under review

அனந்தம்மாள்

From Tamil Wiki
அனந்தம்மாள் பாடல்கள் நூல் தொகுப்பு (படம் நன்றி: தினமணி இதழ்)

அனந்தம்மாள் (ஜனவரி 1863 - ஏப்ரல் 17, 1923) கவிஞர். கிறிஸ்தவ மதம் சார்ந்த பல கவிதைகளையும், சமூகம் சார்ந்த பொது வாசிப்புக்குரிய கவிதைகளையும் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

அனந்தம்மாள், ஜனவரி 1863-ல் தஞ்சாவூர் மாவட்டம் பூநன்னிலம் பகுதியிலுள்ள பெரும்பண்ணையூரில், சின்னுடையார் என்பவருக்குப் பிறந்தார். கணவர் இலந்தவனஞ்சேரி அப்பாசாமி உடையார்.

இலக்கிய வாழ்க்கை

அனந்தம்மாள், கவிதை இயற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். பாரதியின் சம காலத்தில் வாழ்ந்த கவிஞராக அறியப்படும் இவர், கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட கவிதைகளைப் படைத்துள்ளார். அவற்றுள் 396-க்கும் மேலான கவிதைகள், 562 பக்கங்கள் கொண்ட நூலாக 'ஸ்ரீமதி அனந்தம்மாள் பாடல்கள்' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இவர் இறந்து பத்தாண்டுக்குப் பின்பே அவை நூலாக வெளிவந்தன.

நூல் அமைப்பு

அனந்தம்மாளின் பாடல்கள் கீழ்க்காணும் வகையில் பத்துப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  • குழந்தை இயேசுப் பாடல்கள்
  • தேவன் பாடல்கள்
  • தேவமாதா பாடல்கள்
  • அரிய பெரியோர்களைப் பற்றிய பாடல்கள்
  • ஹிதோபதேசப் பாடல்கள்
  • பிரலாபப் பாடல்கள்
  • தனநாசன் என்னும் சந்திரகாசன் விலாசப் பாடல்கள்
  • நோவா பேழையும் வேடிக்கைப் பாடல்களும்
  • மெய்ஞ்ஞானக் கும்மிப் பாடல்கள்
  • பழமொழி மாலை

நூல் உள்ளடக்கம்

அனந்தம்மாள் இலக்கண், இலக்கியங்களை முறையாகக் கற்றவர். யாப்பிலக்கணம் அறிந்தவர். எனவே மரபு வழி சிதையாமல், வெண்பா, ஆசிரியப்பா, விருத்தப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, கண்ணி போன்ற வகைமைகளில் தனது பாடல்களை இயற்றினார். கவிதைகளை இயற்றி அவற்றுக்கு ராக, தாள, சுரக் குறிப்புக்களை அளித்தார். பல வகையான ராகங்களின் பெயர்களையும், தாளங்களின் பெயர்களையும் கவிதையின் முகப்பில் குறிப்பிட்டுள்ளார். இது, அக்காலத்தில் வழக்கில் இருந்த முறை.

பழமொழி மாலை

அனந்தம்மாள் பாடல்களோடு மூவாயிரத்திற்கும் மேலான அறக்கருத்துக்களை பழமொழிகளின் வழியாக வெளிப்படுத்தினார். அதற்காக 'பழமொழி மாலை' என்ற நூலை எழுதினார். இந்நூலில் உள்ள பழமொழிகள் அனந்தம்மாளே புனைந்ததாக அறியப்படுகின்றன. ஆண்கள், பெண்கள், சமுதாயம், பொதுவானவை என இவருடைய பழமொழிகளை வகைப்படுத்தலாம். 'கணவன் உரைக்கு இணங்காது இரேல்', 'மங்கையர்க்குப் பங்கம் செய்யாதே', 'தன்மைக் குணம் பெண்மைக்கு அழகு', 'கண் அடக்கம் பெண்ணுக்கு அவசியம்', 'ஏர் ஒழிந்தால் சீர் ஒழியும்', 'கள்ள மனத்தில் முள்ளு முளைக்கும்', 'எத்தொழிலுக்கும் ஏர்தொழில் நன்றாம்' போன்ற அனந்தம்மாளின் பழமொழிக் கருத்துக்கள் குறிப்பிடத்தகுந்தவை.

நோவா பேழையும் வேடிக்கைப் பாடல்களும்

'நோவா பேழை' என்றும் 'நோவா கப்பல்' என்றும் அழைக்கப்படும் நோவா ஊர்தி பற்றி அனந்தம்மாள் 'நோவா பேழையும் வேடிக்கைப் பாடல்களும்' என்ற தலைப்பில் பாடல்களை இயற்றியுள்ளார். அந்தப் பேழையில் உள்ளதாக மரவகைகள், விலங்கினங்கள், பறவைகள், மீன் வகைகள், வித்துக்கள், மணப் பொருள்கள், உணவு வகைகள், நகைகள், எண்ணெய் வகைகள், வீட்டு உபயோக மரச்சாமான்கள், சரக்குகள் எனப் பெரும் பொருட்களின் பட்டியலை அளித்துள்ளார். எண்பதுக்கு மேலான பாம்பு வகைகளின் பெயர்கள், நாற்பதுக்கு மேலான பூச்சிகளில் வகைகள், வண்டு வகைகளின் பெயர்கள், நவதானியப் பெயர்கள், நெல் வகைகளின் பெயர்களை அனந்தம்மாள் குறிப்பிட்டுள்ளார்.

பாடல்

நாட்டார் - நகரத்தார் உரையாடல்

நாட்டாரே நாட்டாரே நாகரிகம் உமக்குண்டோ?
மாட்டை கட்டியடித்து மண்ணை உழுதுண்பீர்
கோட்டு வாசல் அறியீர் கோமானார் வீடறியீர்
ஆட்ட பாட்டம் அறியீர் அங்காடி வீதி அறியீர்

பாட்டுக் கச்சேரி வைத்துப் பாடமாட்டீர் ஆடமாட்டீர்
வீட்டுக்கு வீடு விருந்துண்டு வெறிஏறி
மாட்டை அடித்து மகத்தான விருந்துண்பீர்!
நகர வாசியே கேளும் நாட்டார்க்கென்ன தெரியும்?

எத்தொழிலுக்கும் ஆதி ஏரின் தொழிலாக
அத்தன் கொடுத்திருக்க அறியாமல் பேசுவதேன்?
ஏருழவு தொழில்தான் எல்லோருக்கும் அன்னமிடும்
ஏராளமான இறை வரிகள் தான் கொடுக்கும்

எள்ளு விளைந்து வரும் எழிலான எண்ணெய் ஆகும்
கொள்ளு விளைந்து வரும் குதிரைக்குத் தீனியாகும்
அவரை விளைந்து வரும் அமுதக் கறியாகும்
துவரை விளைந்து வரும் தூய கறியாகும்

மறைவு

அனந்தம்மாள் வட இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலம் முஜபர்ப்பூரில் ஏப்ரல் 17,1923 அன்று காலமானார்.

மதிப்பீடு

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்ப் பாணியில் கவிதைகளைத் தந்தவர் அனந்தம்மாள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த குறிப்பிடத்தகுந்த பெண் கவிஞர்களில் ஒருவராகவும், பெண்கள் தொடர்பான சிந்தனைகளை வளர்த்தெடுத்ததில் முக்கியப் பங்காற்றியவராகவும் அனந்தம்மாள் அறியப்படுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Aug-2025, 07:22:56 IST