அகராதி நிகண்டு
- நிகண்டு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நிகண்டு (பெயர் பட்டியல்)
அகராதி நிகண்டு (பொ.யு. 16-ம் நூற்றாண்டு), தமிழின் நிகண்டு நூல்களுள் ஒன்று. இரேவண சித்தர் என்பவர் இயற்றியதாக அறியப்படுகிறது. 'சூத்திர அகராதி', 'ரேவண சித்தியார் சூத்திரம்' என்ற பெயர்களிலும் இந்நூல் அழைக்கப்படுகிறது. இந்நூலில் 3368 சூத்திரங்கள் அமைந்துள்ளன.
வெளியீடு
அகராதி நிகண்டு நூல், முதன் முதலில், 1920-ம் ஆண்டு செந்தமிழ் இதழில் தொடராக நாராயணையங்காரால் வெளியிடப்பட்டது. 1921-ல், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை வெளியீடாக, நாராயணையங்காரால் பதிப்பிக்கப்பட்டு வெளியானது.
அகராதி நிகண்டின் காலம் பொ.யு. 1594 என்றும் அறியப்படுகிறது. 'அகராதி நிகண்டு' என்ற பெயரில் வேறு சில நூல்களும் உள்ளன.
ஆசிரியர்
அகராதி நிகண்டைத் தொகுத்தவர் இரேவண சித்தர்.
நூல் அமைப்பு
அகராதி நிகண்டு நூலில் 3368 சூத்திரங்கள் அமைந்துள்ளன. அ, க, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என மொழிக்கு முதலில் வரும் பத்து உயிர் வர்க்கங்களும் பத்து தொகுதிகளாக அமைந்துள்ளன. ஒரு பெயரை எடுத்து அதற்கு ஒரு பொருள் முதல் 46 பொருள்கள் வரை உள்ளவற்றை விளக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது. சான்றாக அம்முதல் ஒருபெயர், அம்முதல் இருபெயர், அம்முதல் முப்பெயர் எனத் தொடர்ந்து முறையாக 46 அம்முதல் சொற்களை இந்நூல் காட்டுகிறது.
இந்நூலில் சுமார் 12000 சொற்களுக்கு விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. இந்நூலே தமிழில் அகரவரிசையில் அமைந்த முதல் அகராதியாக அறியப்படுகிறது. வீரமாமுனிவர் 18-ம் நூற்றாண்டில் அமைத்த சதுரகராதிக்கும் 200 ஆண்டுகள் முந்தியது இந்நூல். செய்யுள் வடிவில் அமைந்துள்ளது.
மதிப்பீடு
அகராதி நிகண்டு நூல், தமிழில் வெளிவந்த அகர வரிசையில் அமைந்த முதல் அகராதி நூலாக அறியப்படுகிறது.
உசாத்துணை
- அகராதி நிகண்டு, பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு, முனைவர் மோ.கோ. கோவைமணி, தமிழ் இணைய மின்னூலகம்
- அகராதி நிகண்டு, பிரிட்டிஷ் நூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jul-2024, 20:34:02 IST