under review

ஹிமானா சையத்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text:  )
No edit summary
Line 103: Line 103:
* [https://puniyameen.blogspot.com/2012/01/blog-post_6423.html டாக்டர் ஹிமானா சையத் நேர்காணல்]
* [https://puniyameen.blogspot.com/2012/01/blog-post_6423.html டாக்டர் ஹிமானா சையத் நேர்காணல்]
* [https://nambikkai.com.my/detail/5620 எழுத்தாளர் ஹிமானா சையத்-அஞ்சலிக் குறிப்பு]  
* [https://nambikkai.com.my/detail/5620 எழுத்தாளர் ஹிமானா சையத்-அஞ்சலிக் குறிப்பு]  
* [[Category:Tamil Content]] [https://www.youtube.com/watch?app=desktop&v=xCyGFMrp4AI&fulldescription=1&client=mv-google&gl=US&hl=en&ab_channel=MohamedAliJinnah டாக்டர் ஹிமானா சையத் வாழ்க்கைப் படங்கள்: யுட்யூப் தளம்]
* [https://www.youtube.com/watch?app=desktop&v=xCyGFMrp4AI&fulldescription=1&client=mv-google&gl=US&hl=en&ab_channel=MohamedAliJinnah டாக்டர் ஹிமானா சையத் வாழ்க்கைப் படங்கள்: யுட்யூப் தளம்]
 
[[Category:Tamil Content]]
{{Finalised}}
{{Finalised}}

Revision as of 18:23, 11 September 2023

எழுத்தாளர், டாக்டர் ஹிமானா சையத்

ஹிமானா சையத் (அ. சையத் இப்ராஹிம்) (ஜனவரி 20, 1947 - பிப்ரவரி 21, 2022) எழுத்தாளர், கவிஞர், இதழாளர், பதிப்பாளர். மருத்துவராகப் பணியாற்றினார். தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் வசித்தார். பொதுவாசிப்புக்குரிய சிறுகதைகளை, நாவல்களை, மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். 'தமிழ் மாமணி' உள்ளிட்ட பட்டங்களும், விருதுகளும் பெற்றார்.

பிறப்பு, கல்வி

ஹிமானா சையத், ரா­ம­நா­த­புரம் மாவட்­டத்தில் உள்ள சித்தார்கோட்டையில், ஜனவரி 20, 1947 அன்று, மல்­லாரி அப்துல் கனி மரைக்­காயர்-உம்மு ஹபீபா தம்­ப­தி­யி­னருக்குப் பிறந்தார். தேவகோட்டையில் உள்ள டி பிரிட்டோ பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். கல்லூரிப் படிப்பை சென்னை லயோலா கல்லூரில் படித்தார். மதுரை மருத்துவக் கல்லூரியில் பயின்று எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஹிமானா சையத், தனது சொந்தக் கிராமமான சித்தார்கோட்டையில் மருத்துவராகப் பணியாற்றினார். பயோனியர் பிஸியோதெரபி கல்லூரியில் பகுதி நேரப் பேராசிரியராகப் பணியாற்றினார். குடும்ப நல ஆலோசகராகச் செயல்பட்டார். சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சித் தொடரில் வசன எழுத்தாளராகப் பணிபுரிந்தார். மனைவி: ஹிமனாபர். இவர்களுக்கு, அப்துல்கனி, உம்மு ஷமீம், வாஸிம்கான் என மூன்று பிள்ளைகள்.

ஹிமானா சையத் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

ஹிமானா சையத் ஜெயகாந்தன், மு. வரதராசன், நாரண துரைக்கண்ணன் ஆகியோரது எழுத்துக்களை வாசித்து இலக்கிய ஆர்வம் பெற்றார். ஹிமானா சையத்தின் முதல் கவிதை, 1964-ல் மறுமலர்ச்சி இதழில் வெளியானது. தொடக்கத்தில் 'சையத் மல்லாரி', 'மல்லாரி சையத்' என்ற பெயர்களில் எழுதினார். திருமணத்திற்குப் பின், மனைவியின் பெயரையே தனது புனை பெயராகக் கொண்டு எழுதினார். முதல் சிறுகதை, ‘தாயே உனக்கு எத்தனை முகங்கள்?’, 1987-ல், மலர்மதி மாத இதழில் வெளிவந்தது. தொடர்ந்து இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் பல இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதினார். தின­கரன், விடி­வெள்ளி, நவ­மணி போன்ற இலங்கை இதழ்களிலும், ஆனந்த விகடன், குங்குமம், கலைமகள், சமரசம், தினத்தந்தி, மணிவிளக்கு, ராணி, முஸ்லிம் முரசு போன்ற பல இதழ்களிலும் ஹிமானா சையத்தின் பல படைப்புகள் வெளியாகின.

படைப்புகள்

ஹிமானா சையத், 650-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 10-க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதினார். 500-க்கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகளைப் படைத்தார். சாலி இளவல், வாசிம் வாப்பா, மறைமகன், கோட்டைச் சித்தன் போன்ற புனைபெயர்களில் இயங்கினார். ஹிமானா சையத், 45-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். ஹிமானா சையத், தனது சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘Mean Time' என்ற ஆங்கில இதழில் வெளியிட்டார். சர்வதேச அளவில் நான்கு சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடத்தினார்.

ஹிமானா சையத்தின் படைப்புகளை ஆய்வு செய்து, பல மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றனர். ஹிமானா சையத் எழுதிய 'ருசி' என்ற சிறுகதைத் தொகுதி, கேரள பல்கலைக் கழகத்தில் 1992 முதல் 1996 வரை முதுகலை பயிலும் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. கேரள மேல்நிலைப்பள்ளி பதினொன்றாம் வகுப்புப் பாடத்திட்டத்தில், ஹிமானா சையத்தின் ‘கோடுகள் கோலங்கள்’ நாவல் இடம் பெற்றது. இலங்கையின் எட்டாம் வகுப்புப் பாடநூலில், ஹிமானா சையத்தின் ‘ஆணிவேர்’ சிறுகதை இடம் பெற்றது. ஹிமானா சையத் மார்க்கக் கல்வி மேடைகளில் முன்னணிப் பேச்சாளராகச் செயல்பட்டார்.

இதழியல்

ஹிமானா சையத், திருச்சியில், 1972-ல் தொடங்கப்பட்ட, நர்கீஸ் என்ற பெண்கள் மாத இதழின் கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார் .

பதிப்பியல்

ஹிமானா சையத், தனது நூல்களை வெளியிடுவதற்காக ‘மல்லாரி பதிப்பகம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார்.

அமைப்புப் பணிகள்

  • ஹிமானா சையத், சித்தார்கோட்டை முஹம்மதியா பள்ளிகளின் தாளாளராகப் பணியாற்றினார்.
  • இந்திய மருத்துவ சங்கத்தின் ராமநாதபுரம் கிளை நிறுவனச் செயலராகப் பணிபுரிந்தார்.
  • ஐக்கிய பொருளாதாரப் பேரவையின் மாவட்டச் செயலராகப் பணியாற்றினார்.
  • மாவட்ட ஷரிஅத் கவுன்சில் உறுப்பினராகப் பணிபுரிந்தார்.
  • சிறப்பு அழைப்பாளராக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், புருனை, சவுதி அரேபியா, தாய்லாந்து, ஹாங்காங் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியுடன் ஹிமானா சையத்.

விருதுகள்

  • இஸ்லாமிய இலக்கியக் கழகம் வழங்கிய தமிழ்மாமணி விருது.
  • ஐயம்பேட்டை பி.ஏ. டிரஸ்ட் அளித்த விருது.
  • பாரத் ஜோதி விருது
  • மில்லினீயம் அச்சீவர் விருது
  • சிறந்த குடிமகன் விருது

மறைவு

டாக்டர் ஹிமானா சையத், பிப்ரவரி 21, 2022 அன்று, தனது 75-ஆம் வயதில் காலமானார்.

நினைவு

டாக்டர் ஆலிஸ், ஹிமானா சையத்தின் சிறுகதைகள் குறித்து ஆய்வு செய்து, ’ஹிமானா சையத்தின் சிறுகதைகள் - ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் நூலாக எழுதினார்.

நன்னூல் பதிப்பகம் மற்றும் மல்லாரி பதிப்பகம் இணைந்து ஆண்டுதோறும், டாக்டர் ஹிமானா சையத் நினைவு சிறுகதைப் போட்டியை நடத்தி வருகிறது.

மதிப்பீடு

ஹிமானா சையத் பொது வாசிப்புக்குரிய பல சிறுகதைகளை எழுதினார். இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை முறையை, சடங்குகளை, பழக்க வழக்கங்களை தனது படைப்புகளில் முன் வைத்தார். மருத்துவத் துறை சார்ந்து ஹிமானா சையத் எழுதிய நூல்கள் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, ஹிமான சையத் எழுதிய மருத்துவக் கேள்வி பதில்கள் தொடர் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இஸ்லாமிய இலக்கியம் சார்ந்து இயங்கிய சல்மா, நாகூர் ரூமி, எஸ். அர்ஷியா, ஹெச்.ஜி. ரசூல் வரிசையில் குறிப்பிடத்தகுந்த ஓர் படைப்பாளியாக ஹிமானா சையத் அறியப்படுகிறார்.

ஹிமானா சையத் நூல்கள்

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • இரு காட்சிகள்
சிறுகதைத் தொகுப்புகள்
  • விருந்து
  • ருசி
  • நாற்று
  • தொடுவானம்
  • பெருநாள் சட்டை
  • சிங்கப்பூர் சேலை
  • மரியம்மா
  • வயசு
  • ஆணிவேர்
  • விடியலை நோக்கி
நாவல்கள்
  • பசுமைப்பூக்கள்
  • புயலில் ஒரு பூ
  • உதவிக்கரங்கள்
  • புரட்சிப் பூக்கள்
  • கோடுகள் கோலங்கள்
  • கண்மணி கண்மணி
  • வெப்ப மூச்சுக்கள்
கட்டுரைத் தொகுப்புகள்
  • ருஷ்தியின் வாழ்வு ஒரு படிப்பினை
  • காயிதேமில்லத்
  • சமுதாய அரங்கம்
  • ஊற்றுக்கண்
மருத்துவ நூல்கள்
  • ஹார்ட் அட்டாக்
  • எச்சரிக்கை எய்ட்ஸ்
  • தலைப்பிரசவம்
  • பொது மருத்துவம் கேள்வி-பதில்

உசாத்துணை


✅Finalised Page