under review

அழகுநிலா

From Tamil Wiki
அழகு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அழகு (பெயர் பட்டியல்)
அழகுநிலா

அழகுநிலா (பிறப்பு: டிசம்பர் 17,1974) சிங்கப்பூர் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதைகள், குழந்தை இலக்கியம் ஆகியவற்றை எழுதி வருகிறார். குறிப்பிடத்தக்க இலக்கிய விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்

பிறப்பு, கல்வி

அழகுநிலா தஞ்சாவூரில், 1974 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த செண்டாங்காடு. பெற்றோர் தி.பஞ்சாட்சரம், ப.தமிழரசி.

பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் பள்ளியில் உயர்நிலைக்கல்வியையும், பட்டுக்கோட்டை அரசினர் பெண்கள் மேனிலைப்பள்ளியில் மேல்நிலைக்கல்வியையும் முடித்தார். திருச்சிராப்பள்ளி மண்டலப் பொறியியல் கல்லூரியில் வேதிப்பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எரியம் பேணல் மற்றும் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

அழகுநிலா மார்ச் 16, 2000 அன்று பொறியாளரான செந்தில்நாதனை மணம் புரிந்தார். விக்னேஷ் என்னும் மகனும் மதியரசி என்னும் மகளும் இருக்கின்றனர். சென்னை, சிங்கப்பூரில் ஏழு வருடங்கள் இயந்திரப் பொறியியல் துறையில் பணியாற்றி உள்ளார். 2005-ம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

தமிழ் முரசு நாளிதழ், தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ், வல்லினம், அகழ், கனலி, அழிசி, திண்ணை, தங்கமீன், சிங்கப்பூர் கிளிஷே, களம் ஆகிய இணைய இதழ்கள், ஜெயமோகன் இணைய தளம் ஆகியவற்றில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்யும் நவீன இலக்கியச் செயல்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறார். சிங்கப்பூர் நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லியாக இருக்கிறார்.

இலக்கிய இடம், மதிப்பீடு

ஜெயமோகன் "தொடர்ந்த வாசிப்பு மற்றும் எழுத்து காரணமாக வந்த இயல்பான சரளத்தன்மை கொண்டவை இவரது கதைகள். வடிவ ரீதியாக மொழி சார்ந்து குறைகள் சொல்ல ஏதுமில்லை. ஒரு பயில்முறை எழுத்தாளரின் தளத்திலிருந்து வெகுவாக மேலெழுந்துவிட்டிருக்கிறார்" என்று அழகுநிலாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு பற்றி குறிப்பிடுகிறார். சுனில் கிருஷ்ணன் "அழகுநிலாவின் கதைகளை பதின்மம், முதல் தலைமுறை புலம்பெயர்வு என இரண்டு அடுக்குகள் கொண்டதாக வாசிக்கலாம். புலம்பெயர்தலின் தத்தளிப்பை பதின்மத்தின் தத்தளிப்புடன் இணைப்பதில் வெற்றி பெறுகிறார். சிறுகதைகளில் துல்லியம் மிக முக்கியமான அம்சம். இவரது சில கதைகளில் ஒருவித அலைவு துல்லியமின்மையாக வெளிப்படுகிறது. எனினும் அதை நான் எதிர்மறையாக காணமாட்டேன். தனது தனித்த குரலை கண்டடைய முற்படும் எழுத்தாளரின் தேடல் என்றே கருதுவேன்" என்று அழகுநிலாவின் கதைகள் பற்றி குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • சிங்கப்பூர் புத்தக மன்றத்தின் BEYOND WORDS, 2015 திட்டத்தின் வெற்றியாளர்
  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 'முத்தமிழ் விழா’ சிறுகதைப் போட்டியில் பரிசுகள்
  • 'அப்பன்' நூலுக்காக 2024-ம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கியப் பரிசு[1]

நூல்கள்

  • ஆறஞ்சு (2015, சிறுகதைத் தொகுப்பு)
  • சிறுகாட்டுச் சுனை (2018, கட்டுரைத் தொகுப்பு)
  • சங் கன்ச்சில் (2019, சிறுகதைத் தொகுப்பு)
  • மொழிவழிக் கனவு (2021, கட்டுரைத் தொகுப்பு)
  • கொண்டாம்மா கெண்டாமா (2016, குழந்தைகள் பட நூல்)
  • மெலிஸாவும் மெலயனும் (2016, குழந்தைகள் பட நூல்)
  • மெலிஸாவும் ஜப்பானிய மூதாட்டியும் (2018, குழந்தைகள் பட நூல்)
  • பா அங் பாவ் (2019, குழந்தைகள் பாடல் நூல்)
  • வாசிப்பெனும் வானம் (2022, கட்டுரைத் தொகுப்பு, மின்னூல்)
  • தோற்ற கவிதைகள் (2022, கவிதைத் தொகுப்பு, மின்னூல்)
  • அப்பன் (2023, பதிவுகள் தொகுப்பு, நூல்வனம் பதிப்பகம்)[2]

உசாத்துணை

இணைப்புகள்

  • அழகுநிலா இணையப்பக்கம் http://azhagunila.com/
  • சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும் | ஜெயமோகன் – தி சிராங்கூன் டைம்ஸ் (serangoontimes.com)
  • அழகுநிலா | பதாகை (padhaakai.com)
  • அழகுநிலாவின் 'சங் கன்ச்சில்’ ஒரு பார்வை – வல்லினம் (vallinam.com.my)
  • பறப்பதற்கு முந்தைய சிறகடிப்புகள் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
  • இமையம்: ஆறஞ்சு (சிறுகதைத் தொகுப்பு) – அழகுநிலா. விமர்சனம் – இமையம். (imayamannamalai.blogspot.com)
  • சிறிய காடும் சில மனிதர்களும் – வல்லினம் (vallinam.com.my)
  • அழகு நிலா :சிங்கப்பூரின் சமகாலப் படைப்புகள் (1) – ம.நவீன் (vallinam.com.my)
  • சங் கன்ச்சில் – அழகுநிலா – சிவானந்தம் நீலகண்டன் (wordpress.com)
  • புதுக்குரல்கள் - மாலனுடன் ஒரு மாலைப் பொழுது - மூன்றாவது உரை | சிங்கப்பூர் தேசிய நூலகம் - YouTube

அடிக்குறிப்புகள்


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:38:01 IST