first review completed

ஜெ.ஆர். ரங்கராஜு

From Tamil Wiki
Revision as of 09:41, 15 August 2023 by Madhusaml (talk | contribs)
எழுத்தாளர் ஜெ.ஆர். ரங்கராஜு
ஜே.ஆர். ரங்கராஜு

ஜெ.ஆர். ரங்கராஜு (ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு; ஜெ.ர. ரங்கராஜு) (1875-1959) தமிழக எழுத்தாளர். இதழாளர். தமிழின் முன்னோடித் துப்பறியும் நாவலாசிரியர்களில் ஒருவர். ஆங்கில நாவல்களைத் தழுவிப் பல நாவல்களை எழுதினார். ‘துப்பறியும் கோவிந்தன்' என்ற கதாபாத்திரத்தை உருவாக்கிப் புகழ்பெற்றார். ஜெ.ஆர். ரங்கராஜுவின் நாவல்கள் நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும் வெளியாகின. ஜெ.ஆர். ரங்கராஜுவின் நூல்களை 2009-ல் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது.

பிறப்பு, கல்வி

ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு என்னும் ஜெ.ஆர். ரங்கராஜு, 1875-ல், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில், ஸ்ரீரங்கராஜு-லட்சுமி அம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். பாளையங்கோட்டையில் பள்ளி இறுதிவகுப்பு வரை படித்தார்.

தனி வாழ்க்கை

ஜெ.ஆர். ரங்கராஜு, தனது சகோதரர்களுடன் இணைந்து வெண்ணெய் வணிகத்தில் ஈடுபட்டார். பின் விவசாயக் கருவிகளை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தினார். மணமானவர்.

இராஜேந்திரன் புத்தக விளம்பரம்
பரமானந்த பரப் பிரம்ம பரதேசி -சிறுகதை

இலக்கிய வாழ்க்கை

ஆங்கில இலக்கியப் பரிச்சயம் பெற்றிருந்த ரங்கராஜு அவற்றின் தாக்கத்தால் அவற்றைத் தழுவி தமிழில் நாவல்களை எழுதினார். ரங்கராஜுவின் முதல் நாவல், ‘இராஜாம்பாள்’ 1908-ல் வெளியானது. தொடர்ந்து பல நாவல்களை எழுதினார். தனது நாவல்களைத் தானே தனது சொந்த அச்சகத்தில் வெளியிட்டார். ரங்கராஜுவின் நாவல்களில் ஊழல் எதிர்ப்பு, போலிச் சமயவாதிகள் எதிர்ப்பு, பெண் விடுதலை போன்ற சமூக சீர்திருத்தக் கருத்துகள் இடம் பெற்றன. சிறுகதைகள் சிலவற்றையும் ரங்கராஜு எழுதினார்.

ரங்கராஜு ஒன்பது துப்பறியும் நாவல்களை எழுதினார். அவை பல பதிப்புகளாக வெளிவந்தன. இது பற்றி க.நா. சுப்ரமணியம், தனது இலக்கியச் சாதனையாளர்கள் நூலில், “ஜே.ஆர். ரங்கராஜுவின் ஐந்தாறு நாவல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்றாக 1916 முதல் 1923 வரையில் வெளிவந்தன. பிரஸ் சொந்தக்காரரான ரங்கராஜு பத்தாயிரம் பிரதிகளை அச்சிட்டு ஒவ்வொரு ஐநூறு பிரதிகளையும் ஒரு பதிப்பாகக் குறிப்பிட்டு 10 பதிப்புகள் வரை தன் நாவல்களை வெளியிட்டார். 'ராஜாம்பாள்', 'ராஜேந்திரன்', 'சந்திரகாந்தா', ஆனந்தகிருஷ்ணன்' என்று ஒவ்வொரு நாவலும் வெளியாகும்போது மிகவும் பரபரப்பாக வாசகர்கள் வாங்கிப் படித்தனர்.” என்று குறிப்பிட்டுள்ளார். ரங்கராஜுவின் நாவல்கள் நாடகமாகவும், திரைப்படங்களாகவும் வெளியாகின.

முதல் அறிவியல் புதினம்

ஜெ.ஆர். ரங்கராஜு தான் முதல் அறிவியல் புதினம் எழுதியவர் என்பதாக ’அறிவியல் நாவல்கள்’ என்னும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர் கனி விமலநாதன்[1]. அக்கட்டுரையில் அவர், “ரங்கராஜு, 1909-ஆம் ஆண்டில் 'ஒன்றுமில்லை' என்ற அருமையான விஞ்ஞான நாவலை எழுதியிருந்தார்” என்றும், “அதன் ஆங்கிலப் பதிப்பு சாதாரண ஆங்கில வாசகர்களிடையே மிகவும் பரபரப்பாக அக்காலத்தில் பேசப்பட்டது. இதன் பின்னர்தான் 'A Princess of Mars' போன்ற பிரபலமான ஆங்கிலத் தொடர் நாவல்கள் வெளிவந்தன” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளர் கருந்தேள் ராஜேஷ், தனது கட்டுரையில், “தமிழில் வெளிவந்துள்ள அறிவியல் புனைவுகள் பற்றி ஆராய்ந்தால், எல்லாவற்றுக்கும் முன்னால் அப்படி எழுதியவர் பிரபல நாவலாசிரியர் ஜே.ஆர். ரங்கராஜூ என்று தெரிகிறது. 1909-ல் அவரது ‘பறப்பவர்’ என்ற நாவலில், வேற்றுக்கிரகத்தில் இருந்து வரும் ஒரு பெண், மதராஸில் இருக்கும் சில பெண்களின் முன்னால் தோன்றி, அந்தப் பெண்களைத் தொட்டுப்பார்த்து, அதனாலேயே தமிழைத் தெரிந்துகொண்டு, தனது கிரகத்தின் பெயர் ‘எங்குமில்லை’ என்பதையும், அது பூலோகத்தைவிடவும் பலமடங்கு உயர்ந்த நாகரிகத்தைப் பெற்றிருப்பதாகவும் சொல்கிறாள் என்பதை அறிகிறோம். அவளது பெயர் – ‘நட்சத்திரம்’ என்றும் சொல்கிறாள். இந்த நாவல் வாசகர்களிடையே சரியாகப் போகாததால் மறுபடியும் துப்பறியும் புனைவுகள் எழுதத் துவங்கினார் ரங்கராஜூ என்று கேள்வியுறுகிறோம் ('துப்பறியும் கோவிந்தன்', 'ராஜாம்பாள்', 'சந்திரகாந்தா' முதலியன). ஆனால் தற்போது இந்நாவல் பற்றிய தகவல்கள் மிகவும் சொற்பம். தமிழ் அறிவியல் புனைவுகள் பற்றி ஜெஸ் நெவின்ஸ் என்ற அமெரிக்கர் எழுதிய ஒரு ஆராய்ச்சிக் குறிப்பில் இருந்தே ரங்கராஜூவின் நாவல் பற்றித் தெரிகிறது.[2] ” என்று குறிப்பிட்டுள்ளார்.   

ஆனால், ஜெ.ஆர். ரங்கராஜு எழுதிய நூல் வரிசைப் பட்டியல்களில், அவர் தனது நூல்கள் குறித்துத் தந்த விளம்பரங்களில் மேற்காணும் ‘ஒன்றுமில்லை’ அல்லது ‘பறப்பவர்’ நாவலைப் பற்றிய எந்தக் குறிப்பும் காணப்படவில்லை. தமிழ்  நூல் விவர அட்டவணையிலும் (1901-1910) மேற்கண்ட நாவலைப் பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை.

மோகன சுந்தரம் நாடக விளம்பரம்

நாடக வாழ்க்கை

ஜெ.ஆர். ரங்கராஜு எழுதிய 'இராஜாம்பாள்' நாவலை அவ்வை டி.கே. சண்முகம் நாடகமாக அரங்கேற்றினார். தொடர்ந்து 'இராஜேந்திரன்', 'சந்திர காந்தா', 'மோகனசுந்தரம்' போன்ற நாவல்களும் நாடகங்களாக மேடையேறின. நாடகங்களை அரங்கேற்று முன் அதனை தனிப்பட்ட முறையில் தனக்காக மேடையேற்றச் செய்தார் ரங்கராஜு. அனைத்தும் சரியாக உள்ளதாகத் திருப்தி அடைந்தால் மட்டுமே அதனை மேடையேற்ற அனுமதித்தார். நாடக நடிகர்களை மாற்றுவது, பாத்திரங்களின் வசன உச்சரிப்புகளில் திருத்தம் செய்வது, தான் விரும்பும் நடிகர்களை நடிக்கச் சொல்வது என்று பல நடவடிக்கைகளில் ரங்கராஜு ஈடுபட்டார். அதனால் அவரது நாடகங்களை அரங்கேற்றியவர்கள் பல இன்னல்களைச் சந்தித்தனர். அந்த அனுபவம் குறித்து டி.கே. சண்முகம் தனது ‘எனது நாடக வாழ்க்கை' நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “ரங்கராஜுவின் நாடகங்களே எங்கள் குழுவில் அதிகமாக நடைபெற்று வந்தன. இராஜாம்பாள் நாடகத்திற்கு இருபத்தைந்து ரூபாயும், இராஜேந்திரன், சந்திரகாந்தா, மோகனசுந்தரம் ஆகிய நாடகங்களுக்கு நாடகம் ஒன்றுக்கு முப்பது ரூபாயும் ராயல்டியாகக் கொடுத்து வந்தோம். வசூல் மிக மோசமாக இருந்த நிலையில் இந்தத் தொகையைக்கொடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது.

நாவல் நாடகங்களுக்குச் சில சமயங்களில் ஐம்பது, அறுபது தான் வசூலாயிற்று. எனவே பெரியண்ணா ரங்கராஜுவுக்குக் கடிதம் எழுதினார். ‘சுமார் பத்தாண்டுகளாகத் தங்கள் நாட கங்களை நாங்கள் நடித்து தருகிறோம்.இதுவரை பல ஆயிரங்களை ராயல்டியாகக் கொடுத்திருக்கிறோம். அதையெல்லாம் உத்தேசித்து. இப்போது வசூல் இல்லாமல் கஷ்டப்படும் நிலையில், ராயல்டி தொகையைக் கொஞ்சம் குறைத்துப் பெற்றுக் கொள்ள வேண்டும். பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களுக்குக் கொடுப்பதுபோல நாடகம் ஒன்றுக்குப் பத்து ரூபாய் தாங்கள் நாடகங்களுக்கு அனுப்பி விடுகிறோம். தயவு செய்து அனுமதியுங்கள்’ என்று உருக்கமாக எழுதினார்.

ரங்கராஜு அதற்கு எழுதிய பதில் சிறிதும் அனுதாபம் இல்லாததாகவும் கடுமையானதாகவும் இருந்தது.   ‘ராயல்டித் தொகையைச் சிறிதும் குறைத்துக் கொள்ளமுடியாது. முழுத்தொகையையும் முன் பணமாக அனுப்பிவிட்டுத் தான் நாடகம் நடத்த வேண்டும். அதற்கு இஷ்டமில்லாவிட்டால் என் நாடகத்தை நிறுத்திவிடலாம்.’ - இவ்வாறு எழுதப் பெற்றிருந்த ஜே. ஆர். ரங்கராஜூ அவர்களின் கடிதத்தைக் கண்டதும் எங்கள் மனம் சொல்லொணா வேதனை அடைந்தது. இனிமேல் என்றுமே ரங்கராஜுவின் நாடகங்களை நடிப்பதில்லை யென்று முடிவு செய்தோம். அதே வேகத்தில் புதிய சமூக நாடகங்களை நடத்தத் திட்டமிட்டோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

திரை வாழ்க்கை

ஜெ.ஆர். ரங்கராஜுவின் நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்தன. இராஜாம்பாள் 1935, 1951 என இரு முறை திரைப்படமாக வெளிவந்தது. 'சந்திரகாந்தா', 1936-ல் திரைப்படமானது. தொடர்ந்து ‘மோகனசுந்தரம்’ உள்ளிட்ட மேலும் சில நாவல்கள் திரைப்படங்களாகின.

இதழியல்

ஜெ.ஆர். ரங்கராஜு, தனது சகோதரர் செல்வரங்கராஜுவுடன் இணைந்து  விவசாயிகளுக்காக ‘கிருஷிகன்’ என்ற இதழை 1909 முதல் நடத்தினார்.

எழுத்துத் திருட்டு சர்ச்சை

ஜெ.ஆர். ரங்கராஜுவின் நாவல்கள் பலவும் ஆங்கில நாவல்களின் தழுவல்களே. இது குறித்து ஜெயமோகன், ”ஜே.ஆர். ரங்கராஜு பெரும்பாலான நாவல்களை ஆங்கில நாவல்களை தழுவித்தான் எழுதினார். 1930 வாக்கில் அவருடைய வரதராஜன் என்ற நாவலின் முதற்பாகம் வெளிவந்தபோது அது தன் நாவலின் திருட்டு என்று ஆங்கில எழுத்தாளர் ஒருவர் வழக்கு தொடுத்தார். திருட்டு நிரூபிக்கப்பட்டு ஜே.ஆர்.ரங்கராஜு சிறைசெல்ல நேரிட்டது. அதன்பின் அவர் இலக்கியப்படைப்புக்களில் ஈடுபடுவதை நிறுத்திக்கொண்டார். ” என்று குறிப்பிடுகிறார்.

மறைவு

ஜெ.ஆர். ரங்கராஜு 1959-ல் காலமானார்.

நாட்டுடைமை

ஜெ.ஆர். ரங்கராஜுவின் நாவல்களைத் தமிழக அரசு, 2009-ல், நாட்டுடைமை ஆக்கியது.

ஆவணம்

ஜெ.ஆர். ரங்கராஜுவின் நாவல்களில் சிலவற்றை அல்லயன்ஸ் நிறுவனம் மறுபதிப்புச் செய்தது. சில நாவல்கள் தமிழ் இணையக் கல்விக் கழக நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

இலக்கிய இடம்

தமிழ் வாசகப் பரப்பை, வாசிப்பை நோக்கி ஈர்த்ததில் மிக முக்கியமான பங்கு ஜெ.ஆர். ரங்கராஜுவுக்கு உண்டு. ஆங்கில நாவல்களின் பாதிப்பில் ‘திருவல்லிக்கேணி துப்பறியும் கோவிந்தன்’ என்னும் கதாபாத்திரத்தை உருவாக்கிப் புகழ்பெற்றார். ரெய்னால்ட்ஸ் மற்றும் ஆர்தர் கானன் டாயிலின் நாவல்களின் தழுவல்களாக இருந்தாலும் தமிழ் மண்ணுக்கேற்ப உரையாடல்களை, சம்பவங்களை அமைத்து, தமிழில் எழுதப்பட்ட புதிய நாவலைப் போன்ற தோற்றத்தை உருவாக்கினார். சமூகப் பிரச்சனைகள் பலவற்றைத் தனது நாவல்களில் விமர்சித்து எழுதினார். "ஸ்ரீமான் ரங்கராஜுவின் தமிழ்நடை பேசும் நடை; எனவே உயிருள்ள நடை. அவருடைய நாவல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதற்கு இது ஒரு முக்கிய காரணமென்பதில் சந்தேகமில்லை." என்கிறார் கல்கி.

க.நா. சுப்ரமண்யம், தனது 'படித்திருக்கிறீர்களா?' இலக்கிய விமர்சன நூலில், "ரங்கராஜுவின் சேவை இலக்கிய சேவையா அல்லவா என்பது இங்கு பிரச்னையல்ல. அவர் எழுதிய நாவல்களை அந்த நாட்களில் ஏராளமான பேர்வழிகள் படித்தார்கள். அதனால் எழுதுகிறவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் இலக்கிய ரஸனை ஒருவிதமாக மாறிச் செயல்பட்டது என்பதுதான் முக்கியம். இன்றைய தமிழ் இலக்கியச் சரித்திரத்திலே ரங்கராஜுவுக்கு ஒரு இடம் நிச்சயமாக உண்டு." என்று மதிப்பிட்டுள்ளார்.

நூல்கள்

புதினங்கள்
  • ராஜேந்திரன்
  • இராஜாம்பாள்
  • மோஹனசுந்தரம்
  • ஆனந்தகிருஷ்ணன்
  • சந்திரகாந்தா
  • வரதராஜன்
  • விஜயராகவன்
  • ஜெயரங்கன்
  • பத்மராஜு
சிறுகதை
  • பரமானந்த பரப் பிரம்ம பரதேசி

உசாத்துணை

அடிக்குறிப்பு



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.