being created

தைந்நீராடல்

From Tamil Wiki
Revision as of 04:47, 11 December 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "தற்காலத்தில் பாவைப்படல்களான திருப்பாவையும், திருவெம்பாவையும் மார்கழி மாதத்தில் ஆலயங்களில் ஓதப்படுகின்றன.. மழைக்காலம் ஓய்ந்த மார்கழி, தை ஆகிய குளிர் மாதங்களில் அதிகாலை பொய்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தற்காலத்தில் பாவைப்படல்களான திருப்பாவையும், திருவெம்பாவையும் மார்கழி மாதத்தில் ஆலயங்களில் ஓதப்படுகின்றன.. மழைக்காலம் ஓய்ந்த மார்கழி, தை ஆகிய குளிர் மாதங்களில் அதிகாலை பொய்கை நீராடி பாவைப்பாடல் பாடும் வழக்கம் சங்க காலம் முதலே தமிழரிடம் இருந்து வருகிறது. மார்கழி மாத நிறைமதி (பௌர்ணமி) தொடங்கி தை மாத நிறைமதி நாள் வரையிலும் இளம் பெண்கள் பொய்கையிலும் , சுனைகளிலும் நீராடி நோன்பு நோற்றனர். சங்க இலக்கியங்கள் இச்செயலைத் ‘தைந்நீராடல்’ எனக் குறிப்பிடுகின்றன.

அக்காலத்தில் அமாவாசை தொடங்கி மறு அமாவாசையில் முடியும் கால அளவு ஒரு மாதம் என்றும், பௌர்ணிமை தொடங்கி மறு பௌர்ணிமையில் முடியும் கால அளவு ஒரு மாதம் என்றும் இருவகையாக முன்னோர் கணக்கிட்டனர். அவை முறையே 'அமாந்தம்' (அமாவாசையோடு முடிவுறும் மாத கலம்), 'பூர்ணிமாந்தம்' (பௌர்ணிமையோடு முடிவு பெறும் மாத காலம்) எனப் பெயர் பெற்றன. அம்முறைப்படி மார்கழித் திங்களின் இடையில் பௌர்ணிமைக்குப் பின் வரும் மாதம் - மார்கழியின் பிற்பகுதியும், தையின் முற்பகுதியும் ஆகும். அதனால் தான் மார்கழி நோன்பு 'மார்கழி நீராடல்' என்றும், 'தைந்நீராடல்' என்றும் இருவகையாக வழங்கப் பெற்றது. (பேராசிரியர் மு.இராகவையங்கார் ஆராய்ச்சித் தொகுதி பக்கம் 196) . பௌர்ணமாந்தத்தில் மதியை(சந்திரனைக்) கொண்டு மாதங்கள் கணக்கிடப்பட்டிருக்கலாம். சம்ஸ்கிருதத்தில் ஒவ்வொரு மாதத்தின் பெயரும் அந்தமாதத்தில் முழுநிலவு தினத்தின் விண்மீனின் பெயராலேயே அழைக்கப்படுகிறது( சைத்ரம்(சித்திர)-சித்திரை,வைகாசி- விசாகம், புஷ்யம்(தை)-பூசம், மார்கஷிரம்(மார்கழி)-மிருகசீரிஷம்). மார்கழி முழுநிலவு நாள் முதல் தை முழுநிலவு நாள் வரை தை மாதம் என்று வழங்கியிருக்கலாம். ஜோதிடத்தில் இது பௌர்ணமாந்தம் என அழைக்கப்படுகிறது.[1][2]

தைந்நீராடலைப் பற்றிய குறிப்பு பரிபாடல், ஐங்குறுநூறு[3], நற்றிணை[4], கலித்தொகை[5], குறுந்தொகை[6] போன்ற சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கிறது. பரிபாடலில் திருவாதிரை அன்று தொடங்கி வைகையில் முதிய பெண்கள் முறைமை கூறி வழிகாட்ட கன்னியர் 'அம்பா ஆடல்' என்னும் தை நீராடிய குறிப்பு காணப்படுகிறது.

ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிரை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப
வெம்பா தாக வியனில வரைப்பென
   அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
     பனிப் புலர்பு ஆடி

இளம் பெண்கள் தம் தாயோடு நீராடியதால் இது 'அம்பா ஆடல்' எனப் பெயர்பெற்றது என பரிமேலழகர் தம் உரையில் குறிப்பிடுகிறார். வேறு உரையாசிரியர்கள் பராசக்தி அன்னையை வேண்டி நோன்பு நோற்பதஆல் 'அம்பா ஆடல்' எனப் பெயர் வந்ததாகக் கருதுகின்றனர். தைந்நீராடலின் போது பெண்கள் நல்ல கணவன் தமக்கு அமைய வேண்டுமென்று நோன்பு நோற்றதாகப் பரிபாடலுக்கு உரை எழுதிய பரிமேலழகர், கலித்தொகைக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

"திருவாதவூரடிகள் புராணத்துட் கூறப்பட்ட படி மார்கழிநீராடல் திருவாதிரைக்குப் பத்துநாட்கள் முன் தொடங்கித் திருவாதிரையில் முடிவுபெறும் என்பதும், தைந்நீராடல் மார்கழித் திருவாதிரையில் தொடங்கி நடைபெறும் என்பதும் இங்கே கண்ட வேறுபாடாம். நூற்பிரமாணம் உள்ளனவும் இல்லனவுமாய் மக்கள் வழக்கவொழுக்கங்களிற் காணப்படும் இன்னோரன்ன நிகழ்ச்சிகள் இங்ஙனம் காலந்தரத்தில் வேறுபடுதல் இயல்பே." (பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், திருவெம்பாவை உரை , பக்கம் 14)



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

  1. பாவை நோன்பு மார்கழி நீராடலா, தை நீராடலா, தென்றல் இதழ், ஜனவரி 2007
  2. பாவைப் பாட்டும் பாவை நோன்பும் – சௌந்திர. சொக்கலிங்கம்
  3. நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்
    தைஇத் தண் கயம் போல

  4. இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ,
    தைஇத் திங்கள் தண் கயம் படியும்பெருந் தோட் குறுமகள்

  5. வை எயிற்றவர் நாப்பண், வகை அணிப் பொலிந்து, நீ
    தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?

  6. பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர்
    இத் திங்கள் தண்ணிய தரினும்,
    வெய்ய உவர்க்கும் என்றனிர்