under review

வல்லிக்கண்ணன்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Removed extra blank characters from template paragraphs)
Line 20: Line 20:
பரமகுடியில் பணியாற்றுகையில் வல்லிக்கண்ணனின் முதல் கதை சந்திரகாந்தக்கல் பிரசண்ட விகடன் இதழில் வெளிவந்தது. நவசக்தி, லோகசக்தி, பாரதசக்தி போன்ற இதழ்களில் 1939-ல் இவரின் எழுத்துக்கள் அச்சில் வெளிவந்தபோது வல்லிக்கண்ணன் என்ற புனைப்பெயரை தனக்குச் சூட்டிக்கொண்டார். காரைக்குடியில் இருந்து வெளிவந்த 'இந்திரா’ என்ற மாத இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'தெருக்கூத்து’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது.  
பரமகுடியில் பணியாற்றுகையில் வல்லிக்கண்ணனின் முதல் கதை சந்திரகாந்தக்கல் பிரசண்ட விகடன் இதழில் வெளிவந்தது. நவசக்தி, லோகசக்தி, பாரதசக்தி போன்ற இதழ்களில் 1939-ல் இவரின் எழுத்துக்கள் அச்சில் வெளிவந்தபோது வல்லிக்கண்ணன் என்ற புனைப்பெயரை தனக்குச் சூட்டிக்கொண்டார். காரைக்குடியில் இருந்து வெளிவந்த 'இந்திரா’ என்ற மாத இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'தெருக்கூத்து’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது.  


[[பாரதி,]] [[பாரதிதாசன்]], [[புதுமைப்பித்தன்]] ஆகியவர்களை வல்லிக்கண்ணன் தன் முன்னோடிகளாகக் கொண்டவர். பாரதிதாசனைப் பற்றி முதலில் விமர்சன நூல் எழுதியவர் வல்லிக்கண்ணன்தான். நையாண்டி பாரதி, கோரநாதன், மிவாஸ்கி, வேதாந்தி, பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம் போன்ற பெயர்களில் எழுதியிருக்கிறார்.  
[[பாரதி,]] [[பாரதிதாசன்]], [[புதுமைப்பித்தன்]] ஆகியவர்களை வல்லிக்கண்ணன் தன் முன்னோடிகளாகக் கொண்டவர். பாரதிதாசனைப் பற்றி முதலில் விமர்சன நூல் எழுதியவர் வல்லிக்கண்ணன்தான். நையாண்டி பாரதி, கோரநாதன், மிவாஸ்கி, வேதாந்தி, பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம் போன்ற பெயர்களில் எழுதியிருக்கிறார்.


வல்லிக்கண்ணன் தொடக்கம் முதல் சிறுகதைகள் எழுதினார். வசனகவிதையில் ஈடுபாடுகொண்டு தொடர்ந்து எழுதினார். வசனகவிதை எழுத்து இதழ் வழியாக புதுக்கவிதை என உருமாற்றம் அடைந்து நவீன கவிதையாக ஆனபோது அதன் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.  
வல்லிக்கண்ணன் தொடக்கம் முதல் சிறுகதைகள் எழுதினார். வசனகவிதையில் ஈடுபாடுகொண்டு தொடர்ந்து எழுதினார். வசனகவிதை எழுத்து இதழ் வழியாக புதுக்கவிதை என உருமாற்றம் அடைந்து நவீன கவிதையாக ஆனபோது அதன் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.  

Revision as of 05:49, 19 November 2022

வல்லிக்கண்ணன்
வல்லிக்கண்ணன்

வல்லிக்கண்ணன் (நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிய எழுத்தாளர். இதழாளர், இலக்கிய விமர்சகர், இலக்கிய வரலாற்றாளர் என்னும் தளங்களில் நீண்டநாட்கள் பணியாற்றினார். தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

வல்லிக்கண்ணனின் இயற்பெயர் ரா.சு. கிருஷ்ணசாமி. சொந்த ஊர் நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம். வல்லிக்கண்ணன் நவம்பர் 12, 1920-ல் நாங்குநேரி அருகே உள்ள திசையன்விளையில் ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, மகமாயி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். வல்லிக்கண்ணின் தந்தை அரசுப் பணியில் உப்பளங்களை ஆய்வு செய்யும் ஆய்வாளராக இருந்தார். ஒரு வயது வரை திசையின்விளையில் வாழ்ந்தார். இரண்டாவது வயதில் தூத்துக்குடியிலும் மூன்றாவது வயதில் ஒட்டப்பிடாரத்திலும் நான்காவது வயதில் கோவில்பட்டியிலும் வசித்தார். ஐந்தாவது வயதில் கோவில்பட்டியில் உள்ள ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சில மாதங்கள் கல்வி பயின்றார். 1926 முதல் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள பெருங்குளம் என்ற ஊரில் மூன்றாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். நான்காம் வகுப்பை திருநெல்வேலி மந்திரமூர்த்தி உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். பத்தாம் வகுப்பு வரை பாளையங்கோட்டை தூய சவேரியர் உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். பரமக்குடியில் அரசுப்பணி புரிந்த காலக்கட்டத்தில் டைப்ரைட்டிங்கில் 'லோயர்’ தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியையும் கற்றார்.  

வல்லிக்கண்ணன்

தனிவாழ்க்கை

இராமநாதபுரம் மாவட்டம், பரமகுடியில் விவசாய டிமான்ஸ்ட்ரேட்டர் ஆஃபீசில் ஸ்டோர்கீப்பர் என்ற அரசுப் பணியில் சேர்ந்து சிலகாலம் பணியாற்றினார். இலக்கியத்தின் மேல் கொண்ட விருப்பத்தினால் அரசுப்பணியில் இருந்து விலகினார். தன் சொந்த ஊர் பெயரின் ஒரு பகுதியான  வல்லியையும், தன் பெயரிலுள்ள கிருஷ்ணனின் இன்னொரு பெயரான கண்ணனையும் இணைத்து "வல்லிக்கண்ணன்" என்ற புனைப்பெயரோடு முழுநேர இலக்கியப் பணிக்குள் நுழைந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. பல்வேறு இதழ்களில் பணியாற்றிய வல்லிக்கண்ணன் தன் 1952 முதல் தன் தமையன் அசோகனுடனும் பின்னர் தம்பி கோமதிநாயகத்துடன் வாழ்ந்தார்.

இதழியல்

வல்லிக்கண்ணன்

திரு.வி.கல்யாண சுந்தரனார் நடத்தி வந்த 'நவசக்தி’ என்ற வார இதழின் உதவி ஆசிரியராகவும் ம.கி.திருவேங்கடம் நடத்தி வந்த லோகசக்தி, பாரத சக்தி என்ற இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றிக் கொண்டிருந்த சக்திதாசன் சுப்பிரமணியன் என்ற பத்திரிக்கையாளர் இதழ்களுக்குச் சந்தா சேர்க்க சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது பரமக்குடிக்கு வந்து வல்லிக்கண்ணனுடன் தங்கினார். அவர் வல்லிக்கண்ணனின் மனதில் பத்திரிக்கையாளன் ஆகவேண்டும் என்னும் ஆசையை உருவாக்கினார். 1941-ல் பரமகுடியில் இருந்து மாற்றலாகி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் என்ற ஊருக்கு வந்தார். அரசுப் பணியில் இருந்து கொண்டு கதைகளை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதை கண்டித்து அவருடைய மேலதிகாரி ஆணையிடவே அரசுப் பணியை ராஜினாமா செய்தார். ராஜவல்லி புரத்தில் இருந்துகொண்டு 'இதய ஒலி’ என்ற கையெழுத்துப் பத்திரிகையைத் தயாரித்தார்.

1941-ல் திருநெல்வேலியில் 'நெல்லை வாலிபர்கள் சங்கம்’ என்ற அமைப்பை ஆரம்பித்தார்.  அதில் தன் வாழ்நாள் நண்பரான தி.க.சிவசங்கரன்-ஐ சந்தித்தார். மே 24, 1942 அன்று வல்லிக்கண்ணன் இதழ்களில் பணியாற்றும் ஆர்வத்துடன் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு நடந்தே பயணமானார். வேலை கிடைக்காமல் திரும்பவும் திருநெல்வேலிக்கு வந்தார். புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த 'திருமகள்’ என்ற பத்திரிகையின் ஆசிரியரான ரா.சி.சிதம்பரம் அழைப்பை ஏற்று 1943 ஜனவரி மாதக் கடைசியில் புதுக்கோட்டை சென்று இதழில் சேர்ந்தார். திருமகள் சில மாதங்களில் நின்றுவிட்டது. வல்லிக்கண்ணன் கோவையில் பி.எஸ்.செட்டியார் நடத்திய சினிமா உலகம் இதழில் பணியாற்றினார். 1943 டிசம்பரில் சென்னை சென்று நவசக்தியில் சேர்ந்தார்.

அ.வெ.ர.கி. செட்டியார் அழைப்பின் பேரில் துறையூரில் இருந்து வெளிவரும் கிராம ஊழியன் பத்திரிக்கையில் 1944 பிப்ரவரி இறுதியில் வேலைக்குச் சேர்ந்தார். கிராம ஊழியன் இலக்கிய இதழாக வெளிவந்தது. அதன் ஆசிரியர் திருலோகசீதாராம், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், கி.ரா.கோபாலன் ஆகியோர் அதில் எழுதினார்கள். கிராம ஊழியன் பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பில் இருந்த திருலோகசீதாராம் அதிலிருந்து விலகி திருச்சியில் இருந்து புதிதாக வெளிவந்த 'சிவாஜி’ என்ற இதழில் சேர்ந்தபோது கிராம ஊழியன் இதழின் ஆசிரியர் பொறுப்பை வல்லிக்கண்ணன் ஏற்றுக் கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குப்பின்  ஹனுமான் வார இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். எழுத்து இதழுடனும் பின்னர் நா.பார்த்தசாரதியின் தீபம் இதழுடனும் இணைந்து பணியாற்றினார். 1952-க்குப்பின் வல்லிக்கண்ணன் எந்த இதழிலும் முழுநேர ஊழியராகப் பணியாற்றவில்லை.

அச்சு இதழ்களின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகும் 'இதய ஒலி’ என்ற கையெழுத்துப் பத்திரிக்கையையும் வல்லிக்கண்ணன் தொடர்ந்து நடத்திக் கொண!டிருந்தார். 1946-ல் ஸ்ரீரங்கத்தில் கையெழுத்துப் பத்திரிக்கையின் மாநாடு நடைபெற்றபோது அம்மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக வல்லிக்கண்ணன் செயல்பட்டார். இதய ஒலி உட்பட 50-க்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் கணகாட்சியில் வைக்கப்பட்டன.

இலக்கியப்பணி

பரமகுடியில் பணியாற்றுகையில் வல்லிக்கண்ணனின் முதல் கதை சந்திரகாந்தக்கல் பிரசண்ட விகடன் இதழில் வெளிவந்தது. நவசக்தி, லோகசக்தி, பாரதசக்தி போன்ற இதழ்களில் 1939-ல் இவரின் எழுத்துக்கள் அச்சில் வெளிவந்தபோது வல்லிக்கண்ணன் என்ற புனைப்பெயரை தனக்குச் சூட்டிக்கொண்டார். காரைக்குடியில் இருந்து வெளிவந்த 'இந்திரா’ என்ற மாத இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'தெருக்கூத்து’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது.

பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் ஆகியவர்களை வல்லிக்கண்ணன் தன் முன்னோடிகளாகக் கொண்டவர். பாரதிதாசனைப் பற்றி முதலில் விமர்சன நூல் எழுதியவர் வல்லிக்கண்ணன்தான். நையாண்டி பாரதி, கோரநாதன், மிவாஸ்கி, வேதாந்தி, பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம் போன்ற பெயர்களில் எழுதியிருக்கிறார்.

வல்லிக்கண்ணன் தொடக்கம் முதல் சிறுகதைகள் எழுதினார். வசனகவிதையில் ஈடுபாடுகொண்டு தொடர்ந்து எழுதினார். வசனகவிதை எழுத்து இதழ் வழியாக புதுக்கவிதை என உருமாற்றம் அடைந்து நவீன கவிதையாக ஆனபோது அதன் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.

கோவையில் சினிமா உலகம் பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டிருந்த எஸ்.பி. கிருஷ்ணன் என்பவரும் சலவைக்கடைக்காரர் ஒருவரும் சேர்ந்து கூட்டாக ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனத்தைத் துவங்கினார்கள். அவர்கள் தான் முதன்முதலில் வல்லிக்கண்ணனின் 12 சிறுததைகள் அடங்கிய தொகுப்பை ”கல்யாணி முதலிய கதைகள்" என்ற பெயரில் 1944-ல் நூலாகக் கொண்டு வந்தனர். திருநெல்வேலியைச் சேர்ந்த எஸ்.சிதம்பரம் என்பவர் ”கவிக்குயில் நிலையம்" என்ற பெயரில் ஒரு புத்தக நிலையத்தை ஆரம்பித்தார். 1945-ல் அவர் வல்லிக்கண்ணனின் சிறுகதைத் தொகுப்பான நாட்டியக்காரியை வெளியிட்டார்.

வல்லி

திரைப்படம்

'லைலா மஜ்னு’ திரைப்படத்தில் சில காட்சிகளுக்கு வசனம் எழுதினார்.

மறைவு

வல்லிக்கண்ணன் நவம்பர் 9, 2006-ல் தன் 85-வது வயதில் காலமானார்.

நினைவுநூல்கள் வாழ்க்கை வரலாறுகள்

  • வல்லிக்கண்ணன் (இந்திய இலக்கிய சிற்பிகள்) கழனியூரன்

மதிப்பீடு

வல்லிக்கண்ணனின் இலக்கியப் பங்களிப்பு முதன்மையாக அவர் ஓர் இலக்கிய ஆளுமை என்பதில் உள்ளது. இலக்கியத்திற்காகவே வாழ்க்கையை முழுமையாகச் செலவிட்டவர். ஆகவே அவர் தன் முதுமையில் சிற்றிதழ் சார்ந்த நவீன இலக்கியத்தின் ஓர் அடையாளமாக ஆனார். இளைய தலைமுறையினரை வாழ்த்தி ஊக்குவித்தார். நீண்டகாலம் இலக்கிய இதழ்களுடன் தொடர்புகொண்டிருந்தவர் ஆதலால் அவர் எழுதிய எழுத்து சி.சு.செல்லப்பா, சரஸ்வதி காலம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழில் சிறுபத்திரிகைகள் போன்ற வரலாற்று நூல்கள் சிற்றிதழ்களில் வளர்ந்த நவீன இலக்கியத்தின் ஆவணப்பதிவுகளாக ஆயின. அவருடைய சிறுகதைகளில் பல எளிமையான அழகு கொண்டவை. தமிழ் புதுக்கவிதை வடிவத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவராகவும் அவர் கருதப்படுகிறார்.

"வல்லிக்கண்ணனுக்கு இப்போது வயது எண்பது ஆகிறது. அவரது இலக்கிய வாழ்க்கை வணங்கத் தக்கதும், வழிபடத் தக்கதும் ஆகும். அவரைச் சுற்றி வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நேரினும் அந்த மாற்றங்களை, அறிவாலும் சிந்தனையாலும் ஆக்கபூர்வமாய் வெளியிடும் திறனாலும் தவிர, தன் அளவில் எத்தகைய பாதிப்புகளுக்கும் ஆளாகாத ஓர் ஆத்ம யோகி அவர்" என்று   வல்லிக்கண்ணனுக்கு 80 வயதானபோது வெளியிடப்பட்ட மலரில் ஜெயகாந்தன் கூறியுள்ளார்.

விருதுகள்

  • "புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்" கட்டுரை நூல் 1978-க்கான சாகித்திய அகாடமி விருதைப் பெற்றது.
  • "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதை நூல் பரிசைப் பெற்றது.

நூல்கள்

கவிதை
  • அமர வேதனை - 1974
சிறுகதை
  • கல்யாணி முதலிய கதைகள் - 1944
  • நாட்டியக்காரி - 1946
  • ஓடிப் போனவள் கதை (சொக்கலிங்கம்) - 1946
  • மத்தாப்பு சுந்தரி - 1948
  • வல்லிக்கண்ணன் கதைகள் - 1954
  • ஆண்சிங்கம் - 1964
  • வாழ விரும்பியவன் - 1975
  • அருமையான துணை - 1991
  • வல்லிக்கண்ணன் கதைகள் (வேறு தொகுப்பு) - 1991
  • மனிதர்கள் - 1991
  • சுதந்திரப் பறவைகள் - 1994
  • பெரிய மனுஷி (பால புத்தக வரிசை) (பல மொழிகளில்) - 1996
  • வல்லிக்கண்ணன் கதைகள் (வேறு + 1 கதைகள்) - 2000
  • தோழி நல்ல தோழி தான் - 2000
  • வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள் - 2002
  • புண்ணியம் ஆம் பாவம் போம் சிறுகதைகள் - 2002
  • வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் - 2003
நாவல்
  • குஞ்சாலாடு (நையாண்டி பாரதி) - 1946
  • ராதை சிரித்தாள் - 1948
  • ஒய்யாரி - 1947
  • அவள் ஒரு எக்ஸ்ட்ரா - 1949
  • அத்தை மகள் - 1950
  • முத்தம் - 1951
  • செவ்வானம் (கோரநாதன்) - 1951
  • குமாரி செல்வா - 1951
  • சகுந்தலா - 1957
  • விடிவெள்ளி - 1962
  • அன்னக்கிளி - 1962
  • வசந்தம் மலர்ந்தது - 1965
  • வீடும் வெளியும் - 1967
  • ஒரு வீட்டின் கதை - 1979
  • நினைவுச்சரம் - 1980
  • அலைமோதும்கடலோரத்தில் - 1980
  • இருட்டு ராஜா - 1985
  • மன்னிக்கத் தெரியாதவர் - 1991
  • துணிந்தவன் - 2000
நாடகம்
  • நாசகாரக் கும்பல் (நையாண்டி பாரதி) - 1948
  • விடியுமா - 1948
கட்டுரைகள்
  • உவமைநயம் - 1945
  • கோயில் களை மூடுங்கள் (கோரநாதன்) - 1946
  • ஈட்டிமுனை (கோரநாதன்) - 1946
  • அடியுங்கள் சாவுமணி (மிவாஸ்கி) - 1947
  • சினிமாவில் கடவுள்கள் (கோரநாதன்) - 1947
  • கொடு கல்தா (கோரநாதன்) - 1948
  • எப்படி உருப்படும்? (கோரநாதன்) - 1948
  • கேட்பாரில்லை (கோரநாதன்) - 1949
  • அறிவின் கேள்வி (கோரநாதன்) - 1949
  • விவாகரத்து தேவைதானா? - 1950
  • நல்ல மனைவியை அடைவது எப்படி? - 1950
  • கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா? - 1950
  • கல்யாணம் இன்பம் கொடுப்பதா? துன்பத்தைக் கெடுப்பதா? - 1950
  • முத்துக்குளிப்பு - 1965
  • வல்லிக்கண்ணன் கட்டுரைகள் - மித்ர - 2004
  • வாசகர்கள் விமர்சகர்கள் - 1987
  • மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள் - 1987
இலக்கிய வரலாறு
  • பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை - 1981
  • சரஸ்வதி காலம் - 1986
  • எழுத்தாளர்கள் பத்திரிகைகள் அன்றும் இன்றும் - 1986
  • தமிழில் சிறு பத்திரிகைகள் - 1991
  • தீபம் யுகம் - 1999
  • புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - 1977
வாழ்க்கை வரலாறு
  • புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை) - 1987
  • ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் - 1995
  • எழுத்து சி.சு. செல்லப்பா - 2002
  • எழுத்துலக நட்சத்திரம் (தீபம்) நா. பார்த்த சாரதி - 2005
  • தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள் - 2003
  • நம் நேரு - 1954
  • விஜயலஷ்மி (வரலாறு) - 1954
தன் வரலாறு
  • வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் - 1988
  • காலத்தின் குரல் (60 கேள்விகளுக்கு பதில்) - 1980
  • வல்லிக்கண்ணன் கடிதங்கள் - 1999
  • வாழ்க்கைச் சுவடுகள் (தன் வரலாறு) - 2001
  • நிலைபெற்ற நினைவுகள் - 2005
மொழி பெயர்ப்பு
  • டால்ஸ்டாய் - 1956
  • கடலில் நடந்தது (கார்க்கி கட்டுரைகள்) - 1956
  • சின்னஞ்சிறுபெண் (கார்க்கி கட்டுரைகள்) - 1957
  • கார்க்கி கட்டுரைகள் - 1957
  • தாத்தாவும் பேரனும் - 1959
  • ராகுல் சாங்கிருத்யாயன் - 1986
  • ஆர் மேனியன் சிறுகதைகள் - 1991
  • சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் - 1995
  • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா - 2005

உசாத்துணை


✅Finalised Page