திருக்கோவையார்

From Tamil Wiki
Revision as of 17:11, 11 April 2022 by Siva Angammal (talk | contribs)

This page is created by ka. Siva

திருக்கோவையார் என்னும் நூல் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது. இந்நூல் பன்னிரண்டு சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சிற்றம்பலக் கோவையார் என்றும் இந்நூல் அழைப்படுகிறது.

ஆசிரியர் குறிப்பு

திருக்கோவையார் நூலை எழுதிய மாணிக்கவாசகர் மதுரையை அடுத்த திருவாதவூரில் பிறந்தவர். இவர் திருவாதவூரார் என்று முதலில் அழைக்கப்பட்டார். அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்தவர். ‘தென்னவன் பிரமராயன்’ என்ற விருது பெற்றவர். ஆளுடைய அடிகள், அழுது அடியடைந்த அன்பர் என்றெல்லாம் குறிக்கப்படுபவர். பாண்டியனுக்காகக் குதிரைகள் வாங்க நாகப்பட்டினம் துறைமுகத்துக்குச் சென்றார். செல்லும் வழியில் திருப்பெருந்துறையில் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டார். வந்த வேலையை மறந்தார். கொண்டு வந்த பணத்தை சிவனுக்குக் கோயில் கட்டும் பணியில் செலவிட்டதால்  மன்னனால்  தொல்லைகளை அடைந்தார். மாணிக்கவாசகரின் துன்பத்தைக் கண்ட இறைவன் நரிகளை பரிகளாக மாற்றி மதுரைக்கு கொண்டு வந்ததுடன் வைகையில் வெள்ளம் பெருக வைத்தார். மேலும் கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்து மன்னனிடம் பிரம்படி பட்டார். அந்தப் பிரம்படி உலகிலுள்ள அனைத்து உயிர்களின் மீதும் பட்டதால் திகைத்த மன்னனிடம் திருவாதவூராருக்காக தான் வந்ததாக உரைத்தார்.  மன்னன் மாணிக்கவாசகரின் சிறப்பை உணர்ந்து வணங்கினான். மாணிக்கவாசகர் ஒவ்வொரு சிவ தலங்களுக்கும் சென்று வணங்கி பாடல்கள் பாடினார். சிதம்பரத்தில் இவர் இருந்தபோது இவரது பாடல்களை இறைவனே எழுதி கையொப்பம் இட்டதாக இவரது வரலாறு உரைக்கப்படுகிறது. மாணிக்கவாசகர் இயற்றிய மற்றொரு நூல் திருவாசகம்

நூல் அமைப்பு

திருக்கோவையார் நூலில் 400 பாடல்கள் உள்ளன. இந்நூலை ஆரணம் (வேதம்) என்பர் சைவ சமய சாதகர்கள். இந்நூல் கீழ்காணும் 25 அதிகாரங்களை கொண்டுள்ளது;

  1. இயற்கைப் புணர்ச்சி (18பாடல்கள்)
  2. பாங்கற் கூட்டம் (30 பாடல்கள்)
  3. இடந்தலைப் பாடு (1பாடல்)
  4. மதியுடம்படுத்தல் (10பாடல்கள்)
  5. இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல் (2பாடல்கள்)
  6. முன்னுற வுணர்தல் (1பாடல்)
  7. குறையுற வுணர்தல் (4பாடல்கள்)
  8. நாண நாட்டம் (5பாடல்கள்)
  9. நடுங்க நாட்டம் (1பாடல்கள்)
  10. மடல் திறம் (9பாடல்கள்)
  11. குறை நயப்புக் கூறல் (8பாடல்கள்)
  12. சேட்படை (26பாடல்கள்)
  13. பகற்குறி (32பாடல்கள்)
  14. இரவுக் குறி (33பாடல்கள்)
  15. ஒருவழித் தணத்தல் (13பாடல்கள்)
  16. உடன் போக்கு (56பாடல்கள்)
  17. வரைவு முடுக்கம் (16பாடல்கள்)
  18. வரை பொருட் பிரிதல் (33பாடல்கள்)
  19. மணம் சிறப்புரைத்தல் (9பாடல்கள்)
  20. ஓதற் பிரிவு (4பாடல்கள்)
  21. காவற்பிரிவு (2பாடல்கள்)
  22. பகை தணி வினைப் பிரிவு (2பாடல்கள்)
  23. வேந்தற்கு உற்றுழிப் பிரிவு(16பாடல்கள்)
  24. பொருள் வயின் பிரிவு (20பாடல்கள்)
  25. பரத்தையிற் பிரிவு (49பாடல்கள்)

உள்ளடக்கம்

திருக்கோவையார் பேரின்ப நூல் ஆகும். மேலோட்டமாகக் காணும்பொழுது அகத்திணை நூல் போல் காட்சி தருகிறது. அன்பே சிவமாகவும், அருளே காரணமாகவும், சுத்த அவத்தையே நிலமாகவும், நாயகி பரம்பொருளாகவும், நாயகன் ஆன்மாவாகவும், தோழி திருவருளாகவும், தோழன் ஆன்மபோதமாகவும், நற்றாய் அம்மையாகவும், சித்திரிக்கப் பட்டுள்ளனர்.

பதிப்பு

திருக்கோவையார்  நூல் 1841-இல் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலின்  பதிப்பாசிரியர் புதுவை நயநப்ப முதலியார் ஆவார். இந்தப் பதிப்பின் பிரதியே தமிழ் மின் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பு

திருக்கோவையார் நூலை முனைவர் T.N. ராமச்சந்திரன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

சிறப்பு

"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர்"

என்ற வெண்பாவின் மூலம் பெருநூல்களின் வரிசையில் திருக்கோவையாரும் இடம் பெற்றுள்ளதை அறியலாம்.

வெண்பாவின் பொருள்;

திருக்குறள், நால்வேத முடிவு, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் தேவாரமும் (மூவர் தமிழும்), முனிவர்கள் மொழியும், திருக்கோவையாரும், திருவாசகமும், திருமந்திரமும் ஒரு வாசகமே (உணர்த்தும் உண்மைப் பொருள் ஒன்றே).

திருமுறையில் பெற்ற இடம்

சைவ சமய நூல்களின் தொகுப்பு பன்னிரு திருமுறைகள் என அழைக்கப்படுகிறது. இதில் எட்டாம் திருமுறையாக மாணிக்கவாசகர் இயற்றிய நூல்களான திருவாசகமும் திருக்கோவையாரும் வைக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை

https://www.tamilvu.org/library/nationalized/scholars/html/others.htm

http://thevaaram.org/thirumurai_1/ani/082tnr1.htm

தமிழ் மின் நூலகம்; https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM3k0Iy#book1/

திருக்கோவையார் ஆங்கில   மொழிபெயர்ப்பு: Dr. T.N. Ramachandran, தமிழ் பல்கலைக்கழகத்தின் வெளியீட்டு எண்: 119, 1989, ISBN:

Attachments area