standardised

மானுடம் வெல்லும்

From Tamil Wiki
Revision as of 14:37, 19 April 2022 by Tamaraikannan (talk | contribs)
மானுடம் வெல்லும்

மானுடம் வெல்லும் (1990). பிரபஞ்சன் எழுதிய வரலாற்று நாவல். பாண்டிச்சேரியின் வரலாற்றை ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பை ஒட்டி புனைவாக விரித்து எழுதப்பட்டது. மன்னர்களின் வரலாற்றுக்குப் பதிலாக மக்கள் வரலாற்றை மிகையில்லாமல் எழுதிய நாவல் இது என்றும், ஆகவே தமிழில் எழுதப்பட்ட முதல் வரலாற்று நாவல் என விமர்சகர்களால் சொல்லப்படுகிறது

எழுத்து, வெளியீடு

மானுடம் வெல்லும் நாவல் 1990-ல் தினமணிக் கதிர் வார இதழில் பிரபஞ்சன் தொடராக எழுதி வெளிவந்தது. மணியம்செல்வன் ஓவியம் வரைந்திருந்தார். கவிதா பதிப்பகம் இந்நாவலை வெளியிட்டது

இந்நாவல் ஆனந்தரங்கம் பிள்ளை பாண்டிச்சேரி பற்றி எழுதிய தினப்படிச் சேதிக்குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. தினப்படி சேதிக்குறிப்பு (ஆனந்தரங்கம்பிள்ளை)

விருது

  • 1992-ல் மானுடம் வெல்லும் இலக்கியசிந்தனை விருது பெற்றது
  • 1995-ல் மானுடம் வெல்லும் நாவலின் தொடர்ச்சியான வானம் வசப்படும் சாகித்ய அக்காதமி விருது பெற்றது

கதைச்சுருக்கம்

'மானுடம் வெல்லும்' நாவல் 'பியேழ் துமாஸ்' பிரெஞ்சுக் காலனியின் கவர்னராக இருந்த காலக்கட்டத்தில் நிகழ்கிறது. தஞ்சை மற்றும் ஆற்காட்டு அரசியலில் ஆங்கிலேயர் தலையிட பிரெஞ்சுக்காரர்கள் எதிர்க்கிறார்கள். குவர்னர் ஏழாண்டுகாலம் கெடுபிடிப்போரை நடத்துகிறார்.அவருடைய துபாஷ் (மொழிபெயர்ப்பாளர்) கனகராய முதலியார் மற்றும் சின்ன துபாஷ் ஆனந்தரங்கப் பிள்ளை மூலம் உள்ளூர் விஷயங்களைக் கையாள்கிறார். தங்கசாலைப் பொறுப்பு - சுங்கு சேஷாசலச் செட்டி மற்றும் சாவடி முத்தையாப் பிள்ளை ஆகியோர் உதவுகிறார்கள்.

வேதபுரீஸ்வரர் கோயில் தாசி கோகிலாம்பாள் வழக்குடன் கதை ஆரம்பமாகிறது. தாசி வாழ்க்கையை விரும்பாமல் அவள் ஊரைவிட்டு செல்கிறாள். தாசி வாழ்வை விரும்பாமல் ஊர்ப் பெரிய மனிதர்களின் பகையைச் சம்பாதித்துக் கொண்டு ஊரை விட்டே வெளியேறும் கோகிலாம்பாள்;   தண்டுக்கீரை, கொடுக்காப்புளி, தொப்புளான், வெள்ளைப் பூண்டு, சின்ன வண்டி,  கூடைக்காரி, மானங்காத்தாள் என சிறுசிறு சாமானியக் கதாபாத்திரங்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அன்றிருந்த வாழ்க்கை முறை, அடிமை வணிகம், அதிகாரிகளின் ஊழல், வணிகர்களின் சூழ்ச்சி என்று நாவல் தனித்தனி வாழ்க்கைச் சித்திரங்களை அளிக்கிறது. சேசு சபை பாதிரியார்கள் நடத்தும் மிகத்தீவிரமான மதப் பிரச்சாரம், அதனால் ஏற்படும் குடிமக்கள் கலகம் ஆகியவை கூறப்படுகின்றன. சாதிமுறையில் இருந்த ஏற்றத்தாழ்வுகள், குடும்பச்சிக்கல்கள், பங்காளிப்பூசல்கள் ஆகியவற்றை நாவல் விவரிக்கிறது. அன்னியர்களான பிரெஞ்சுக்காரர்களுக்கு இந்தியராகிய ஆனந்தரங்கம்பிள்ளை போன்றவர்கள் இவற்றைச் சொல்லுவதுபோன்ற உத்தி அவற்றை வேடிக்கையாகவும் விமர்சனமாகவும் சொல்ல மிகவும் உதவுகிறது.

இப்பின்னணியில் அன்றைய தஞ்சாவூர் - ஆர்க்காடு அதிகாரப் பூசல் விவரிககப்படுகிறது. பெரும்பாலான நிகழ்வுகள் உரையாடல் வழியாகவே வெளிப்படுகின்றன. ராணி மீனாட்சியை ஏமாற்றிக் கொன்றபின் நாயக்கராட்சியை வீழ்த்தி திருச்சியை ஆளும் சந்தா சாயபு காரைக்காலை புதுச்சேரி கவர்னருக்குக் கொடுத்து பிரெஞ்சுக்காரர்களின் நட்பைப் பெறுகிறார். தஞ்சாவூரை கைப்பற்ற எல்லா தரப்புகளும் முயல்கின்றனர். மராத்தியரால் சந்தா சாயபு  சிறைப் பிடிக்கப்படும்போது, அவர் மனைவி அத்தர், புதுச்சேரியில் தஞ்சம் அடைகிறாள். மராத்திய தளபதியின் மிரட்டல்களுக்கும் வற்புறுத்தல்களுக்கும் அஞ்சாது, துமா அவளை பாதுகாக்கிறார். நோயுற்றிருக்கும் கனகராய முதலியார் இறந்தபின் தான் துபாஷ் ஆகலாம் என ஆனந்தரங்கம் பிள்ளை காத்திருக்கிறார். கவர்னர் துமாஸ் பாரீஸுக்கு திரும்ப கப்பல் ஏறுவதோடு முதல் பாகமான 'மானுடம் வெல்லும் ' முடிவடைகிறது.

நடை

நாவலில் அக்காலத்துப் பேச்சுநடையை ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பில் இருந்து கற்பனையுடன் உருவாக்கி எடுத்திருக்கிறார் பிரபஞ்சன். உரையாடல்கள் பழமையானவையாகவும் கூடவே சமகாலத்தன்மை கொண்டவையாகவும் உள்ளன.

"பல நூறு ஆண்டுகள் முன்னமேயே நாங்கள் அறிந்து தெளிந்த ஒரு விஷயத்தை, அறுவடைக்குப் பிறகு எருவிட வந்தவனைப் போல, மிகக் காலம் தாழ்த்தி வந்து உபதேசிக்கிறீர்களே சுவாமி.."

"...சட்டி செய்பவனுக்கு நாற்காலி செய்பவன் கீழ். நாற்காலி செய்பவனுக்கு முடி வெட்டுபவன் கீழ். முடி வெட்டுபவனுக்குக் களை எடுப்பவன் கீழ். அவனுக்குப் பறை அடிப்பவன் கீழ். அவனுக்கு வைத்தியம் பார்ப்பவன் அவனுக்கும் கீழ். துணி வெளுப்பவன் கீழ்.  இப்படி ஒருவனுக்கு ஒருவன் கீழ்ப்பட்டுக் கீழ்ப்பட்டு, நரகத்தையும் தோண்டிக் கொண்டு கீழே போகிறார்கள்....   "

அரசியல்பார்வை

பிரபஞ்சனின் அரசியல்பார்வை இந்நாவலில் மார்க்ஸிய அடிப்படை கொண்டதாக இருக்கிறது. அரசர்களுக்கிடையேயான போரில் எல்லா தரப்பினராலும் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். வென்றவர்களும் தோற்றவர்களும், ஆட்சியாளர்களும் படையெடுப்பாளர்களும் ஒரேபோல மக்களைச் சூறையாடுகிறார்கள். மக்கள் சாதிமுறையாலும் அடிமைமுறையாலும் ஒருவரை ஒருவர் சுரண்டுகிறார்கள். ஆசாரங்களுக்கு கண்மூடித்தனமாக கட்டுண்டிருக்கிறார்கள். போர்களைச் சாகசங்கள் என்றோ பரபரப்பான நிகழ்வுகள் என்றோ பிரபஞ்சன் காட்டவில்லை. சாமானியர்களின் பார்வை வழியாகவே காட்டுகிறார்.

இந்தியர்களுக்கிடையே இருக்கும் சாதிப்பிரிவினையும், ஆசாரங்களில் சிறையுண்ட தன்மையும் அவர்களை பிரெஞ்சுக்காரர்களுக்கு அடிமையாக்குவதை நாவல் காட்டுகிறது. பிரெஞ்சுக்காரர்களின் கல்வி, பொதுநேர்மை, நிர்வாகத்திறன் ஆகியவையே அவர்களின் வலிமையாக இருக்கின்றன. ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டு தமிழ்நாட்டின் எல்லா தரப்புகளும் பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் தங்களை வெல்வதற்கு அனுமதிக்கிறார்கள்.

வானம் வசப்படும்

தொடர்ச்சி

மானுடம் வெல்லும் நாவலை மூன்று பகுதிகளாக ஒரு பெருநாவலாக எழுத பிரபஞ்சன் திட்டமிட்டிருந்தார். இரண்டாம் பகுதி வானம் வசப்படும் என்னும் பெயரில் தினமணிக் கதிர் இதழில் 1992 முதல் வெளிவந்தது. முழுமைபெறாமலேயே அதை நிறுத்த நேர்ந்தது. அதை முழுமைப்படுத்தி எழுத பிரபஞ்சன் திட்டமிட்டிருந்தாலும் அவருடைய வாழ்க்கைமுறை காரணமாக அது நிகழ்வில்லை. அதைத்தொடர்ந்த மூன்றாம் பகுதியும் எழுதப்படவில்லை. (பார்க்க வானம் வசப்படும்)

மதிப்பீடு

ஜெயமோகன் மானுடம் வெல்லும் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். “வரலாறு என்றால் ஐதீகம் என நம்பிய சமூகம் நாம். ஐதீகங்களை மறு ஆக்கம் செய்து வரலாற்று நாவல் என்றோம். தமிழில் தகவல்களினால் சமநிலைப்படுத்தப்பட்ட வரலாற்று சித்திரத்திலிருந்து உருவாக்கப்பட்ட முதல் நாவல் இது. வரலாற்றின் அபத்தமான, ஒருங்கிணைவில்லாத, சம்பவ நகர்வையும்; அதன் களத்தில் நிகழும் தீவிரமான அதிகாரப் போட்டியையும் காட்டும் நாவல் இது. ஐரோப்பிய ஒழுங்கு இந்தியனை ஆட்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் ஒரே சமயம் இந்நாவலில் தெரிகிறது. வரலாற்று மாந்தர் அதிமானுடர்களாக இல்லாமலிருப்பது அளிக்கும் தரிசனம் தமிழுக்கு மிகமிக முக்கியமானது[1]” இந்நாவலின் இன்னொரு முக்கியத்துவம் இதன் ஊடுபிரதித்தன்மை என ஜெயமோகன் குறிப்பிடுகிறார். இது ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு வரலாற்றின்மீதான மறு எழுத்து. இரு எழுதப்பட்ட வரலாறுகளும் எப்படி ஒன்றையொன்று மறுத்தும் ஏற்றும் விரிகின்றன என்னும் வாசிப்புக்கும் இதில் இடமுள்ளது.

உசாத்துணை

இணைப்புகள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.