being created

நா. தர்மராஜன்

From Tamil Wiki
Revision as of 21:26, 2 December 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Images Added, Inter Link Created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நா. தர்மராஜன்

நா. தர்மராஜன் (பிறப்பு: ஆகஸ்ட் 4, 1935) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றினார். ரஷ்ய இலக்கியயங்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார். பொதுவுடைமை இயக்கம் சார்ந்த தொழிற்சங்கவாதி. 60 ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

பிறப்பு, கல்வி

நா. தர்மராஜன், ஆகஸ்ட் 4, 1935-ல், சிவகங்கையில், நாராயண சேர்வைக்கு மகனாகப் பிறந்தார். நாராயண சேர்வை, சிவகங்கை மன்னர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அதே பள்ளியில் கல்வி பயின்றார் தர்மராஜன். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

தர்மராஜன், தான் பயின்ற சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர்.

நா. தர்மராஜன், தான் மொழியாக்கம் செய்த சில நூல்களுடன்.

இலக்கிய வாழ்க்கை

பள்ளி நூலகம் மூலம் வெ. சாமிநாத சர்மா, சுத்தானந்த பாரதி, தி. ஜ. ரங்கநாதன் போன்றோரது மொழிபெயர்ப்பு நூல்கள் அறிமுகமாகின. ஜேன் ஆஸ்டின், எர்னெஸ்ட் ஹெமிங்வே, ஆர்.எல்.ஸ்டீவன்சன், ஜார்ஜ் பெர்னாட் ஷா போன்றோரது நூல்களை வாசித்ததன் மூலம் மொழிபெயர்ப்பில் ஆர்வம் உண்டானது. முதல் மொழியாக்கப் படைப்பு 1958-ல் ‘ஜனசக்தி’ இதழில் வெளியானது. ஐரிஷ் எழுத்தாளரான சீன் ஓ கேசியின் (Sean O’ Casey) ‘The Worker Blows the Bugle’ என்ற கதையை  ’உழைப்பாளியின் சங்கநாதம்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். அதுமுதல் தொடந்து மொழியாக்கப் பணிகளில் ஈடுபட்டார். ‘தாமரை' இதழ் இவரது ஆக்கங்களுக்கு இடமளித்தது. ஜீவா இவரை தொடர்ந்து எழுத ஊக்குவித்தார். 1960-ல் சீனக்கதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார். அதற்குக் கிடைத்த வரவேற்பு, ‘இத்தாலியக் கதைகள்’ எழுதத் தூண்டுகோலானது. இ. எம். பாஸ்டரின் ‘பாஸேஜ் டு இண்டியா’ என்ற நூலை “இந்தியா: மர்மமும் சவாலும்” என்று மொழிபெயர்த்தார்.

ரஷ்ய இலக்கிய மொழிபெயர்ப்புகள்

நா. தர்மராஜனின் மொழியாக்கத் திறனை அறிந்த சோவியத், அரசு இவரை மேலும் பல நூல்களை மொழிபெயர்த்துத் தர மாஸ்கோவிற்கு அழைத்தது. 1980 முதல் 1988 வரை எட்டு ஆண்டுகள் குடும்பத்துடன் அங்கு தங்கி ரஷ்ய இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்திற்காக (Progress Publications) மாக்ஸிம் கார்கி, புஷ்கின், டால்ஸ்டாய் போன்றோரது நூல்களைத் தமிழில் தந்தார். லியோ டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ தவிர்த்து அவரது அனைத்துப் படைப்புகளையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அரசியல், இலக்கியம், வரலாறு, தத்துவம், சிறுதை, நாவல் போன்ற தலைப்புகளில் இவரது மொழியாக்கங்கள் அமைந்தன.

மாஸ்கோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி, முன்னேற்றப் பதிப்பகத்தில் பணிபுரிந்த தமிழறிந்த ரஷ்யர் சோபலோவ் போன்றோர் தர்மராஜனின் மொழிபெயர்ப்பைப் பாராட்டி ஊக்குவித்தனர்.

பிற மொழிபெயர்ப்புகள்

நா. தர்மராஜன், ரஷ்ய இலக்கியங்கள் மட்டுமல்லாமல், மேற்கத்திய இலக்கியங்கள் பலவற்றையும் தமிழில் தந்திருக்கிறார். லியோ டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனினா’, ‘பாரிஸ் கம்யூன்’, ‘மகாத்மா - சில பார்வைகள்’, ‘கசாக்குகள்’ போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தன. ஐன்ஸ்டீன், ஜவஹர்லால் நேரு, கார்ல் மார்க்ஸ், ஹோ-சி-மின், எம்.என்.ராய், பிடல் கேஸ்ட்ரோ போன்றோர் பற்றி இவர் எழுதியிருக்கும் வாழ்க்கை வரலாறுகள் பலராலும் வரவேற்கப்பட்டன.

நூற்றிருபதுக்கும் மேற்பட்ட நூல்களையும், ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் நா. தர்மராஜன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். விரிவான நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், சுருக்கமான நூல்களாகவும் மொழிபெயர்த்துள்ளார். தனது படைப்புகள் மூலம் நட்புச் சலுகை, நேசச் சலுகை, அறம் சாராமை போன்ற பல புதிய கலைச்சொற்களை தமிழுக்குத் தந்தார்.

சமூகப் பணிகள்

கல்லூரியில் படிக்கும்போது ஜீவாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சிப்பணிகளில் ஈடுபட்டார். பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவில் இருந்தபோது, சக ஆசிரியர்களது உரிமைகளுக்காகப் போராடினார். ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்காகப் பல போராட்டங்களை நடத்தினார். கல்லூரி, அரசுக் கல்லூரியாக மாற்றமடைவதற்குக் காரணமானார்.

பொறுப்புகள்

  • கல்லூரி மாணவர் தலைவர்.
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் துணைப் பொதுச் செயலாளர்.
  • பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்.
  • மாஸ்கோ ஹிந்துஸ்தானி சமாஜத் தலைவர்.

விருதுகள்

  • கலை இலக்கியப் பெருமன்ற விருது - மைக்கேல் கே - சில குறிப்புகள் நூலுக்கு
  • தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கிய சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது.
  • சாமிநாத சர்மா ட்ரஸ்ட் வழங்கிய வெ.சாமிநாத சர்மா விருது.
  • தமிழ்நாடு மொழிபெயர்ப்பாளர்கள் சங்க விருது வழங்கிய சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது.
  • நல்லி திசையெட்டும் வழங்கிய மொழிபெயர்ப்புக்கான ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது.
  • மொழி பெயர்ப்புச் செம்மல் விருது.


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.