அமுதன் அடிகள்
அமுதன் அடிகள் (டாக்டர் அமுதன் அடிகள்; முனைவர் அமுதன் அடிகள்) (பிறப்பு: ஏப்ரல் 18, 1943), கத்தோலிக்கச் சமயக் குரு, இறைப் பணியாளர். எழுத்தாளர், இதழாசிரியர். பல்வேறு சமய, இலக்கிய, சமூக, மதநல்லிணக்க மாநாடுகளில் பங்கேற்றார்.
பிறப்பு, கல்வி
அமுதன் அடிகள், ஏப்ரல் 18, 1943 அன்று, இன்றைய தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலில் ஜெபமாலை ஃபர்னாண்டோ - அமிர்தசீலி பிஞ்ஞேயிரோ இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்விக்குப் பின் ரோம் நகரின் உர்பன் பல்கலைக் கழகத்தில் பயின்று முதுகலை மெய்யியல் (1965), முதுகலை மறையியல் (1969) பட்டங்களைப் பெற்றார். மில்வாக்கி (அமெரிக்கா) மார்க்கெட் பல்கலைக் கழகத்தில் முதுகலை இதழியல் (1975) முதுகலை உளவியல் (1977) பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் (1987) பெற்றார்.
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், 'வள்ளலார் காட்டும் ஆன்ம நேயம்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். தனிப்பட்ட முறையில் வீரமாமுனிவர் பற்றிய ஆய்வினை மேற்கொண்டார்.
ஆங்கிலம், லத்தீன், இத்தாலி, ஃபிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், போர்ச்சுக்கீஸ் போன்ற மொழிகளைக் கற்றார். தமிழ், ஆங்கிலம், இத்தாலிய மொழிகளில் சொற்பொழிவாற்றவும், பிற மொழிகளில் உரையாடவும் திறன் பெற்றவர்.
ஆன்மிகம்
அமுதன் அடிகள், தஞ்சை மறைமாவட்டக் குருவாக அக்டோபர் 1, 1970-ல் ஆயர் மேதகு தாமஸ் ஃபர்னாண்டோவால் திருநிலைப் படுத்தப்பட்டார். தஞ்சை மறை மாவட்டம், திருச்சி, வேளாங்கண்ணி, ஆகிய இடங்களில் ஆலயப் பணிகளை மேற்கொண்டார். தொடர்ந்து இறைப்பணியாற்றினார். தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
அமுதன் அடிகள், பல நாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் சமய, இலக்கிய, வரலாற்றுக் கட்டுரைகளை எழுதினார். தஞ்சையின் முதல் ஆயர் மேதகு சுந்தரம் ஆண்டகையின் சிறப்பை 'நெஞ்சில் நிறைந்தவர்' எனும் தலைப்பில் நூலாக எழுதினார். கத்தோலிக்கரும், நீதிக் கட்சியின் முன்னணித் தலைவருமான ஏ.டி. பன்னீர் செல்வத்தின் வாழ்க்கையைத் 'தமிழர் செல்வம்' என்ற தலைப்பில் நூலாக எழுதி வெளியிட்டார். குன்றக்குடி அடிகளாருடன் தான் கொண்டிருந்த நட்பை 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற தலைப்பில் நூலாக வெளிக் கொணர்ந்தார். தனிநாயகம் அடிகள், வீரமாமுனிவர் போன்றோர் பற்றி நூல்களை எழுதி வெளியிட்டார்.
மேடையுரை
அமுதன் அடிகள், தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில், ஹென்ட்ரிக் ஹென்ட்ரிகஸ் பாதிரியாரின் மொழிபெயர்ப்புகள் குறித்த கட்டுரையை வாசித்தார். கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில், 'கிறிஸ்தவம் வளர்த்த தமிழ்' என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்தார். சிகாகோ உலகத் தமிழ் மாநாட்டில் அந்தாம் தே ப்ரொய்ன்தா அடிகளின் 'தமிழ் அகர முதலி' பற்றிய கட்டுரையை அளித்தார். சமய, இலக்கிய, சமூக, மதநல்லிணக்க மாநாடுகளில், பல்சமயத் தலைவர்கள் முன்னிலையிலும் அறிஞர்கள் முன்னிலையிலும் சொற்பொழிவாற்றினார்.
வானொலி
அமுதன் அடிகள், வாடிகன் வானொலியில் தமிழ் அறிவிப்பாளராகப் பணியாற்றினார்.
அமைப்புச் செயல்பாடுகள்
அமுதன் அடிகள், சமயப் பணிக்காகவும் தமிழ்ப் பணிக்காகவும் உலகின் பல நாடுகளுக்குப் பயணித்தார். தனிநாயக அடிகளாரின் நூற்றாண்டு விழாக் குழுவின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று அதனைத் திறம்பட நடத்தினார்.
பொறுப்புகள்
- தமிழ்க் கத்தோலிக்க எழுத்தாளர் பேரவையின் இயக்குநர் (1977)
- திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தின் செயலாளர்
- இந்தியக் கத்தோலிக்க அச்சுத் துறைக் கழகத்தின் உறுப்பினர்
- இந்தியக் கத்தோலிக்க அச்சுத் துறைக் கழகத்தின் தலைவர்
- தமிழக புலவர் குழுவின் துணைத் தலைவர்
இதழியல்
அமுதன் அடிகள் வாடிகனில் அச்சகப் பணிகளை மேற்கொண்டு இதழியலில் அனுபவம் பெற்றார். 'வேளாங்கண்ணிக் குரலொலி 'மற்றும் 'Velankanni Calling' மாத இதழ்களில் (1977 - 1987) ஆசிரியராகப் பணியாற்றினார்.
அறக்கட்டளை
1995-ம் ஆண்டில் அமுதன் அடிகளின் குருத்துவ வெள்ளி விழாவின் போது நிறுவப்பட்ட 'அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை', சாதி சமய இன வேறுபாடு இன்றி சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ரூபாய் 15,000/- பணமுடிப்பும் அமுதன் அடிகள் இலக்கிய விருதும் வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
விருது
- 2008-ம் ஆண்டில், தஞ்சை பிரகதீசுவரர் ஆலயத்தின் நடைபெற்ற சதய விழாவில்இராச இராச சோழ மாமன்னர் விருது
மதிப்பீடு
அமுதன் அடிகள், கத்தோலிக்க சமய குருக்களில் ஒருவர். மதநல்லிணக்க எண்ணத்துடன் பல்வேறு சமய, இலக்கிய, சமூக மாநாடுகளில் பங்கெடுத்தவர். சமய மற்றும் சமூகத் தொண்டுடன் இலக்கியப்பணிகளையும் ஆற்றிவரும் மதகுருவாக அறியப்படுகிறார்.
நூல்கள்
- நெஞ்சில் நிறைந்தவர்
- தமிழர் செல்வம்
- நெஞ்சம் மறப்பதில்லை
- இத்தாலி நாட்டு வித்தகத் தமிழர்
- உலகெல்லாம் தமிழ் முழக்கம் தனிநாயகம் எனும் தமிழ் நாயகம்
- வரலாற்றில் புன்னைக்காயல்
உசாத்துணை
- அமுதன் அடிகள் வாழ்க்கைக் குறிப்பு
- 'அமுதன் அடிகள் வாழ்வும் பணியும்' - தினமணி இதழ் நூல் விமர்சனம்
- அமுதன் அடிகள் கட்டுரைகள் தினமணி இதழ்
- அமுதன் அடிகள் நூல்
- அமுதன் அடிகள் கட்டுரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Nov-2025, 09:07:14 IST