அப்பாண்டைநாதர் உலா
- அப்பாண்டைநாதர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அப்பாண்டைநாதர் (பெயர் பட்டியல்)
அப்பாண்டைநாதர் உலா (16-ம் நூற்றாண்டு), திருநறுங்கொண்டை என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள 23-வது தீர்த்தங்கரராகிய பார்சுவநாதரைப் பாட்டுடைத் தலைவராய்க்கொண்டு பாடப்பட்ட உலா நூல். 625 பாடல்கள் கொண்ட இந்த நூலை இயற்றியவர் அனந்தவிசயர்.
வெளியீடு
அப்பாண்டை நாதர் உலா நூலை, சென்னைப் பல்கலைக்கழகம், நவம்பர் 1974-ல் வெளியிட்டது. இதன் பதிப்பாசிரியர் மு. சண்முகம் பிள்ளை. பொதுப் பதிப்பாசிரியர்: டாக்டர் ந. சஞ்சீவி. அப்பாண்டைநாதர் உலா நூலின் சில பகுதிகளை 1961-ல், மயிலை சீனி வேங்கடசாமி தனது 'நல்லறம்' இதழில் வெளியிட்டார். நூலின் மூலத்தை மட்டும், மு. சண்முகம் பிள்ளை, 1972-ல், தமிழாய்வு இதழின் முதல் தொகுதியில் வெளியிட்டார்.
தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் தொகுத்து, மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்ட சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி - 6-ல், அப்பாண்டைநாதர் உலா நூல் இடம்பெற்றது.
ஆசிரியர் குறிப்பு
அப்பாண்டைநாதர் உலாவை இயற்றியவர் அனந்தவிசயர். இவரைப் பற்றிய பிற விவரங்களை அறிய இயலவில்லை. இவரது காலம் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி.
நூல் அமைப்பு
உலா என்னும் சிற்றிலக்கிய வகைமையைச் சேர்ந்த அப்பாண்டைநாதர் உலா உலா இலக்கியங்களுக்குரிய கலிவெண்பாவால் 620 கண்ணிகள் கொண்டு பாடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் இரு காப்பு வெண்பாக்களும் இறுதியில் நூற்பயன் உரைக்கும் மூன்று வெண்பாக்களும் இடம்பெற்றன. அருகப்பெருமான் காப்புடன் நூல் தொடங்குகிறது. அருகதேவனின் புகழ்மாலை, தீர்த்தங்கரரின் திருவடிப்போற்று, அப்பாண்டைநாதர் புகழ்ச்சி ஆகியவற்றை அடுத்து அவையடக்கப் பகுதி அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கலைமகள் வாழ்த்து, அய்யனார் வாழ்த்து, இசக்கியம்மை வாழ்த்து, மாமுனிவர் போற்று ஆகிய பகுதிகள் இடம்பெற்றன.
இருநறுங்கொண்டைத் தலத்தின் சிறப்பு, அதனைச் சூழ அமைந்துள்ள ஜைன ஆலயங்களைப் பற்றிய குறிப்புகள், இயற்கை வளம் பற்றிய செய்திகள் விரிவாக இடம்பெற்றுள்ளன.
உள்ளடக்கம்
அருகப் பெருமான் இந்திர விமானத்தில் எழுந்தருளி, பல்லக்கில் ஏறி, திருத்தேர் மேல் அமர்ந்து வீதியுலா வரும்போது, அதனை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் எழு வகை மகளிரும் காண்கின்றனர். வழக்கமான உலா நூல்களில் தலைவனைக் கண்டு எழு பருவ மகளிரும் காமம் கொள்வது போன்று நூல் அமைக்கப்படும். ஆனால் அப்பாண்டைநாதர் உலா அதற்கு மாறாக இயற்றப்பட்டுள்ளது.
அப்பாண்டை நாதரைத் தரிசித்த ஏழு பருவ மங்கையரும் அவருடைய தெய்வீக ஒளியில் ஈடுபட்டு அவருடைய பெருமையைப் பலவாறு போற்றித் துதிப்பதாக நூல் கூறுகிறது.
பஞ்ச கல்யாணம்
பார்சுவநாதர் கொண்ட ஜந்து கல்யாணங்களைப் பற்றிய செய்திகள், 'பஞ்சகல்யாணம்;' என்ற தலைப்பில் இடம்பெற்றன. அவை,
- தீர்த்தங்கரர் கர்ப்பத்தில் உருவாகும்போது - கர்ப்ப கல்யாணம்
- குழந்தையாய்ப் பிறக்கும்போது - ஜன்ம கல்யாணம்
- துறவு மேற்கொள்ளும்போது - தப கல்யாணம்
- தவத்தைச் செய்யும்போது - ஞான கல்யாணம்
- ஆன்மவிடுதலை அடையும்போது - நிர்வாண கல்யாணம்
தேவர்களின் தலைவனான இந்திரன் பிற தேவர்களோடு சேர்ந்து தீர்த்தங்கரராக உயர்வோருக்குச் செய்யும் சடங்காக இது அறியப்படுகிறது.
பாடல் நடை
தேவாதிதேவன் திருப்புகழ்
திருவுறையு முக்குடைக்கீழ்த் தேவாதி தேவன்
பொருமதனை வென்ற புனிதன் - மருவுபுகழ்
அத்தன் அசோகன் அணியா தழகியான்
சித்தனுல கப்பிர சித்தனே - நித்தனாம்
நித்த கலியாணன் நின்மல நின்னாமன்
கத்தன் கதிகடந்த காவலன் சித்தம்
பகைபிணி பாவம் பழியுமி லா தோன்
செகமூன் றுடையதிகழ் தேசன் - அகமமிழும்
அம்புயத்தின் மேல்கடந்தோன் ஆதிக் கடவுளெங்கள்
சம்பு சினதர்ம சக்கரத்தன் - இன்பமாம்
அனந்ததிரு ஞானத் தனாதிப் பொருளாம்
அனந்த தெரிசனத்த னளன் - அனந்தமாம்
வீரியத்த னாமனந்த வீறு சுகமுடையன்
சரியத்தின் செல்வச் சிறப்புடையன்
போற்றி வாழ்த்து
காமாதி வென்ற கடவு ளடிபோற்றி
பூமாலை பூணாப் பொருள்போற்றி - தாமெண்
குணமுடையாய் போற்றி கோதி லறமே
மணமலிந்த கெந்தாடி மால்போற்றி - குணமார்ந்த
நீதியாய் போற்றி நிலாவெயிலாய் தாள்போற்றி
ஆதியாய் போற்றி அயன்போற்றி - நீதிசேர்
மூவொளியாய் போற்றி மூவா முதலான
பூவலரும் பிண்டிப் பொருள்போற்றி தேவனே
நின்மலனே போற்றி நிராயுத னேபோற்றி
கன்மமிலா ஞானக் கடல்போற்றி - நன்மைப்
பரஞ்சோதி போற்றி பணாமிழலோய் போற்றி
நிரஞ்சனனே போற்றிநிழல் போற்றி - பரவுவினை
போற்றிவரு வாய்போற்றி மன்னுபுக ழாய்போற்றி
போற்றியே போற்றி யெனப்போற்றி
மதிப்பீடு
உலா இலக்கியங்களில் மாறுபட்ட தன்மை கொண்டதாக அப்பாண்டைநாதர் உலா நூல் அமைந்துள்ளது. எழுபருவ மங்கையர் தலைவன்மேல் காதல் கொள்ளும் மரபினை மாற்றி, அவர்கள் எல்லாரும் பக்திநெறியில் ஈடுபட்டு, அருகப் பெருமானைப் பலவிதங்களிலும் புகழ்ந்துரைக்கும் நூலாக அப்பாண்டை நாதர் உலா நூல் அமைந்துள்ளது. தமிழின் உலா நூல்களுள் மிகுதியான கண்ணிகளைக் கொண்ட நூலாக அப்பாண்டைநாதர் உலா நூல் அறியப்படுகிறது.
உசாத்துணை
- அப்பாண்டைநாதர் உலா, சென்னைப் பல்கலைக்கழகம், பதிப்பாசிரியர், மு. சண்முகம் பிள்ளை, பொதுப் பதிப்பாசிரியர், டாக்டர் ந. சஞ்சீவி, தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்
- சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-6; உலா இலக்கியங்கள், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: ஏப்ரல், 2023.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2024, 18:02:54 IST