அழகிய மணவாளன்
- அழகிய என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அழகிய (பெயர் பட்டியல்)
- மணவாளன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மணவாளன் (பெயர் பட்டியல்)
அழகிய மணவாளன் (பிறப்பு: ஆகஸ்ட்13, 1991) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். மலையாளத்தில் இருந்து கட்டுரைகள், கதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து வருகிறார். தமிழில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
அழகிய மணவாளன் சென்னையில் ஆகஸ்ட் 13, 1991 அன்று பிறந்தார். பெற்றோர் நரசிம்மன், உஷாராணி தம்பதியர். பள்ளிக் கல்வியை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியலில் பொறியியல் பட்டம் (B.E in Electricals & Electronic Engineering) பெற்றார்.
தனி வாழ்க்கை
அழகிய மணவாளன் கல்லூரி முடித்து சிறிது காலம் விப்ரோவில் பணிபுரிந்தார். தற்போது பங்கு சந்தை வணிகம் செய்து வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
அழகிய மணவாளன் கல்லூரி முடித்த காலங்களில் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் நாவல் வழியாக இலக்கியத்துள் நுழைந்தார். ஜெயமோகனின் அறம் சிறுகதைத்தொகுப்பு மூலம் அவரது புனைவுலகத்தில் அறிமுகம் ஏற்பட்டு நவீன இலக்கிய ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கினார்.
2015-ல் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் நிகழ்ந்த ஜெயமோகனின் மலையாளச் சொற்பொழிவைக் கேட்ட பின்பு மலையாள மொழியின் மீது ஆர்வம் கொண்டு அதனைக் கற்றார். பின் மலையாளத்தில் இருந்து தொடர்ந்து கட்டுரைகளையும், சிறுகதைகளையும் தமிழில் மொழியாக்கம் செய்து வருகிறார்.
அழகிய மணவாளனின் முதல் மொழியாக்கம் ஜூலை 2023-ல் வெளிவந்தது. மலையாள எழுத்தாளர், விமர்சகர் பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய ‘நாவல் சித்தியும் சாதனையும்’ என்ற நாவல் அழகியல் பற்றிய கட்டுரைத் தொகுப்பை 'நாவலெனும் கலைநிகழ்வு' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்தார்.
அழகிய மணவாளன் கேரளத்தின் நிகழ்த்துகலையான கதகளியில் ஆர்வம் கொண்டவர். அது சார்ந்து தமிழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.
இலக்கிய இடம்
"நாவல் கலை குறித்த இந்த நூல் சமீபத்தில் பிரமிப்பையும் ஒரு மேதையோடு உரையாடிய களியையும் அளித்தது. இதை மொழிபெயர்த்திருக்கும் அழகிய மணவாளன் தமிழ் வாசகர்களின் நன்றிக்குரியவர். அறிஞரென்று சொல்லக்கூடிய ஒரு ஆசிரியரின் படைப்பை மலையாளத்திலிருந்து அதீதமாக எளிமைப்படுத்தி விடாமல், வாசகனை சிரமமும்படுத்தாமல் உருவாக்கியிருக்கிறார்." என நாவலெனும் கலைநிகழ்வு மொழிபெயர்ப்பு நூல் குறித்து ஷங்கர்ராமசுப்ரமணியன் மதிப்பிடுகிறார்.
நூல்கள்
- நாவலெனும் கலைநிகழ்வு மூலம்: பி.கே. பாலகிருஷ்ணன், தமிழில்: அழகிய மணவாளன்
பிற மொழியாக்கங்கள்
- அண்டைவீட்டார் வேகும் மணம், எழுத்தாளர் மதுபால் சிறுகதை
- கவிஞர் கே.ஜி.சங்கரப்பிள்ளையின் கட்டுரை
- நேருவின் வாழ்க்கைவரலாற்றெழுத்து பற்றி எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணனின் கட்டுரை
- ஆரோக்ய நிகேதனம் நாவல் பற்றி எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணனின் கட்டுரை
- தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகம் பற்றி எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணனின் கட்டுரை
- ஜேன் ஆஸ்டன் - பி.கே.பாலகிருஷ்ணன் கட்டுரை
- படைப்பாளியின் தவமும் படைப்பின் உணர்வுத்தீவிரமும் – பி.கே.பாலகிருஷ்ணன் கட்டுரை
கட்டுரைகள்
உசாத்துணை
- நன்றி: அழகிய மணவாளன்
- நாவலெனும் பிரம்மாண்ட உலைக்களம் : ஷங்கர்ராமசுப்ரமணியன்: அகழ் மின்னிதழ்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
24-Jul-2023, 10:12:07 IST