under review

சூறாவளி (இதழ்)

From Tamil Wiki
Revision as of 13:34, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)

To read the article in English: Sooravali (Magazine). ‎

சூறாவளி

சூறாவளி (1939) க.நா. சுப்ரமணியம் நடத்திய இலக்கிய இதழ். இதை ஒரு வார இதழாக, பொதுவாசகர்களுக்கான இதழாக நடத்தினர். ஓராண்டு மட்டுமே சூறாவளி வெளிவந்தது.

வரலாறு

சூறாவளி முதல் இதழ் ஏப்ரல் 23, 1939 அன்று வெளியானது.  'க்ரௌன்’ அளவில் 64 பக்கங்கள். ஞாயிறுதோறும் 'சூறாவளி’ வெளியாகும்இது 1939ல் உருவாகியிருந்த சுதந்திரப்போராட்டத்தின் எழுச்சியை ஒட்டி உருவான வாசிப்பு அலையை பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு தொடங்கப்பட்டது. இதழின் இணையாசிரியராக மணிக்கொடி எழுத்தாளர் கி.ரா.கோபாலன் இருந்தார். இருபது இதழ்கள் வெளியாயின. இருபதாவது இதழ் அக்டோபர் 15, 1939 அன்று வெளியானது. ஓர் இடைநிலை இதழை வணிகரீதியாக நடத்த முயன்ற க.நா.சுப்ரமணியம் அதில் தோல்வியை அடைந்தார்.

உள்ளடக்கம்

சூறாவளி இதழில் இலக்கிய விவாதங்களும் படைப்புகளும் வெளியாயின. இந்தியா மற்றும் உலக அரசியல் விவாதங்கள் 'அகல் விளக்கு’, 'அங்கே’ என்ற தலைப்புகளில் அலசப்பட்டன. 'ஆயகலைகள்’ என்ற தலைப்பில் சங்கீதம், சினிமா போன்ற மற்றக் கலை வடிவங்கள் குறித்த கட்டுரைகள் வெளியானது. ஆசிரியர் குறிப்புகள் 'சூறாவளி’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு இதழிலும் வழவழப்பான ஆர்ட் காகிதத்தில் சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 'சூறாவளி’யில் க.நா.சு மட்டும் கிட்டத்தட்ட பதினைந்து புனைப் பெயர்களில் எழுதியிருக்கிறார். மயன், ராஜா, நசிகேதன், தேவசன்மன், சுயம் போன்றவை அதில் சில. ச.து.சு யோகியார், சி.சு.செல்லப்பா, கே. பரமசிவம், பி.எஸ். ராமையா, கு.ப. ராஜகோபாலன், சாலிவாகனன், இலங்கையர்கோன், அ.கி.ஜெயராமன் போன்றவர்கள் சூறாவளியில் எழுதியுள்ளனர்.

இலக்கிய இடம்

சூறாவளி இதழுக்கு நவீனத் தமிழிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடமேதும் இல்லை. இது ஒரு வணிகக்கேளிக்கை இதழுக்கான முயற்சி மட்டுமே. இவ்விதழ் நின்றபின் 16 ஆண்டுகளுக்குப் பின் இடைநிலை இதழ் என்று சொல்லத்தக்க சந்திரோதயம் இதழை க.நா.சுப்ரமணியம் நடத்தினார்

உசாத்துணை


✅Finalised Page