first review completed

மனுஷ்ய புத்திரன்

From Tamil Wiki
Revision as of 14:48, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன் (பிறப்பு: மார்ச் 15, 1968) தமிழில் எழுதிவரும் கவிஞர், பாடலாசிரியர், கட்டுரையாளர், பத்திரிக்கையாசிரியர், பதிப்பாளர், அரசியல்வாதி.

வாழ்க்கைக்குறிப்பு

மனுஷ்ய புத்திரனின் இயற்பெயர் அப்துல் ஹமீது. மனுஷ்ய புத்திரன் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் கதீஜா பீவி, ஷேக் முகமது இணையருக்கு மார்ச் 15, 1968-ல் பிறந்தார். துவரங்குறிச்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி வழி பொருளியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் மற்றும் வரலாற்றில் இரு முதுகலைப்பட்டம் பெற்றார். தற்போது சென்னையில் வசிக்கிறார். கவிஞர் சல்மா மனுஷ்ய புத்திரனின் சகோதரி (தந்தையின் சகோதரர் மகள்).

அரசியல் வாழ்க்கை

2015-ல் திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைந்தார். திராவிட முன்னேற்றக்கழகத்தின் செய்தித்தொடர்பாளராக உள்ளார். தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

மனுஷ்ய புத்திரன் என்பது புனைப்பெயர். பதினைந்து வயதிலிருந்தே கவிதைகள் எழுதி வருகிறார். மனுஷ்ய புத்திரனின் முதல் கவிதை சுபமங்களாவில் வெளியானது. முதல் படைப்பு ’மனுஷ்ய புத்திரன் கவிதைகள்’ 1983-ல் வெளியானது. இலக்கிய, வணிக இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. மனுஷ்ய புத்திரனின் அரசியல் கட்டுரைகள் நக்கீரன், தினமலர் போன்ற நாளிதழ், இதழ்களில் வெளிவந்துள்ளன.

அமைப்பு செயல்பாடுகள்

உயிர்மை மாத இதழின் ஆசிரியர். உயிர்மை பதிப்பகத்தை நடத்தி வருகிறார். உயிர்மை மின்னிதழ், உயிர்மை டி.வி ஆகியவற்றின் நிறுவனர்.

இலக்கிய இடம்

"மனுஷ்யபுத்திரன் கவிதைகளை தமிழின் எழுச்சிவாத அழகியல் கூறு நவீனக் கவிதைக்குள் அடைந்த வெளிப்பாடு என்று கூறலாம். எழுச்சிவாதத்தின் கட்டற்ற இலக்கிய வடிவம், நேரடியான உணர்ச்சி வெளிப்பாடு, உச்சப்படுத்தும் போக்கு ஆகியவற்றின் மூலம் உருவானவை அவரது கவிதைகள். சுகுமாரன் கவிதைகளைவிட மேலும் நெகிழும் தன்மை கொண்டவை. அந்தவகையில் நெகிழ்ச்சியையே அழகியலாகக் கொண்ட தமிழ் பக்திக் கவிதைகளுக்கு சமகால நீட்சியாக அமைபவை அவை. ஆனால் நவீன அரசியல் மனத்தால் வெளிப்படுத்தப்படுபவை." என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • 2002-ல் இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான சன்ஸ்கிருதி சம்மான் வழங்கப்பட்டது.
  • 2003-ல் அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய ‘இலக்கியச் சிற்பி’ விருது பெற்றார்.
  • 2004-ல் இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘தலைசிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான’ விருது பெற்றார்.
  • 2011-ல் அதீதத்தின் ருசி கவிதைத் தொகுப்பிற்கு கனடா நாட்டின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது வழங்கப்பட்டது.
  • 2016-ல் ஆனந்த விகடன் டாப் 10 மனிதர்கள் விருது வழங்கியது.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்புகள்
  • மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983)
  • என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் (1993)
  • இடமும் இருப்பும் (1998)
  • நீராலானது (2001)
  • மணலின் கதை(2005)
  • கடவுளுடன் பிரார்த்தித்தல்(2006)
  • அதீதத்தின் ருசி (2009)
  • இதற்கு முன்பும் இதற்கு பின்பும் (2010)
  • பசித்த பொழுது (2011)
  • அருந்தப்படாத கோப்பை (2012)
  • சூரியனுக்கு அருகில் ஒரு வீடு (2013)
  • அந்நிய நிலத்தில் பெண் (2014)
  • ஊழியின் தினங்கள் (2016)
  • புலரியின் முத்தங்கள் (2016)
  • இருளில் நகரும் யானை (2016)
  • தித்திக்காதே (2016)
  • பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் (2017)
  • நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம் (2017)
  • கடல் பார்த்த வீட்டில் கடைசி நாள் (2018)
  • மாநகர பயங்கரவாதி (2018)
  • எழுந்து வா தலைவா (2018)
  • ஒரு நாளில் உனது பருவங்கள் (2019)
  • தீண்டி விலகிய கணம் (2019)
  • மர்ம முத்தம் (2019)
  • இரவுக்குக் கைகள் இல்லை (2019)
  • சிநேகிதியின் காதலர்கள் (2019)
  • வைரல் யானை (2019)
  • தரைக்கு வராத இலைகள் (தனிமையின் புத்தகம்)(2019)
  • மெளனப்பனி (2019)
  • வாதையின் கதை (2019)
  • அன்பில் ஒரு டீஸ்பூன் கூடிவிட்டது (2021)
  • அலெக்ஸா… நீ என்னைக் காதலிக்கிறாயா?
  • வசந்தம் வராத வருடம் (2021)
  • மிஸ் யூ…. இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது (2022)
கட்டுரைத் தொகுப்புகள்
  • காத்திருந்த வேளையில் (2003)
  • எப்போதும் வாழும் கோடை (2003)
  • என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் (2009)
  • டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன(2012)
  • தோன்ற மறுத்த தெய்வம் (2012)
  • எதிர் குரல் பாகம் 1 (2012)
  • இந்தியர்களின் போலி மனசாட்சி (2012)
  • நிழல்கள் நடந்த பாதை (2013)
  • குற்றமும் அரசியலும் (2013)
  • கைவிட்ட கொலைக்கடவுள் (2013)
  • நிழல்களோடு பேசுவோம் (2014)
  • சொல்கிறேன் அதனால் இருக்கிறேன் (2017)
  • நரகத்திற்கு போகும் பாதை (2017)
  • திராவிடத்தால் வாழ்ந்தோம் (2017)

இணைப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.