டி.செல்வராஜ்

From Tamil Wiki
Revision as of 23:42, 28 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|டி.செல்வராஜ் டி.செல்வராஜ் (14,ஜனவரி 1938 -20 டிசம்பர் 2019 ) தமிழ் எழுத்தாளர். இடதுசாரிப் பார்வையுடன் எழுதியவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பின...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
டி.செல்வராஜ்

டி.செல்வராஜ் (14,ஜனவரி 1938 -20 டிசம்பர் 2019 ) தமிழ் எழுத்தாளர். இடதுசாரிப் பார்வையுடன் எழுதியவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர். மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

டி.செல்வராஜ் திருநெல்வேலி மாவட்டம் தென்கலம் கிராமத்தில் டேனியல் - ஞானம்மாள் தம்பதியினருக்கு 14-ஜனவரி -1938 ல் பிறந்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த டி.செல்வராஜின் தந்தை தேவிகுளம், மூணாறு தேயிலைத் தோட்டங்களில் கங்காணியாகப் பணியாற்றினார். மூணாறு, தேவிகுளம் தேயிலைத்தோட்டங்களில் அமைந்த திருவிதாங்கூர் கொச்சி அரசுபள்ளிகளில் ஆரம்பக் கல்வி பயின்றார். நெல்லை ம.தி.தா.இந்துக் கல்லூரியில் (1959) பி.ஏ. பொருளாதாரத்தில் பட்டம் பெற்றபின் சென்னைச் சட்டக்கல்லூரியில் (1962) இளநிலை சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

டி.செல்வராஜின் மனைவி பெயர் பாரதபுத்ரி. சித்தாத்தன் பிரபு, சார்வாகன் பிரபு, வேதஞானலட்சுமி ஆகியோர் பிள்ளைகள். டி.செல்வராஜ் திண்டுக்கல்லில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

டி.செல்வராஜ் திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் பயிலும்போது தி. க. சிவசங்கரன்,தொ.மு.சி. ரகுநாதன், பேராசிரியர் நா. வானமாமலை போன்ற இலக்கியவாதிகளுடன் தொடர்பில் இருந்தார். அரசியல்நடவடிக்கைகளில் பங்கு கொண்டார். ரகுநாதன் வெளியிட்டு வந்த ‘சாந்தி’ இலக்கிய இதழில் அவருடைய தொடக்ககாலப் படைப்புகள் வெளியாகின.‘ஜனசக்தி’ வார மலர்களிலும் அவரது கதைகள் வெளியாகின. கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழான ‘ஜனசக்தி’யிலும் இலக்கிய இதழான ‘தாமரை’யிலும் பகுதி நேர ஊழியராகப் பணியாற்றினார்.