under review

ஐராவதம் (எழுத்தாளர்)

From Tamil Wiki
Revision as of 20:10, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எழுத்தாளர் ஐராவதம்
ஐராவதம்

ஐராவதம். (ஆர்.சுவாமிநாதன்: மே, 13, 1945- பிப்ரவரி 4,2014) ( ஆர்.சுவாமிநாதன்) தமிழ் எழுத்தாளர். இலக்கியச் சிற்றிதழ்களில் கவிஞர், எழுத்தாளர், விமர்சகராகச் செயல்பட்டவர். மெல்லிய பகடிகொண்ட கதைகளுக்காக அறியப்பட்டார்.

(பார்க்க ஐராவதம் மகாதேவன் )

பிறப்பு, கல்வி

ஐராவதம், மே, 13, 1945-ல், திருச்சியில் பிறந்தார். இயற்பெயர் ஆர். சுவாமிநாதன். லால்குடியை அடுத்த ஆங்கரையில் பள்ளிப் படிப்பை முடித்தார். பொருளாதாரச் சூழல்களால் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. சென்னையில் உயர் கல்வி பயின்றார்.

தனி வாழ்க்கை

சுவாமிநாதன் இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை செய்தார். இவருக்கு வாரிசுகள் ஏதும் இல்லை.

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

ஐராவதம் தமிழ்ச் சிற்றிதழ் உலகில் செயல்பட்டவர். சென்னையின் இலக்கிய ஆளுமைகளான அசோகமித்திரன் , ந. முத்துசாமி போன்றவர்களுக்கு அணுக்கமானவராக இருந்தார்.

ஐராவதத்தின் முதல் சிறுகதை ’ஒரு வேளை’, ‘நடை’ சிற்றிதழில் வெளியானது. அதனை வாசித்த ந. முத்துசாமி அது குறித்து விமர்சித்து ஐராவதத்திற்குக் கடிதம் எழுதினார். அது ஐராவதத்திற்குத் தொடர்ந்து எழுதும் ஆர்வத்தைத் தந்தது. ‘தீபம்’, ’கசடதபற‘கவனம்’, ‘விருட்சம்’, ‘கணையாழி’ போன்ற இலக்கிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரைகள், விமர்சனக் குறிப்புகளை எழுதினார். அதனைத் தொடர்ந்து எழுத்து, சுதேசமித்திரன், கல்கி, சாவி, தினமணி கதிர், அமுதசுரபி, சுபமங்களா, ஞானரதம், பிரக்ஞை, புதிய பார்வை, குங்குமம் உள்ளிட்ட பல இதழ்களில் இவரது கதை, கவிதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் வெளியாகின. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அழகியசிங்கரின் ‘நவீன விருட்சம்’ சிற்றிதழில் நூல் விமர்சனம், கவிதை, சிறுகதை, கட்டுரைகளை எழுதி வந்தார். உலக சினிமாவின் வரலாற்றைத் தொடராக ‘சித்ராலயா’ இதழில் எழுதியிருக்கிறார். ‘பிரக்ஞை’ இதழில் இவரது மொழிபெயர்ப்புப் படைப்புகள் வெளியாகியுள்ளன.

சிறுகதைகள்

’மாறுதல்’, ‘இந்த மண்ணும் இன்னொரு மண்ணும்', ‘சின்னமீனும் திமிங்கலமும்', ’சாந்தா பார்த்த சினிமா', ’போன அவன் நின்ற அவள்', ’நிலம் நீர் ஆகாயம்', ‘சந்தேகம்’, ‘மன்னி’ போன்றவை இவரது குறிப்பிடத் தகுந்த சிறுகதைகள். ஸ்வராஜ்யா ஆங்கில இதழில் இவரது சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன. தெலுங்கிலும் இவரது சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தீபம் இதழில் இவர் எழுதிய “இந்த மண்ணும் இன்னொரு மண்ணும்”, “போன அவன் நின்ற அவள்” போன்ற சிறுகதைகள் சரஸ்வதி ராம்நாத்தால் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி உள்ளன. “மாறுதல்” என்பது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. “தர்ம கீர்த்தி”, “ஆர் சுவாமிநாதன்”, “வாமனன்” என பல புனை பெயர்களில் எழுதியிருக்கிறார். இவரது கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள், பிற சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து 'ஐராவதம் பக்கங்கள்' என்ற பெயரில் நூலாகக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார் கவிஞர், எழுத்தாளர் அழகியசிங்கர்.

மறைவு

பிப்ரவரி 4, 2014-ல், ஐராவதம் காலமானார்.

இலக்கிய இடம்

ஐராவதம் நேரடியான நடையில் மெல்லிய பகடியுடன் அறிவுலகம் சார்ந்த விமர்சனங்களையும், சமூக அவதானிப்புகளையும் முன்வைத்த எழுத்தாளர். ”நகைச்சுவையுடன் எழுதக் கூடியவர். பேசக்கூடியவர். அவர் உலக அளவில் பல புத்தகங்களைப் படித்திருக்கிறார். சரளமாக மொழிபெயர்ப்பார். பல உலக சினிமாக்களைப் பற்றிய அறிவு அவருக்கு உண்டு [1] ” என்கிறார், ஐராவதத்தின் நண்பரான அழகியசிங்கர். அசோகமித்திரன் தென்றல் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “எனது சமகால எழுத்தாளர்களில் ஜி. சுவாமிநாதன், ஐராவதம் என்ற ஆர். சுவாமிநாதன் என இருவர் என் மனம் கவர்ந்தவர்கள் [2] “ என்று குறிப்பிட்டுள்ளார்.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்பு
  • மாறுதல்
  • கெட்டவன் கேட்டது
  • நாலு கிலோ அஸ்கா

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page