டி.செல்வராஜ்

From Tamil Wiki
டி.செல்வராஜ்

டி.செல்வராஜ் (14,ஜனவரி 1938 -20 டிசம்பர் 2019 ) தமிழ் எழுத்தாளர். இடதுசாரிப் பார்வையுடன் எழுதியவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர். மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

டி.செல்வராஜ் திருநெல்வேலி மாவட்டம் தென்கலம் கிராமத்தில் டேனியல் - ஞானம்மாள் தம்பதியினருக்கு 14-ஜனவரி -1938 ல் பிறந்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த டி.செல்வராஜின் தந்தை தேவிகுளம், மூணாறு தேயிலைத் தோட்டங்களில் கங்காணியாகப் பணியாற்றினார். மூணாறு, தேவிகுளம் தேயிலைத்தோட்டங்களில் அமைந்த திருவிதாங்கூர் கொச்சி அரசுபள்ளிகளில் ஆரம்பக் கல்வி பயின்றார். நெல்லை ம.தி.தா.இந்துக் கல்லூரியில் (1959) பி.ஏ. பொருளாதாரத்தில் பட்டம் பெற்றபின் சென்னைச் சட்டக்கல்லூரியில் (1962) இளநிலை சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

டி.செல்வராஜின் மனைவி பெயர் பாரதபுத்ரி. சித்தாத்தன் பிரபு, சார்வாகன் பிரபு, வேதஞானலட்சுமி ஆகியோர் பிள்ளைகள். டி.செல்வராஜ் திண்டுக்கல்லில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

டி.செல்வராஜ் திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் பயிலும்போது தி. க. சிவசங்கரன்,தொ.மு.சி. ரகுநாதன், பேராசிரியர் நா. வானமாமலை போன்ற இலக்கியவாதிகளுடன் தொடர்பில் இருந்தார். அரசியல்நடவடிக்கைகளில் பங்கு கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழான ‘ஜனசக்தி’யிலும் இலக்கிய இதழான ‘தாமரை’யிலும் பகுதி நேர ஊழியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

நெல்லை மாவட்டத்தில் நடந்த முதல் ஆசிரியர்சங்க போராட்டத்தை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட டி.செல்வராஜின் முதல் கதை ஜனசக்தி இதழில் 1959ல் வெளியாகியது. தொ.மு.சி. ரகுநாதன் வெளியிட்டு வந்த ‘சாந்தி’ இலக்கிய இதழில் அவருடைய தொடக்ககாலப் படைப்புகள் வெளியாகின.‘ஜனசக்தி’ வார மலர்களிலும் அவரது கதைகள் வெளியாகின.

டி.செல்வராஜ் 1964 ல் தன் 26 வயதில் தன் முதல் நாவலான ’மலரும் சருகும்’ ஐ எழுதினார். நெல்லை வட்டாரத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் விவசாய வாழ்க்கையையும்,அன்று அம்மக்கள் நெல்லை கூலியாக பெறுவதற்காக நடத்திய ‘முத்திரை மரக்கால்’ போராட்டத்தையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் மையமாகக் கொண்ட தேநீர் நாவல், திண்டுக்கல் வட்டார தோல் தொழிலாளர்கள் பற்றிய தோல் ஆகியவை குறிப்பிடத்தக்க நாவல்கள்.

இலக்கிய இடம்

பாட்டாளி மக்களின், குறிப்பாக, பள்ளர் சமூகத்தைச் சார்ந்த விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை யினைத் திறம்படத் தமது கதைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்’ என்று செக் நாட்டுத் தமிழறிஞர் கமில்சுவலபில் தனது ‘தமிழிலக்கிய வரலாறு’ நூலில் குறிப்பிட்டுள்ளார் (1973).

உசாத்துணை