under review

அள்ளூர் நன்முல்லையார்

From Tamil Wiki

அள்ளூர் நன்முல்லையார் சங்ககாலப் பெண்பாற் புலவர். இவர் பாடிய பதினோரு பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

நன்முல்லையார் அள்ளூர் என்ற ஊரில் பிறந்தார். பாண்டிய நாடான அள்ளூர் நீர் வளமும் நில வளமும் மிக்க ஊர் என்பது இவரின் பாடல் வழி அறிய முடிகிறது.

இலக்கிய வாழ்க்கை

அள்ளூர் நன்முல்லையார் பாடல்கள் அகநானூற்றில் ஒன்றும்(46), புறநானூற்றில் ஒன்றும்(306), குறுந்தொகையில் ஒன்பதும் (32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237) என பதினோரு பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.

பாடல்கள் வழி அறிய வரும் செய்திகள்

புறநானூறு 306

மூதின்முல்லை துறையைச் சேர்ந்த பாடல். "நாள்தோறும் விருந்தினர் என் இல்லத்திற்கு வர வேண்டும்; என் கணவனும் அவன் தலைவனாகிய வேந்தனும் பிற நாடுகளை வென்று பொருள் பெற உதவும் பெரும்பகையை அடைவானாகுக" என அரிவை ஒருவள் நடுகல்லை வழிபடுவதாக பாடல் அமைந்துள்ளது. இந்தப்பாடலில் சில எழுத்துக்கள் சிதைந்துள்ளன. நீர் சிறிதளவே உள்ள நீர்த்துறையையும், முள்ளையுடைய கழற்கொடிகளாலாகிய வேலி சூழ்ந்த அழகிய சிறுகுடிகளையுமுடைய சிற்றூரைப்பற்றிய செய்தி சொல்லப்பட்டுள்ளது.

அகநானூறு 46

மருதத்திணைப்பாடல். "வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது" எனும் துறையின் கீழ் உள்ளது. "எருமை சேற்றிலே கிடக்க விரும்பும். ஊரே உறங்கும் வேளையில் தன்னை கட்டியிருந்த கயிற்றை அறுத்துக்கொண்டு முள்வேலியைத் தன் கொம்புகளால் விலக்கிக்கொண்டு சேற்றில் இறங்கி வண்டு மொய்த்துக்கொண்டிருக்கும் தாமரை மலரை மேயும். அப்போது அங்குள்ள மீன்கள் ஓடும், வள்ளைக் கொடி மிதிபடும்" என தலைவனை தலைவி பழிப்பதாகப் பாடல் உள்ளது. என் கைவளைகள் கழன்று விழுந்தாலும் பரவாயில்லை. நீ பரத்தையுடன் மகிழ்ந்திரு என வாழ்த்துவதாக பாடல் உள்ளது. "கொற்றச்செழியன் பகைவனின் யானைப் படையைத் தன் வாள்-படை கொண்டு வென்றவன். அவன் ஊர் அள்ளூர்" என்ற செய்தியும் உள்ளது.

குறுந்தொகை
  • உவமை: சிறுமழை பெய்தவுடன் பூக்கும் மஞ்சள் நிற நெருஞ்சிப் பூக்கள் நெருங்கிப் பூத்திருக்கும். பின் காயாகி முட்களாக மாறும். அது வழியில் செல்வோரை மட்டுமில்லாது அவர்களுக்கு அடுத்து அருகிருப்பவரையும் வருத்தும்: இதைப்போல உறவின் முதலில் இனிமையை வழங்கிய தலைவன் பின் பிரிந்து, மறைந்து, காண வராமலாகி தலைவியை வருத்துவதற்கு ஒப்புமை.
  • அறிவுரை: தன் மீது அன்பும் ஆர்வமும் கொண்டு மதியாதார் முன் மண்டியிட்டு வாழ்வதை விட மாண்டு மறைதல் மாண்புடையது.
  • 'பூப்பின் புறப்பாடு ஈரறு நாளும் நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர்'(தொல்காப்பியம்): மகளிரின் மாதவிலக்கு நாளிலிருந்து 12 நாள் கணவன் மனைவியுடன் இருக்கவேண்டும் என்பது தமிழர் நெறி. மாதவிலக்கடைந்த மனைவி ஒருத்தி சொல்வதாக ஒரு பாடல் இதற்கு சான்றுரைக்கிறது.
  • "பொருள் தேடச் செல்லலாம் என்று நினைத்த தலைமகன் தன் காதலியை எண்ணிப் பின்தங்கிவிட்டான். காலை, பகல், மாலை, யாமம், விடியல் என்று எந்த நேரத்திலும் காமம் பொய்யாகிவிடுகிறது. அதை மெய்யாக்க மடலேறலாம் என்றால் ஊர்மக்கள் பற்றிய நினைவு வருகிறது. ஊர்மக்கள் என்னைத் தூற்றினால் எனக்குப் பழி. ஊர்மக்கள் என்னை வாழ்த்தினால் என் காதலியின் பெற்றோருக்குப் பழி. எனவே மடலேறுதலும் தக்கதன்று. என்ன செய்வேன்?" என்று தலைவன் கலங்குவதாக பாடல் உள்ளது.
  • "பொருள் தேடக் காட்டு வழியில் சென்றவர் அங்குப் பழுத்திருக்கும் வேப்பம்பழத்தைப் பார்க்கும்போது வேனில் காலம் வந்துவிட்டதே என்று எண்ணமாட்டாரோ?" என்று தலைமகள் தோழியிடம் கூறுவதாக பாடல் அமைந்துள்ளது.
  • "அற்சிரம் என்னும் பனிப்பருவத்தில் உழை என்னும் இனத்து மான் உழுந்தின் முதிர்ந்த காய்களை மேயும். அதைப் பார்த்தும் அவர் இல்லம் திரும்பவில்லை. என் நெஞ்ச நோய்க்கு அவர் வருகை அன்றி வேறு மருந்து இல்லை" என்று தலைவி வருந்துவதாக பாடல் உள்ளது.
  • தலைவி தலைவனை 'அன்னையும் அத்தனும்' (தாயும் தந்தையும்) அவன்தான் என்கிறாள்.
  • தோழி தலைவனைப் பழித்துக் கூறித் தலைவியோடு விளையாடுகிறாள். தோழி பழித்தது நகைவிளையாட்டு என்று சொல்லித் தலைவி மகிழ்கிறாள். தோழி தலைவனைப் பழித்ததை தலைவி கடிகிறாள்.
  • "கோழி 'குக்கூ' என்றது. உடனே என் மனம் 'துட்கு' என்றது. காரணம், நாளை வாள் போல் அறுத்துக்கொண்டு விடியும் வைகறை வந்துவிட்டதே! அவர் வருவாரோ, மாட்டாரோ? என்று என் மனம் ஏங்குகிறது." என்று தலைவி ஏங்குவதாக பாடல் உள்ளது.
  • தலைவன் வந்தான். தலைவியை அவனுடன் சேர்த்து வைப்பதாக தோழி ஒப்புக்கொண்டாள். தலைவி மறுத்துச் சொல்வதாக பாடல் உள்ளது.
  • "நம் நெஞ்சு நம்மைப் பிரிந்துவிட்டது. நம் இல்லத்துக்குப் போய்விட்டது. நமக்கும் நம் நெஞ்சுக்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. நாம் இங்கே இடிபோலப் புலி உருமும் மலையில் இருக்கிறோம். நம் மனம் அங்கே போய் என்ன செய்கிறது?" என பொருள்தேடி முடிந்தபின் தேரில் இல்லம் மீளும் தலைவன் தன் தேர்பாகனிடம் சொல்வதாக பாடல் உள்ளது.
பிற
  • பாண்டிய நாடு: பாண்டிய நாட்டின் செல்வம், அணிகலன்கள் அணியும் விருப்பமுள்ள மக்கள், பொற்கொல்லர்கள், பவள வடிவில் அமைந்த பொற்காசு மாலை பற்றிய செய்திகள் உள்ளன.
  • உவமை: பொற்கொல்லர் காசு மாலையை செய்து கொண்டிருந்த காட்சியை கிளி ஒன்று வேப்பம்பழத்தை வாயில் வைத்துக் கொண்டிருந்த காட்சியோடு ஒப்பிடுகிறார்.
  • சகுனம் பற்றிய நம்பிக்கை: காட்டில் வாழும் ஆண் ஓதி (ஓதி: ஓணான் வகையில் ஒன்றான பச்சோந்தி) தன் பெண் ஓதியை அழைக்கப் போடும் சத்தத்தை நல்ல புள்(சகுனம்) என்று தமிழ்ச்சமூகம் கருதிய செய்தி உள்ளது.

பாடல் நடை

  • அகநானூறு: 46

சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று,
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல்,
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து,
வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம்
கூறேம். வாழியர், எந்தை! செறுநர்
களிறுடை அருஞ் சமம் ததைய நூறும்
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க;
சென்றி, பெரும! நிற் தகைக்குநர் யாரோ?

  • புறநானூறு: 306

களிறுபொரக் கலங்கு, கழன்முள் வேலி,
அரிதுஉண் கூவல், அங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது;
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும்
ஒ .. .. .. .. .. .. வேந்தனொடு,
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே.

  • குறுந்தொகை: 32

காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலோடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.

  • குறுந்தொகை: 67

"வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல வொருகாசு ஏய்க்கும்"

  • குறுந்தொகை: 68

பூழ்க்கா லன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும்
அரும்பனி அற்சிரந் தீர்க்கும்
மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே.

  • குறுந்தொகை: 93

"நன்னலம் தொலைய நலம்மிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரையல்"

  • குறுந்தொகை: 96

அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு
யானெவன் செய்கோ என்றி யானது
நகையென உணரேன் ஆயின்
என்னா குவைகொல் நன்னுதல் நீயே.

  • குறுந்தொகை: 140

வேதின வெரிநின் ஓதிமுது போத்து
ஆறுசெல் மாக்கள் புட்கொளப் பொருந்தும்
சுரனே சென்றனர் காதலர் உரனழிந்து
ஈங்கியான் தாங்கிய எவ்வம்
யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே.

  • குறுந்தொகை: 157

குக்கூ வென்றது கோழி அதன்எதிர்
துட்கென் றன்றென் தூய நெஞ்சம்
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.

  • குறுந்தொகை: 202

நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்
இன்னா செய்தல் நோமென் னெஞ்சே.

  • குறுந்தொகை: 237

அஞ்சுவ தறியா தமர்துணை தழீஇய
நெஞ்சுதப் பிரிந்தன் றாயினும் எஞ்சிய
கைபிணி நெகிழின்அ தெவனோ நன்றும்
சேய வம்ம இருவா மிடையே
மாக்கடல் திரையின் முழங்கி வலனேர்பு
கோட்புலி வழங்குஞ் சோலை
எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே.

இணைப்புகள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Jan-2023, 09:16:04 IST