முல்லை முத்தையா

From Tamil Wiki
Revision as of 13:17, 30 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "முல்லை முத்தையா ( ) === பிறப்பு, கல்வி === முல்லை முத்தையா தேவகோட்டை நகரில், நகரத்தார் சமூகத்தில் மாத்தூர் கோயில்ல் கண்ணூர் பிரிவைச் சேர்ந்த குடியில் பழனியப்பச் செட்டியார்- மனோன்ம...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

முல்லை முத்தையா ( )

பிறப்பு, கல்வி

முல்லை முத்தையா தேவகோட்டை நகரில், நகரத்தார் சமூகத்தில் மாத்தூர் கோயில்ல் கண்ணூர் பிரிவைச் சேர்ந்த குடியில் பழனியப்பச் செட்டியார்- மனோன்மணி ஆச்சி இணையருக்கு 7-ஜூந் 1920ல் பிறந்தார். இவருடைய தந்தைவழி தாத்தா நாகப்பச் செட்டியார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யின் மாணவரான கனகசபை ஐயர் என்பவரிடம் தமிழ் பயின்று செய்யுள் இயற்றும் திறமை கொண்டிருந்தார். அவருடைய தந்தை சுப்ரமணியம் செட்டியார் சுப்ரமணிய குரு என அழைக்கப்படும் ஆன்மிக அறிஞராக திகழ்ந்தார். முல்லை முத்தையாவின் தாய்வழித் தாத்தா அஷ்டாவதானம் சிவசுப்ரமணியச் செட்டியாரும் புகழ்பெற்ற தமிழறிஞர்.

முத்தையா இளமையிலேயே தமிழும் சம்ஸ்கிருதமும் பயின்றார். தேவகோட்டையில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்ததுமே நகரத்தார் குல வழக்கப்படி பர்மாவுக்கு வட்டித்தொழில் செய்யும்பொருட்டுச் சென்றார். தந்தையிடமிருந்து பெற்ற சைவநூல் கல்வியையும், தனியார்வத்தால் திருக்குறள் கல்வியையும் தொடர்ந்தார். பர்மாவில் இருக்கையில் ஆங்கிலக்கல்வியை பல ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொண்டார்

தனிவாழ்க்கை

முல்லை முத்தையாவின் முதல் மனைவி தேவகோட்டையைச் சேர்ந்த மீனாட்சி ஆச்சி. அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதனால் இரண்டாம் தாரமாக புதுவயல் ஊரைச் சேர்ந்த நாச்சம்மை ஆச்சியை 1958ல் மணந்துகொண்டார். அவர்களுக்கு ஆறு குழந்தைகள். மனோன்மணி, பழனியப்பன், கலா சொக்கலிங்கம், உமா வெங்கசாச்சலம், இராமநாதன், கருப்பையா.

உலகப்போர் மூண்டதும் பர்மாவில் இருந்து இந்தியா வந்தார். வெ.சாமிநாத சர்மா, பாரிநிலையம் பதிப்பகம் நடத்திய செல்லப்பன் ஆகியோருடன் ஒரு பேருந்தை விலைக்கு வாங்கி இந்திய எல்லை வரை வந்து அங்கிருந்து ஊருக்கு திரும்பினார். 22 வயதில் ஊர்மீண்ட முத்தையா 1942 ல் சக்தி.வை.கோவிந்தனின் சக்தி இதழில் துணையாசிரியராகச் சேர்ந்தார்.அதில் அனுபவம் பெற்றபின் 1943ல் முல்லை பதிப்பகத்தை தொடங்கினார்

பதிப்பக வாழ்க்கை

முல்லை முத்தையா இளமையிலேயே பாரதிதாசன் மீது தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். பாரதிதாசன் நூல்களை பதிப்பிக்கவேண்டும் என்னும் விருப்பமே அவரை பதிப்புத்துறையில் இறங்கச் செய்தது. அவர் பதிப்புத்துறையில் இறங்கும்போது மர்ரேராஜம் கம்பெனி, அல்லையன்ஸ் கம்பெனி, கலைமகள் காரியாலயம், திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவை செயல்பட்டுக்கொண்டிருந்தன. நகரத்தார்களில் சக்தி பதிப்பகம் கோவிந்தன், தமிழ்ப்பண்ணை நடத்திய சின்ன அண்ணாமலை ஆகியோர் முன்னணியில் இருந்தனர். முல்லை முத்தையா அவர்களில் ஒருவராக இணைந்தார்.

முத்தையா தினமணி, பாரததேவி முதலிய இதழ்களில் உதவியாசிரியராகப் பணியாற்றிய கே.அருணாசலம் என்பவருடன் இணைந்து கமலா பிரசுராலயம் என்னும் நிறுவனத்தை தொடங்கினார். ஜவகர்லால் நேருவின் மனைவி கமலா நேரு நினைவால் அப்படி பெயர்சூட்டப்பட்டது. பின்னர் முல்லை பதிப்பகத்தை தன் பொறுப்பில் தொடங்கினார். முல்லைப் பதிப்பகம் முதல் வெளியீடு பாரதிதாசனின் அழகின் சிரிப்பு. தொடந்து தமிழியக்கம், அழகின் சிரிப்பு ஆகிய பாரதிதாசனின் நூல்களையும் அவர் வெளியிட்டார். பாரதிதாசன் முல்லை பதிப்பகத்தின் முகப்பு எழுத்தாளராகத் திகழ்ந்தார்.