under review

சக்தி

From Tamil Wiki
சக்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சக்தி (பெயர் பட்டியல்)
சக்தி (1990 )

சக்தி (இதழ்) (ஆகஸ்ட் 1990) நார்வேயிலிருந்து வெளிவரும் பெண்கள் காலாண்டு இதழ். புலம்பெயர்ந்த பெண்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் பெண்களுக்கான சமூக, கலை, இலக்கிய, விஞ்ஞான இதழ்.

வெளியீடு

சக்தி இதழ் ஆகஸ்ட் 1990 முதல் நார்வேயிலிருந்து வெளிவரும் காலாண்டு இதழ். இதழின் ஆசிரியர் தயாநிதி. முதலாவது இதழ் மைத்ரேயியின் முயற்சியால் வந்தது. சுகிர்தா, லிட்டா இராசநாயகம் போன்றோரின் பங்களிப்புகளுடன் பின்னர் வெளிவந்தது. புலம்பெயர்ந்த பெண்கள் பலரின் பங்களிப்புகளுடன் சக்தி தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

நோக்கம்

சக்தி இதழ் பெண்கள் மீதான பாகுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல், பெண்களுக்கு இடையே ஒருங்கிணைப்பையும் ஒற்றுமையையும், நட்பையும் ஏற்படுத்தல் ஆகிய நோக்கங்களோடு கலை இலக்கிய, விஞ்ஞான இதழாக வெளிவந்தது. "பெண்களின் கட்டுரைகள் போதுமானதாக இருக்கும் பட்சத்தில் ஆண்களின் கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட மாட்டாது" என்ற கொள்கையை சக்தியின் ஆசிரியர் குழு கொண்டுள்ளது.

உள்ளடக்கம்

சக்தி இதழில் பெண்ணியம் சார்ந்த, பெண் விடுதலையை நோக்காக கொண்ட ஆக்கங்கள் பிரசுரமாகின. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரைகள், பெண்ணியம் பேசும் கட்டுரைகள் வெளிவந்தன. நார்வே தமிழ்ப் பெண்களின் இலக்கியச் செயல்பாடுகள் பற்றிய கட்டுரைகள் வெளிவந்தன. நூல் அறிமுகங்களும் உலகப் பெண் படைப்பாளர்களின் மொழிபெயர்ப்புகளும் வெளிவந்தன. அன்புள்ள தோழிக்கு என்ற பகுதி கடித உரையாடல் தளமாக பெண் வாசகர்களின் கேள்விக்கு பதில் சொல்லியது. வெளி நாடுகளில் உள்ள பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றிப் பேசியது.

இலக்கிய இடம்

புலம் பெயர்ந்த பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் இதழாக சக்தி இதழ் அமைந்தது. அதே சமயம் பொழுதுபோக்கு பெண் பத்திரிக்கைகளின் போக்கையும் கடிந்தது.

பங்களிப்பாளர்கள்

  • சிந்து
  • சமர்
  • எஸ்.தர்மதேவி
  • ஏ.ஆனந்தசிவகுமார்
  • ஜசிந்தா
  • மைத்ரேயி
  • ஜெயந்தன் சிவசாமி
  • சந்தியா
  • ராஜினி
  • மானசி
  • தயாநிதி
  • சந்திரவதனா செல்வகுமாரன்

ஆவணம்

1990 முதல் 2002 வரையுள்ள இதழ்கள் இலங்கையின் நூலகம் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன.

இணைப்பு

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Mar-2023, 06:54:37 IST