ப. சரவணன்
To read the article in English: P. Saravanan.
முனைவர் ப. சரவணன் (மே 14, 1978) தமிழாசிரியர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பொதுவாசிப்புக்கு உரிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வரலாறுகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இலக்கிய ஆளுமைகளைப் பற்றிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் எழுத்துப் பணிகளைப் பாராட்டி திருச்சி கௌரா பதிப்பகம் இவருக்கு 'எழுத்துலகத் தேனீ’ என்ற பட்டத்தை 2022-ல் வழங்கியது.
வாழ்க்கைக் குறிப்பு
சு. பழனிசாமி - ப. அனுசுயா தேவி தம்பதியருக்கு 14 மே 1978-ல் சென்னையில் பிறந்தார். மதுரை அல்-அமீன் பள்ளியில் கல்வியைத் தொடங்கி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும் சென்னையில் கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் திருச்செங்கோட்டில் கல்வியியலில் முதுகலைப் பட்டமும் மதுரை யாதவர் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றவர். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் சிறுகதைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் தமிழாசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் உள்ளார்.
இலக்கியச் செயல்பாடுகள்
கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றதால் மரபார்ந்த தமிழ் இலக்கியத்தின் மீது ஈடுபாடுகொண்டிருந்தார். பின்னர், எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துகளின் வழியாக நவீனத் தமிழ் இலக்கியத்தின் மீது விருப்பம் கொண்டு, விரிவாக வாசிக்கத் தொடங்கினார். தொடர்ந்து விமர்சனக் கட்டுரைகளை எழுதினார். 'சொல்புதிது’ சிற்றிதழ், 'மருதம்’ இணைய இதழ் ஆகியவற்றில் சில காலம் பணியாற்றினார். தொடர்ந்து சில இலக்கியக் கூட்டங்களை மதுரையில் நடத்தினார்.
விருதுகள்
- செந்தமிழ்த் திலகம் விருது – ஜூலை 23, 2011
- இலக்கியச் சுடா் விருது - ஜூலை 21, 2012
- எழுத்துலகத் தேனீ - 2022
இலக்கிய இடம்
நவீனத் தமிழ்ப் படைப்புகளின் மீது மரபார்ந்த தமிழ் ரசனை சார்ந்த விமர்சனங்களை முன்வைத்தவர் என்ற முறையில் இவர் தமிழ் இலக்கியப் பெரும்பரப்பில் அடையாளம் காணப்படுகிறார். உலகின் மிகப் பெரிய நாவலான வெண்முரசு குறித்த இவரின் நுட்பமான கட்டுரைகள் அனைத்தும் நவீனத் தமிழ் இலக்கிய வாசகர்களால் பெரிதும் கவனத்தில் கொள்ளப்பட்டன. சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில் இடம்பெற்றுள்ள மையக் கதைமாந்தரை இவர் மற்றுமொரு பரிமாணத்தில் 'ஜோ. ஜே. சிலரின் குறிப்புகள்’ என்ற நாவலின் வழியாகக் காட்டினார். இலக்கிய, வரலாற்று ஆளுமைகளைப் பற்றிய இவரின் கட்டுரைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை.
படைப்புகள்
ஆய்வு நூல்கள்
- மதுரைக்கோவில்
- தமிழ் இலக்கியமும் இலக்கணமும்
- பழந்தமிழ்க் கட்டுரைகள்
- நவீனப் பெண்ணியம்
- தமிழக வரலாறு (தொகுதி - 01)
- சிறுகதை வரலாறும் சில ஆளுமைகளும்
- நாவல் வரலாறும் சில ஆளுமைகளும்
- பண்டைய வல்லரசுகள்
- சிப்பாய்ப் புரட்சி
- ஜாலியன்வாலா பாக்
நாடக நூல்
- மேடைக்கூத்து
நாவல்கள்
- குழியானை
- வான்டட்
- அப்பாவின் கால்கள்
- நினைவுகளின் பேரணி
- ஜோ.ஜே - சிலரின் குறிப்புகள்
- தனிமையின் நிழலில்
- அழியாக முகம்
- நீயும் நானும்
- வழிப்பறி
- இருவர் எழுதிய டைரி
கவிதைத் தொகுப்புகள்
- மழைக்காலப் பாடகனும் மழையிசையும் (60 கவிதைகள்)
- மோகப்பரணி (100 கவிதைகள்)
- அன்பின் பூங்கொத்து (100 கவிதைகள்)
- இப்படிக்கு அன்புடன் (400 கவிதைகள்)
சிறுகதைத் தொகுப்புகள்
- விழிப்புணர்வு (25 சிறுகதைகள்)
- நிர்பயா (50 சிறுகதைகள்)
- ஓவியா (50 சிறுகதைகள்)
கட்டுரைத்தொகுப்புகள்
- சிந்தனைச் சிறகுகள்
- புனைவுலகில் ஜெயமோகன்
- புனைவுலகில் அ. முத்துலிங்கம்
- பாரதி (வியத்தகு ஆளுமை)
- தாகூர் (வியத்தகு ஆளுமை)
- வ.உ.சி. (வியத்தகு ஆளுமை)
- வள்ளலார் (வியத்தகு ஆளுமை)
- புலம்பெயர்ந்தோர் வாழ்க்கை
- இரும்புப் பூக்கள்
- விடுதலையின் விலை உயிர்
- எது சரி? எது தவறு?
- ஏன் படிக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்?
- சித்தர் நடந்த பாதை (அறம், பொருள், மனிதம்)
- எல்லோரும் எழுதலாம்
- ஆன்மிகப் புரட்சியாளர்கள்
- கார்ப்ரேட் கலாச்சாரம்
- இயற்கையின் புன்னகை
சிறுவர் இலக்கியங்கள்
- ஈசாப் (நீதி சார்ந்த கதைகள்)
- தெனாலிராமன் (அறிவு சார்ந்த கதைகள்)
- பஞ்சதந்திரம் (அரசியல் சார்ந்த கதைகள்)
தன்னம்பிக்கை நூல்கள்
- டீம் ஒர்க்
- லீடர்
- ஸ்மார்ட் ஒர்க்
- மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட்
- டைம் மேனேஜ்மெண்ட்
- மைண்ட் மேனேஜ்மெண்ட்
- பிசினஸ் மேனேஜ்மெண்ட்
✅Finalised Page