under review

மு. இராகவையங்கார்

From Tamil Wiki
Revision as of 10:16, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மு. இராகவையங்கார்
மு. இராகவையங்கார்
மு.ராகவையங்கார்

மு. இராகவையங்கார் (முத்துசுவாமி இராகவையங்கார்) (ஜூலை 26, 1878 – பிப்ரவரி 2, 1960) தமிழ் இலக்கிய வரலாற்றாய்வாளர், சொற்பொழிவாளர், பதிப்பாசிரியர், இதழாசிரியர். தமிழ் இலக்கிய வரலாற்றில் பல ஆய்வுகளைச் செய்து ஆய்வுத்துறை முன்னோடி என்று தமிழறிஞர்களால் அழைக்கப்படுபவர்.

பிறப்பு, கல்வி

இராமநாதபுரத்தில் சேதுபதி அவைப்புலவராக விளங்கிய சதாவதானம் முத்துசுவாமி ஐயங்காருக்கு ஜூலை 26, 1878 அன்று இராகவையங்கார் பிறந்தார். இராகவையங்காரின் தந்தை முத்துசுவாமி ஐயங்கார் கன்னடம் அறிந்த தமிழறிஞர். மரபுவழிப் புலவர்; தசாவதானம் செய்தவர்.முத்துசுவாமி ஐயங்கார் எழுதிய நூல்களில் மணவாள மாமுனிகள் நூற்றந்தாதியை வைணவர்கள் முக்கியமாகக் கொள்கின்றனர். பாண்டித்துரை தேவரின் ஆசிரியராக இருந்த முத்துசாமி ஐயங்கார் தன் மகனுக்கு 16 ஆண்டுகள் தமிழ் கற்பித்தார். முத்துசுவாமி ஐயங்கார் 1894-ல் காலமானார்.

தமிழறிஞர் வி.கனகசபைப் பிள்ளையிடம் தமிழை சிறுவயதில் கற்ற இராகவையங்காருக்கு உதவியாக இருந்தவர் அவரது தாய்மாமனின் மகனாகிய தமிழறிஞர் ரா. ராகவையங்கார். மு.இராகவையங்கார் இராமநாதபுரம் சேதுபதி ஆதரவில் வாழ்ந்தார். பாண்டித்துரைத் தேவர், நாராயணையங்கார் ஆகியோர் இவருடன் கல்விபயின்றவர்கள். பின்னாளில் மு.இராகவையங்கார் ’செந்தமிழ் வளர்த்த தேவர்கள்’[1] என்ற பெயரில் பொன்னுச்சாமித் தேவர், பாண்டித்துரைத் தேவர் ஆகியோரின் வாழ்க்கையை எழுதியிருக்கிறார்.

தனிவாழ்க்கை

இராகவையங்கார் பதினெட்டு வயதில் சேது சமஸ்தான அவைப்புலவர் பட்டம் பெற்றார். 1901-ல் பாண்டித்துரைத் தேவரால் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டது. அதன் ஓர் உறுப்பான செந்தமிழ்க் கல்லூரியில் 1901-1912 வரை மு. இராகவையங்கார் தமிழாசிரியராகப் பணியாற்றினார். நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செந்தமிழ் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

தன் 76 வயதில் மனைவி, மக்கள், மருமகனை இழந்தார். அதனால் பெரும் மனக்கொந்தளிப்புக்கு ஆளாகி 'கையறுநிலை’ என்னும் நூலை எழுதினார். இறுதிக் காலத்தில் தன் இரண்டாவது மகனின் வீட்டில் மானாமதுரையில் வசித்தார்.

கல்விப்பணி

மு. இராகவையங்கார் இளம் வயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். இதனால் 1896-ம் ஆண்டில் தம்முடைய பதினெட்டாம் வயதிலேயே பாண்டித்துரைத் தேவரின் அவைக்களப் புலவர் ஆனார். 1901ல் செந்தமிழ்க் கல்லூரி தமிழாசிரியர் பணியை ஏற்றார். செந்தமிழ்க் கல்லூரி ஆசிரியப் பணியையும் செந்தமிழ் இதழின் ஆசிரியப் பணியையும் 1912-ம் ஆண்டில் இறுதியில் துறந்த மு.இராகவையங்கார் 1913-1939 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரகராதிக் குழுவில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். 1936-1938 வரை சென்னை லயோலா கல்லாரி வருகைப் பேராசிரியர் பணியில் இருந்தார். 1944-1951 வரை திருவிதாங்கூர் பல்கலைக்கழகப் பேராசிரியர், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கம்பராமாயணம் பதிப்புக்குழு உறுப்பினர், தமிழ் கல்விச் சங்கத்தின் உறுப்பினர் என பல பதவிகளை வகித்தார்.

இதழியல்

மதுரை தமிழ்ச் சங்கம் வெளியிட்ட செந்தமிழ் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பில் மு.இராகவையங்கார் பணியாற்றினார். 1907-1921 வரை சென்னைப் பலகலைக்கழகத்தின் லெக்சிகன் பதிப்பில் உதவியாசிரியராக பணியாற்றும்போது கலைமகள் பத்திரிகை ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இருந்தார். தமிழர்நேசன் பத்திரிகையின் கௌரவ ஆசிரியர் எனப் பல பொறுப்புகளிலும் பணிகளிலும் இருந்த மு.இராகவையங்கார் பின்னாளில் ஸ்ரீவாணி விலாசினி, கலைக்கதிர், அமுதசுரபி ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

இராகவையங்கார் செந்தமிழ் இதழில் ஆசிரியராக இருந்தபோதும், பின்னர் கல்வித்துறை பணிகளின் போதும் பழந்தமிழ் ஆய்வுகளையும் கல்வெட்டாய்வுகளையும் செய்து வந்தார். 12 ஆய்வு நூல்களை எழுதினார். தன் எண்பதாவது ஆண்டு நிறைவின் போது வினைத்திரிபு விளக்கம் என்னும் நூலை எழுதி வெளியிட்டார்.

ஆய்வுநூல்கள்

சென்னைப் பல்கலைக் கழகம் ரெவரெண்ட் ஜே.எஸ். சாண்ட்லர் தலைமையில் மேற் கொண்ட தமிழ்ப் பேரகராதி தயாரிப்பில் 1913 முதல் தமிழ் உதவி ஆசிரியராக இருந்தார். கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் தமிழ்ப் பேரகராதி தொகுப்புக் குழுவில் பணியாற்றியுள்ளார். சாண்ட்லர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அகராதி பின்னர் தலைமையேற்ற எஸ். வையாபுரிப் பிள்ளை காலத்தில் 1936-ல்தான் முடிந்தது.

இராகவையங்கார் எழுதிய வேளிர் வரலாறு, சேரன் செங்குட்டுவன்[2] சாசனத் தமிழ்க் கவி சரிதம், ஆழ்வார் காலநிலை[3] ஆராய்ச்சிக் கட்டுரைகள், தெய்வப்புலவர் கம்பர் போன்ற வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. கேரளத்தில் இராகவையங்கார் வாழ்ந்தபோது பேசிய உரைகள் Some Aspects of Keralas Tamil Literature என ஆங்கிலத்திலும் வந்திருக்கின்றன. தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி, சாசனத் தமிழ் கவி சரிதம், சேர வேந்தர் செய்யுள் கோவை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் பெயர், வினைகள் எவ்வாறாக அமைந்துள்ளன என்பதை மு.இராகவையங்கார் எழுதியுள்ள வினைத்திரிபு விளக்கம் விவரிக்கிறது.

தனிக்கட்டுரைகள்

1903-ல் மு.இராகவையங்கார் எழுதிய ஆரம்பக்காலக் கட்டுரைகளில் செந்தமிழ் இதழில் 'வேளிர் வரலாறு' கட்டுரை வெளிவந்த ஆண்டிலேயே கொழும்பு வி.ஜே. தம்பிப் பிள்ளை என்பவர் Royal Asiatic Society Journal இதழில் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அது அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் பாடத்திட்டத்தில் இருந்தது. சங்க கால வள்ளல்களான வேள் பரம்பரையினரைப் பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரையை ராமநாதன் செட்டியாரின் முகவுரையுடன் பின்னர் மதுரை தமிழச் சங்கம் வெளியிட்டது. வேளிர்கள் என்பவர்கள் தனி அரசகுடியினர் என இதில் மு.இராகவையங்கார் நிறுவுகிறார்.

நாட்டாரியல்

மு.இராகவையங்கார் நாட்டாரியலிலும் ஆர்வம் காட்டினார். மகாபாரதக் கதாபாத்திரங்களின் அடிப்படையில் மதுரையை மையமாகக் கொண்டு உருவான பெரிய எழுத்து அம்மானைக் கதைகளுக்கும் தென்பாண்டித் தமிழ்ச் சமூகத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்து எழுதினார். அல்லிக்கும் அர்ஜுனனுக்கும் உள்ள உறவு பாண்டியர் வரலாறு தொடர்பான செய்திகள் கொண்டது என இராகவையங்கார் ஆய்வுக்குறிப்புகள் எழுதியிருக்கிறார்.

கல்வெட்டாய்வு

இராகவையங்கார் தொல்பொருளாராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த டி. ஏ. கோபிநாதராவுடன் தமிழ் நாட்டின் கோயில்களிலுள்ள கல்வெட்டுகள் பற்றி ஆராய்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1929-ல் பேசிய சிறப்பு உரையை பின்னர் விரிவாகச் செப்பனிட்டு சாஸனத் தமிழ்க்கவி சரிதம் என்னும் பெயரில் வெளியிட்டார். தொல்பொருள்துறை வெளியிட்ட தமிழகக் கேரளக் கல்வெட்டுப் பகுதிகளைப் படித்து அவற்றில் உள்ள தமிழ்ப் பாடல்களைத் தொகுத்தும், தமிழ்ப் புலவர்களைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தும் கடின உழைப்பில் உருவானது இந்த நூல். கல்வெட்டுக்களின் இலக்கிய மதிப்பை நிறுவியவர் மு.இராகவையங்கார். அவற்றில் சொல்லப்பட்டுள்ள 84 புலவர்களைப் பற்றிய செய்திகளை அந்நூலில் திரட்டி இருக்கிறார்.

பதிப்பாசிரியர்

அண்ணாமலை பல்கலைக் கழகம் கம்பராமாயணத்தை உரையோடு பதிப்பிக்க விழைந்து 1951-ம் ஆண்டில் பதிப்பாசிரியர் குழுவை உருவாக்கிய குழுவில் மு. இராகவையங்கார் இடம்பெற்றார். கம்பராமாயணத்தின் சிலபகுதிகளைப் பாடபேத ஆராய்ச்சிக் குறிப்பும் விளக்கவுரையும் எழுதி பதிப்பித்தார். நரி விருத்தம் (அரும்பதவுரையுடன்), திருக்கலம்பகம், விக்கிரம சோழன் உலா, கேசவப் பெருமாள் இரட்டைமணிமாலை, நிகண்டகராதி முதலான பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

செந்தமிழ்

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் அமைப்பின் உறுப்பான செந்தமிழ் இதழில் 1901-ம் ஆண்டு முதல் 1904-ம் ஆண்டு வரை உதவியாசிரியராக இருந்தார். பின்னர் 1904-ம் ஆண்டில் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். 1912-ம் ஆண்டு வரை அப்பணியை ஆற்றினார். இவருக்கு முன்னர் 1901-1903-ம் ஆண்டுகளில் மு. இராகவையங்காரின் தாய்மாமனின் மகன் ரா.ராகவையங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார். இவருக்குப் பின்னர் 1912 முதல் 1947 வரை அ. நாராயணையங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார்

விருதுகள்

  • 1938-ல் மு.இராகவையங்காருக்கு அறுபது ஆண்டு நிறைவு விழா இராமநாதபுரத்தில் நடந்தபோது உ.வே.சாமிநாதையர் வாழ்த்துரை வழங்கினார்
  • 1939-ல் மு.இராகவையங்காருக்கு ராவ்சாகிப் விருது கிடைத்தபோது நடந்த பாராட்டுக் கூட்டத்தில் இராகவையங்காரின் ஏற்புரை அறிஞர்களுக்கிடையே முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது
  • தமிழ்ப் பேரகராதிக் குழுவில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றியதைப் பாராட்டி அப்பொழுதைய பிரிட்டிஷ் அரசாங்கம் ராவ்சாகிப் என்னும் விருதை வழங்கியது
நாட்டுடைமை

மு. இராகவய்யங்காரின் படைப்புகளைத் 2009-ல் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது.

மறைவு

மு. இராகவையங்கார் பிப்ரவரி 2, 1960-ல் தன் 82-வது வயதில், மானாமதுரையில் தன் மகன் வீட்டில் மரணமடைந்தார்.

நூல்கள்

பதிப்பித்தவை
  • திருக்குறள் பரிமேலழகர் உரையுடன் - 1910
  • பெருந்தொகை - 1936
  • திருவைகுந்தன் பிள்ளைத்தமிழ் - 1936
  • அரிச்சந்திர வெண்பா - 1949
  • கம்பராமாயணம் பால காண்டம் - 1951
  • திரிசிராமலை அந்தாதி - 1953
  • கம்பராமாயணம் - சுந்தர காண்டம் - 1958
  • நரிவிருத்தம் அரும்பத உரையுடன்
  • சிதம்பரப் பாட்டியல் உரையுடன்
  • திருக்கலம்பகம் உரையுடன்
  • விக்கிரம சோழனுலா
  • சந்திரா லோகம்
  • கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை
எழுதியவை
  • வேளிர் வரலாறு[4] - 1905
  • தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி - 1912
  • சேரன் செங்குட்டுவன்[2] - 1915
  • தமிழரும் ஆந்திரரும் - 1924
  • ஆழ்வார்கள் காலநிலை[3] - 1926
  • சாசனத் தமிழ்க்கவி சரிதம் - 1929
  • ஆராய்ச்சித் தொகுதி - 1938
  • திருவிடவெந்தை எம்பெருமான் - 1939
  • சேர வேந்தர் செய்யுட் கோவை (முதல் தொகுதி) - 1947
  • செந்தமிழ் வளர்த்த தேவர்கள்[1] - 1948
  • Some Aspects of Kerala and Tamil Literature – 2 volumes - 1950
  • இலக்கியக் கட்டுரைகள் - 1950
  • சேர வேந்தர் செய்யுட் கோவை (இரண்டாம் தொகுதி) - 1951
  • வினைதிரிபு விளக்கம் - 1958
  • கட்டுரை மணிகள் - 1959
  • தெய்வப் புலவர் கம்பர் - 1969
  • இலக்கிய சாசன வழக்காறுகள்
  • நூற்பொருட் குறிப்பகராதி
  • நிகண்டகராதி
சொற்பொழிவுகள்
  • சாசனத் தமிழ்க்கவி சரிதம் - 1929
  • காந்தளூர்ச் சாலை - 1950
  • சேரத் தமிழ் இலக்கியங்கள் - 1950
  • தெய்வப் புலமை - 1959
  • கம்பனின் தெய்வப் புலமை

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page