under review

ஆ. சதாசிவம்

From Tamil Wiki
ஆ. சதாசிவம்

ஆ. சதாசிவம் (பிப்ரவரி 15, 1926 - ஜூலை 1, 1988) தமிழறிஞர், மொழியியல் ஆய்வாளர். ஈழத்து தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தின் தொகுப்பாளர். தமிழ் மொழியியல் சார்ந்த நூல்கள் பல எழுதினார்.

பிறப்பு கல்வி

ஆ. சதாசிவம் இலங்கை அராலி தெற்கில் பிப்ரவரி 15, 1926-ல் பிறந்தார். ஆரம்பக்கல்வியை அராலியில் பயின்றார். இடைநிலைக்கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்றார். கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் உயர்நிலைக்கல்வியைக் கற்றார். மதுரை தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றார். 1948-ல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1952-ல் சிறப்புக் கலைமாமணிபட்டத்தைப் பெற்றார். 1956-ல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தாமஸ் பரோவின் கீழ் கலாநிதி பட்டம் பெற்றார். சேர் மகாராசா சிங்கினுடைய பரிசிலும் கிடைத்தது.

கல்விப்பணி

ஆ. சதாசிவம் 1952-ல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். 1956-ல் முது நிலை விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். ஆய்வாளர்களை நெறிப்படுத்தினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கேரள பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கலாநிதிப்பட்ட ஆய்வேடுகளை வெளிவாரித் தேர்வாளராக மதிப்பீடு செய்யும் பணி செய்தார்.

மொழியியல் ஆய்வு

ஆ. சதாசிவம் மொழியியல் ஆய்வாளர். சொல்லாய்வில் ஈடுபட்டிருந்தார். தமிழின் சொல்லிக்கணத்தை விரிவாக தமிழ் வினைச் சொற்களின் அமைப்பு என்னும் தலைப்பில் இரு தொகுதிகளாக எழுதினார். தமிழ்ச் சொற்களின் பிறப்பு நெறி அவர் எழுதிய இன்னொரு குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்

சுமேரிய மொழி ஆராய்ச்சியில் 23 ஆண்டுகள் ஈடுபட்டிருந்தார். ’சுமேரியன் ஒரு திராவிட மொழி’ என்ற நூலை இவர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். சுமேரிய மொழிக்கும் தமிழுக்குமான சொல்லிணக்கணத்தின் பொதுத்தன்மையை விரிவாக எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

ஆ. சதாசிவம் தமிழ், மலையாளம், ஆங்கிலம், பாலி ஆகிய மொழிகளில் புலமையுடையவர். சங்க காலம் முதல் இருபதாம் நூற்றாண்டு மத்திவரை ஈழத்தில் தோன்றிய புலவர்களின் செய்யுட்களை கால வரிசைப்படுத்தி ’ஈழத்து கவிதைக் களஞ்சியத்தை’ வெளியிட்டார். ஈழத்தின் ஞானப்பள்ளு நூலை ஆராய்ந்து பதிப்பித்தார்.

ஆ. சதாசிவம் தமிழ் மொழியின் வரலாற்றை எழுதினார். ஈழத்துப் பேச்சுத்தமிழ் அகராதியை வெளியிட்டார்.

விருது

  • ஃபுல் பிரைட் புலமைப் பரிசில் பெற்றார்.
  • பொது நலவமைப்பு நாட்டுப் புலமைப் பரிசில் பெற்றார்
  • தஞ்சாவூர் பல்கலைக்கழக ஆய்வுப் புலமை பரிசில் பெற்றார்

மறைவு

ஆ. சதாசிவம் ஜூலை 1, 1988-ல் காலமானார்.

இலக்கிய இடம்

ஆ.சதாசிவம் முதன்மையாக ஓர் மொழியியலாளர்.தமிழின் சொல்லிணக்கத்தை நவீன மொழியியல் அடிப்படையில் விரிவாக எழுதினார். இலக்கிய வரலாற்றாளராகவும் மதிக்கப்படுகிறார். அவருடைய தமிழ் மொழி வரலாறும் ஈழத்து கவிதை களஞ்சியமும் குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்

நூல் பட்டியல்

  • தமிழ் வினைச் சொற்களின் அமைப்பு (தொகுதி I, II)
  • தமிழ் மொழி வரலாறு தொகுதி I
  • இலங்கை வழக்குச் சொற்கள் அகராதி (I-V)
  • தமிழ்ச் சொற்களின் பிறப்பு நெறி
  • சுமேரிய திராவிட மொழிகளின் சொல்லிக்கணத் தொடர்பு
  • கருத்துரைக்கோவை
  • ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறைகள்
  • ஈழத்து பேச்சுத்தமிழ் அகரமுதலி
  • சுமேரியமொழி ஒரு திராவிட மொழி (ஆங்கிலம்)
பதிப்பித்தவை
  • ஈழத்து கவிதைக் களஞ்சியம்
  • ஞானப்பள்ளு

உசாத்துணை


✅Finalised Page