first review completed

யூசுப் ஜுலைகா

From Tamil Wiki
Revision as of 11:17, 19 September 2023 by Madhusaml (talk | contribs)
யூசுப் ஜுலைகா காப்பியம்

யூசுப் ஜுலைகா (1957) இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. திருக்குர்ஆனில் இடம்பெறும் யூசுப் நபி (அலை) பற்றியும் அவர் மீது விருப்புற்ற ஜுலைகா பற்றியும் கூறும் நூல். இதனை இயற்றியவர் சாரண பாஸ்கரன் என்னும் டி.எம். அஹமது. இந்நூல் 66 இயல்களையும் 864 பாடல்களையும் கொண்டது.

பிரசுரம், வெளியீடு

யூசுப் ஜுலைகா நூலை, யுனிவர்சல் பப்ளிஷஸ் நிறுவனம் 1957-ல், வெளியிட்டது. இந்நூலைத் தற்போது மீண்டும் மறுபதிப்புச் செய்துள்ளது.

ஆசிரியர் குறிப்பு

யூசுப் ஜுலைகா நூலை இயற்றியவர் சாரண பாஸ்கரன். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூரில், ஏப்ரல் 20, 1923-ல் பிறந்தார். இயற்பெயர் டி.எம். அஹமது. சாரண பாஸ்கரன் என்ற பெயரைச் சூட்டியவர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

'மணியோசை', 'சாபம்', 'சங்கநாதம்', 'நாடும் நாமும்', 'மணிச்சரம்', 'பிரார்த்தனை', 'சிந்தனைச்செல்வம்', 'இதயக்குரல்' போன்றவை சாரண பாஸ்கரன் இயற்றிய பிற கவிதை நூல்கள். 'கவிஞர் திலகம்' என்று இவர் போற்றப்பட்டார்.

காப்பியத்தின் கதை

இறைத்தூதர் நபி யூசுப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறே யூசுப் ஜுலைகா காப்பியம். இவரது வரலாறு விவிலியத்திலும் உள்ளது. பின்னர் தோன்றிய குர்ஆனிலும் இவரது வரலாறு இடம்பெற்றுள்ளது. யூசுப்பின் தந்தை யாகூப். தாய் ராஹிலா. இஸ்லாமிய வரலாற்றின்படி யாகூப், யூசுப் இருவரும் நபிகளாவர். யாகூபின் இளைய தாரமாகிய ராஹிலாவின் வயிற்றில் மகனாகப் பிறந்தவர் யூசுப். ஆணழகனாக விளங்கிய அவர், இளம் வயதிலேயே அன்னையை இழந்தார். தந்தை மற்ற மைந்தர்களை விட யூசுப்பிடம் அன்பாக இருந்தார். இதனால் பொறாமை கொண்ட, யூசுப்பின் மாற்றாந்தாய்க்குப் பிறந்தவர்கள், யூசுப்பைத் தந்திரமாக காட்டுக்கு அழைத்துச் சென்று பாழடைந்த கிணற்றுக்குள் தள்ளிவிட்டனர். யூசுப்பை ஓநாய் அடித்துத் தின்றுவிட்டதாகத் தந்தையிடம் பொய் கூறினர். யூசுப் காட்டின் வழியே சென்ற வணிகர்களால் காப்பாற்றப்பட்டார். வணிகர்கள், தங்கள் தலைவரான மாலிக்கினிடம் யூசுப்பை விற்றனர்.

மன்னர் தைமூனின் திருமகள் ஜுலைகா. இவள் ஆணழகன் ஒருவனைக் கனவில் கண்டாள். அவனையே மணம் முடிக்க எண்ணினாள். சுயம்வரம் நடத்தியும் அவனைக் கண்டறிய இயலாததால், மிஸ்று நாட்டு முதல் அமைச்சரான அஜீஸுக்கு அவள் மணம் முடித்துக் கொடுக்கப்பட்டாள். அஜீஸ், தனது கனவில் தோன்றிய ஆண் அழகர் இல்லை என்பதை அறிந்து ஜுலைகா அதிர்ச்சி அடைந்தாள். அவளது உணர்ச்சியை அறிந்து  ஒதுங்கி வாழ்ந்தார் அஜீஸ்.

வணிகர் ஒருவரால் மிஸ்று நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டார் யூசுப். ஆணழகரான யூசுப்பைக் காட்சிப் பொருளாக்கி அவருக்கு உரிமையான வணிகர் பொருளீட்டினார். இதனை அறிந்த முதல் அமைச்சர் அஜீஸ், யூசுப்பை அரண்மனைக்குக் கொண்டு வரச் சொன்னார். அவரே தனது கனவில் வந்தவர் என்பதை ஜுலைகா அறிந்தாள். எடைக்கு எடை தங்கம் கொடுத்து யூசுபை அவள் அடிமையாகப் பெற்றாள். யூசுபைத் தன்வயமாக்கச் செய்யும் அவளது முயற்சிகள் தோல்வி அடைந்தன. ஒருநாள் யாரும் இல்லாத சமயத்தில் யூசுபைப் பலவந்தமாக அடைய முயற்சி செய்தாள் ஜுலைகா. இச்சமயத்தில் அங்கே அமைச்சர் அஜீஸ் வந்து விட்டார். தான் தப்பித்துக் கொள்ள யூசுப் மீது ஜுலைகா பழிசுமத்தினாள். தன்னை யூசுப் பலவந்தம் செய்ய முயற்சித்ததாகக் குற்றம் சாட்டினாள். வேலைக்காரன் மூலம் அஜீஸ் உண்மையை உணர்ந்தார் என்றாலும் யூசுப்பைச் சிறையில் அடைத்தார். சிறையில் அடைக்கப்படபோதும் யூசுப் மீதான தனது காதலால் அவரை அங்கும் சென்று தொந்தரவு செய்தாள் ஜுலைகா. யூசுப் ஏற்க மறுத்தார்.

மிஸ்றுவின் மன்னர் கண்ட ஒரு பயங்கரக் கனவுக்குப் பலன்கூறிய காரணத்தால், சிறையிலிருந்து  விடுதலை செய்யப்பட்டார் யூசுப். நாளடைவில் அந்த நாட்டின் உணவு அமைச்சர் ஆனார். அஜீஸின் மரணத்திற்குப்பின் யூசுப்பே முதலமைச்சர் ஆக மன்னனால் நியமிக்கப்பட்டார். அஜீஸின் மரணத்தால் விதவை ஆன ஜுலைகாவை யூசுபிற்கே மணமுடித்து வைத்தார் மன்னர். இதுதான் யூசுப் - ஜுலைகாவின் கதை.

நூல் அமைப்பு

யூசுப் ஜுலைகா நூலின் தொடக்கத்தில் பாயிரம், இறை வாழ்த்து ஆகியன இடம் பெற்றுள்ளன. காப்பியக் கூறுகளான நாட்டு வளம், நகர் வளம் ஆகியன இடம்பெறவில்லை. இந்நூலில், நிலைமண்டில ஆசிரியப்பா, நேரிசை ஆசிரியப்பா ஆகிய பா வகைகளும், கலிவிருத்தம், ஆசிரிய விருத்தம் ஆகிய பாவினங்களும் இடம் பெற்றுள்ளன. எளிய சொற்களைக் கொண்டு இக்காப்பியம் இயற்றப்பட்டுள்ளது. இந்நூல் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 43 இயல்களும், இரண்டாவது பாகத்தில் 23 இயல்களும் என மொத்தம் 66 இயல்களாக இந்நூல் அமைந்துள்ளது.

முதல் பாகம்
  • யூசுப் பரம்பரை
  • யூசுபின் பிறப்பு
  • யாக்கூபும் ராஹிலாவும்
  • இல்லரசியின் இழப்பு
  • யூசுபின் பிரிவு
  • சோதரியின் துயர்
  • குழந்தை கூறும் நெறி
  • மதியின் சதி
  • விதி செய்த வேலை  
  • அன்பு விளைத்த பகை
  • கதிரவன் காட்டிய நாடு
  • எழிலைக் கண்டான்
  • கிழவியின் கண்டிப்பு
  • கள்ளன் நுழைந்தான்
  • ஏமாற்றம்
  • யூசுபின் கனவு
  • சகோதரப் பகை
  • நினைப்பும் நடிப்பும்
  • சுலைகாவின் துயரம்
  • யூசுப் எங்கே?
  • சுலைகாவின் நம்பிக்கை
  • மீண்டும் வந்தான்!
  • யாக்கூபின் நிலை
  • தைமூஸ் சபையில் அறிவித்தல்
  • புதையல் கிடைத்தது
  • சுலைகாவின் சுயம்வரம்
  • தோழியரை வினாவுதல்
  • காதலுக்கு விலங்கா?
  • சுலைகாவின் பிரார்த்தனை
  • காதலன் வந்தான்
  • மயக்கும் அழகு
  • காதல் யாத்திரை
  • அஜீஸின் வரவேற்பு
  • இருளிலே ஒளி
  • தூது அனுப்புதல்
  • அடிமைச் சந்தையில்
  • துன்பமும் இன்பமும்
  • பழி சுமத்தல்
  • விருந்தும் வியப்பும்
  • மூன்று உள்ளங்கள்
  • திரை விலகியது
  • அஜீஸின் மரணம்
  • கடமையும் காதலும்
இரண்டாம் பாகம்
  • மன்னரும் மணமக்களும்
  • மணப் பெண்ணின் குறை
  • களிப்பும், கவலையும்
  • முன்னிரவும் முதலுறவும்
  • கொற்றமும், குடிகளும்!
  • தாய்மை வேண்டுதல்
  • மணிமுடி மறுத்தல்
  • பெருமை தரும் பிணி
  • யாக்கூபின் நம்பிக்கை
  • ஒரு கொடியில் இரு மலர்கள்
  • பதவியும் பரிசிலும் !
  • வளமும் வறட்சியும்
  • இயற்கையின் சீற்றம்
  • பஞ்சமும் பரிகாரமும்
  • நினைவின் நிழல்
  • யாக்கூபின் ஐயம்
  • மவுன சந்திப்பு
  • இழப்பும் இருப்பும்!
  • பிறநாட்டின் பெருமை
  • பிரிவின் தொடக்கம்
  • பொறுமையின் எல்லை!
  • பாசத்தின் தண்டனை
  • விடிவும், முடிவும்!

பாடல் நடை

யூசுப்பை ஓநாய் இழுத்துச் சென்றதாகச் சகோதரர்கள் பொய் கூறுதல்

துடித்திடும் தந்தை நோக்கித்
     துயருடன் ‘ரூபில்’ தொண்டை
அடைத்திட நடுங்கி ஓநாய்
     அழகுறும் யூசுப் தன்னைத்
துடித்திடக் கடித்துக் கொன்று
     தூக்கியே சென்ற தென்றான்;
வெடித்தது பூமி, வானம்
     வீழ்ந்தது யாக்கூப் கண்ணில்.
”கடித்திடும் வரையும் நீங்கள்
     கைகட்டி நின்று யூசுப்
துடித்திடக் கண்ணால் காணும்
     துணிச்சலெவ் வாறு பெற்றீர்...”
முடித்திட வில்லை யாக்கூப்
     முந்தினான் ‘ரூபில்’ "நாங்கள்
பிடித்திட முயன்றோம் ஓநாய்
     பிளந்தது யூசுப் நெஞ்சை!
பார்த்திடச் சகித்தி டாமல்
     பதறியே விழிகள் பொத்தி
வேர்த்திட நின்றோம் யூசுப்
     வீரிட்டு உயிர்து றக்க
நேரினில் கண்டு யாங்கள்
     நிலைகுலைந் திருக்க ஓநாய்
சீறியே பாய்ந்தி ழுத்துச்
    சென்றது” என்று சொன்னான்!

சுலைகாவின் பிரார்த்தனை

தவமேவிய அடியார்க்கருள் தவறாதருள் புரிவாய்
பவமேதென அறியார்துயர் பறந்தோடிட அருள்வாய்
தவறேசெயத் துணியாஎனைத் தனியாக்குதல் முறையோ
எவரேயுனை யல்லாதெனக் கேற்றதுணை இறையே!

அயலாரகம் துயில்வாரிடம் அன்பேசெயப் படைத்தால்
துயராலகம் அயராவரம் சுரக்காதது முறையோ ?
பயமேபடைத் தடியார் முகம் பார்க்காதது சரியோ ?
நயமேதரும் கருணாஒளி நயனமுடை இறையே !

சிறையேதரும் உலகோரிடம் சிரமேகுனிந் திடவோ?
குறையேமிகும் கொடியோரிடம் குறையே உரைத்திடவோ
மறையேதரும் இறைவாபுவி மறைந்தாயிதற் கெனவோ ?
நிறைவாகிய நிதியே குறை நிலைக்காதருள் இறையே !

யூசுப் - ஜுலைகா சந்திப்பு

பன்னெடு நாட்க ளாகப்           
     பார்த்திடா சுலைகா இன்று
தன்னிடம் வருதல் கண்டு             
     தயக்கமில் லாது யூசுப்
என்னிடம் எதுவும் பேச             
     எண்ணிடில் எனைய ழைத்தால்
நின்னிடம் வருவேன் யானே         
     நேரிலேன் வந்தீர் என்றார்
உங்களின் ஏவ லாற்ற             
     உயிரினைச் சுமக்கு மென்னைத்
தங்களை ஏவச் சொன்னால்       
     தரணியே நகைத்தி டாதோ
திங்களைச் சூழ்ந்த மங்குல்       
     திரையினை விலக்க வேண்டி
உங்களை அடைந்தேன் என்றாள்.
     உள்ளமே தவித்தார் யூசுப் !

மதிப்பீடு

யூசுப் ஜுலைகா, இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இஸ்லாமியக் காப்பிய நூல்களுள் குறிப்பிடத்தகுந்தது. காப்பியக் கூறுகள் முழுமையாக இடம் பெறாவிட்டாலும் காப்பியத்திற்கேற்ற இலக்கியப் பொருண்மையுடன் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இந்நூல் பற்றி மேனாள் நீதிபதி மு.மு. இஸ்மாயில், “காப்பியம்  முழுவதிலும்  அவரது (சாரண பாஸ்கரன்) கவித்திறன்  ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. ஆண்டிருக்கும் சொற்கள் மிக எளியவை. நடைமிகத் தெளிவாக, சரளமாக, ஆற்றொழுக்குப்  போல் அமைந்திருக்கிறது. எந்த  ஒரு சொல்லின் பொருளையும்  தெரிந்து  கொள்ள அகராதியைப் புரட்டத் தேவையே இல்லை. அத்தகைய எளிய சொற்களால், மிக ஆழ்ந்த உணர்ச்சிகளையும் மிகத் தெளிவாய்ச் சித்திரித்துக் காட்டிவிடுகிறார் கவிஞர்.” என்று மதிப்பிட்டுள்ளார்,

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.