under review

ஞானப் பள்ளு

From Tamil Wiki
Revision as of 11:14, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஞானப் பள்ளு நூல்

ஞானப் பள்ளு, கிறித்தவ சமயம் சார்ந்து இயற்றப்பட்ட இலங்கையின் முதல் பள்ளு நூல். இதனை இயற்றியவர் பெயரை அறிய இயலவில்லை. (பேதுறுப் புலவர் இந்நூலை இயற்றியதாக ஒரு கருத்து உள்ளது) இலங்கை வாழ் மக்களிடையே கத்தோலிக்க மத நம்பிக்கைகளை ஏற்படுத்துவதற்காக இந்த நூல் இயற்றப்பட்டது. இதன் காலம் 17-ம் நூற்றாண்டு. இதன் பாட்டுடைத் தலைவர் இயேசுநாதர். இந்நூலுக்கு ‘வேதப்பள்ளு’ என்ற பெயரும் உண்டு.

பதிப்பு, வெளியீடு

இலங்கையில் கத்தோலிக்க மதம் பரப்பிய மதகுருமார்கள் கூத்து இலக்கிய மரபைத் தழுவி, 'மூவிராசாக்கள்', 'ஞானசவுந்தரி' போன்ற விவிலியத்தை மையமாகக் கொண்ட பல்வேறு கதைகளைத் தமிழ்ப்புலவர்களின் துணைகொண்டு எழுதி வெளியிட்டனர். அவ்வாறு, இயேசு சபையை சேர்ந்த செபஸ்த்தியன் பொஞ்சகொ சுவாமிகளின் உதவியுடன், 17-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல் ஞானப் பள்ளு.

1904-ல், இலங்கையில், இந்நூலின் முதல் பதிப்பு, ஸ்ரீ.வ.லோ. அமிர்தநாதபிள்ளையால் அச்சிடப்படு வெளியானது. இதன் இரண்டாம் பதிப்பு, இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், கலாநிதி ஆ. சதாசிவம் அவர்களால், 1968-ல், அச்சிடப்பட்டு வெளியானது. இதன் புதிய மீள் பதிப்பு, இலங்கையில், 2018-ல், திருஞானேஸ்வரி சதாசிவத்தால், அவரது சதாசிவம் பதிப்பகம் மூலம் அச்சிடப்பட்டது.

ஆசிரியர் குறிப்பு

ஞானப் பள்ளு நூலை இயற்றிய ஆசிரியரின் பெயரை அறிய இயலவில்லை. (பேதுறுப் புலவர் இந்நூலை இயற்றியதாக ஒரு கருத்து உள்ளது) இவர் கத்தோலிக்க சமயம் சார்ந்தவர், யாழ்ப்பாணத்தில் வசித்தவர் என்பதை நூலின் மூலம் அறிய முடிகிறது.

நூல் அமைப்பு

கத்தோலிக்க சமயத்தைப் புகழ்ந்து, இயேசுநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப்பட்ட பள்ளு இலக்கியமாதலால் இந்த நூல் ‘ஞானப் பள்ளு’ என்ற பெயர் பெற்றது. ஞானப் பள்ளு நூலில் 257 செய்யுள்கள் உள்ளன. இவை சிந்து, கலி, விருத்தம், வெண்பா போன்ற பா வகைகளில் அமைந்துள்ளன. நூலின் முகப்பில் கடவுள் வணக்கம், காப்புச் செய்யுள், அவையடக்கம், ஆசிரியர் வணக்கம், தரு ஆகியன இடம் பெற்றுள்ளன.

மூத்தபள்ளி, இளையபள்ளி, பள்ளன், பண்ணைக்காரன் ஆகிய நால்வர் இந்நூலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் மூத்தபள்ளி, பள்ளன் இருவரும் கிறிஸ்து பெருமானின் பிறப்பிடமாகிய ஜெருசலேமைச் சேர்ந்தவர்கள். இளையபள்ளி, கத்தோலிக்கத் திருச்சபை அமைந்துள்ளதும், போப்பாண்டவரின் தலைமைப்பீடமுமான ரோம் நகரைச் சேர்ந்தவள். பண்ணைக்காரன் ரோமாபுரியில் உள்ள பண்ணைவயலுக்கு உரிமையாளன். இந்நால்வருள் மூத்தபள்ளி மற்றும் இளையபள்ளியைச் சுற்றியே கதை நிகழ்வதாக இப்பள்ளு நூல் அமைந்துள்ளது.

இந்நூலில் வரும் பள்ளிகள் இருவரும் நாட்டு வளம் கூறும் போது தாங்கள் வசிக்கும் ஈழத்தைப் பற்றிப் பாடாது, ரோமாபுரியைப் பற்றியும் செருசேலமைப் பற்றியுமே பாடியுள்ளனர். இந்நூலில் இளைய பள்ளி இயேசு மீது பற்றுடையவளாகவும், சமயச் சார்பு உடையவளாகவும் காட்டப்பட்டுள்ளாள். மூத்தப்பள்ளி ஒழுக்கமற்றவளாகச் சித்திரிக்கப்பட்டுள்ளாள். பிற பள்ளு நூல்களில் கொடியவனாகவும், கொடுமை செய்பவனாகவும் வரும் பண்ணைக்காரன், ‘ஞானப் பள்ளு’ நூலில், தர்மத்தை போதிக்கும் கிறிஸ்தவ மத குருவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். இறுதியில் அனைவரும் ஒன்றிணைவதுடன் ஞானப் பள்ளு நூல் நிறைவடைகிறது.

பாடல்கள்

இயேசுவின் பெருமை

ஈறில் லாதவன் றானாயி ருப்பவன்
என்றும் உள்ளவன் எல்லாம றிந்தவன்
மாறில் லாதவன் மாட்சிமை யுள்ளவன்
வளரு நன்மைச்சொ ரூபம தானவன்
பேறு தானவன் பேரின்ப முள்ளவன்
பிறந்தி றக்குஞ்ச ரீரமில் லாதவன்
ஆறு லட்சண முள்ளவ னேகனா
மவனே கத்தன றிந்துகொள் நெஞ்சமே

அறிவுரைகள்

ஈட்டி யீட்டிப் புதைக்குந் தனங்களும்
இரப்ப வர்க்கொன்று மீயாம னங்களும்
மூட்டி மூட்டி முழுநர குக்கிடு
மோச வாழ்க்கையும் முந்துகு ணங்களும்
கூட்டை விட்டுயிர் போகின்ற வேளையிற்
கூடி நம்முடன் வாராது மாந்தரே
போட்டு வித்தொழி லம்பரத் தாதிமுன்
போக வேணும் புரியுஞ்ச னங்களே.


சகல வல்லவர் சத்திய வாசகர்
தாம னைத்தையுந் தாங்கவும் வல்லவர்
அகல மாகிய வைம்பதஞ் செய்தவர்
அத்த னைக்கும ருளாகி நின்றவர்
பகலி ராவும் படியே யளப்பவர்
பத்தி யுற்றவர்க் கற்புத மீபவர்
புகலும் வேதத்தி லுண்மையைச் சேர்ந்தவர்
பொன்னு லகத்தி லுண்மையுஞ் சேர்வரே
இணக்க மோநன்மை யீனமெல் லாந்தின்மை
யிறந்து போற திதுவே கடனுண்மை


வணக்க மேசெய்து வாணாளை நம்புறீர்
மதியி லாதநன் மாநில மாக்களே
பிணக்க மேசெய்யும் பேயுமு டல்களும்
பெருத்த லோகமும் பின்னுத வாதுகாண்
கணக்கெ லாம்முற்று நாளி லொருவ னைக்
கண்ட னுதொழக் காரணங் காணுமே

மதிப்பீடு

விவிலியத்தில் வரும் பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளை மையமாக வைத்து ஞானப் பள்ளு நூல் இயற்றப்பட்டுள்ளது. இலங்கை வாழ் மக்கள், கிறிஸ்தவ மதம் பற்றிய கருத்துக்களை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பிரச்சாரத் தன்மை வாய்ந்ததாக இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது. பிற பள்ளு நூல்களில் இடம் பெறும் சிருங்கார ரசக் கூறுகள் ஞானப்பள்ளு நூலில் இடம்பெறவில்லை. கிறிஸ்தவ இலக்கியம் சார்ந்து இலங்கையில் தோன்றிய முதல் பள்ளு நூலாக, ‘ஞானப் பள்ளு’ அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page