆகியவற்றை விளக்குகிறது.

தமிழர்களுக்கும் வேற்று பண்பாடுகளுக்குமான உறவைப் பற்றிப் பேசும் ’தமிழக - சாவகக் கலைத் தொடர்புகள்’ தொல்நகராகிய கொற்கையைப் பற்றிய செய்திகளை அளிக்கும் 'கோநகர் கொற்கை’ போன்ற ராகவனின் நூல்கள் தமிழ்ப்பண்பாட்டு ஆய்வில் மிக முக்கியமானவை. கொற்கையையும் ஆதிச்சநல்லூர் புதைவுச்சான்றுகளையும் இணைத்து ஆராயும் 'ஆதிச்சநல்லூரும் பொருநை நாகரீகமும்’ என்னும் நூலும் குறிப்பிடத்தக்கது. இராகவனின் பலநூல்கள் அச்சேறாமலுள்ளன. கோநகர் கொற்கை நூலின் உள்ளட்டையில் வெளிவரவிருக்கும் நூல்களின் பட்டியல் உள்ளது. "இறைவனின் எண்வகை வடிவங்கள்," "தமிழ்நாட்டுப் படைக்கலன்கள்," "தமிழ்நாட்டுக் காசுகள்." தமிழ்நாட்டு ஓவியம்," "சிந்துவெளித் திராவிட நாகரீகம்" ஆகியவை வெளிவராமலே உள்ளன. இராகவன் சேகரித்த அரிய நாணயங்களும் கலைப்பொருட்களும் முறையாகப் பாதுகாக்கப்படவும் இல்லை.

மறைவு

இராகவன் மார்ச் 8, 1981-ல் மறைந்தார்

நாட்டுடைமை

இராகவனின் நூல்கள் 2008-ல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.

நூல்கள்

  • தமிழ்நாட்டு அணிகலன்கள்
  • தமிழக சாவக கலைத் தொடர்புகள்
  • அறிவு இதழ்க் கட்டுரைகள்
  • வேளாளர் வரலாறு
  • தமிழ்நாட்டுக் கோயிற் கட்டிடக்கலை
  • இறைவனின் எண்வகை வடிவங்கள்
  • ஆதிச்சநல்லூரும் பெருநைவெளி நாகரீகமும்
  • தமிழ்நாட்டு படைக்கலன்கள்
  • தென்னிந்திய கோயில் கட்டிடக்கலைகள்
  • இசையும் யாழும்
  • குடியரசுக் கட்டுரைகள்
  • ஆய்வுக் கட்டுரைகள்
  • தமிழர் பண்பாட்டில் தாமரை
  • கோ நகர் கொற்கை
  • தமிழ்நாட்டுத் திருவிளக்குகள்
  • நம்நாட்டுக் கப்பற்கலை

உசாத்துணை


✅Finalised Page