சுபமங்களா சிறுகதைகள்

From Tamil Wiki
Revision as of 20:49, 1 October 2022 by ASN (talk | contribs) (Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சுபமங்களா மாத இதழ், ஶ்ரீராம் நிறுவனத்தால் 1988-ல் தொடங்கப்பட்டது. அனுராதா ரமணனின் ஆசிரியத்துவத்தில் வெகு ஜன இதழாக ஜனவரி 1991 வரை வெளிவந்தது. பிப்ரவரி 1991-ல் கோமல் சுவாமிநாதன் ஆசிரியர் பொறுப்பேற்றார். அது முதல் டிசம்பர் 1995 வரை அது ஓர் இலக்கிய இதழாக வெளிவந்தது.

சுபமங்களா சிறுகதைகள் பற்றிய குறிப்பு

சுபமங்களா சிறுகதைகள்

சுபமங்களா இதழ் சிறுகதைகள், நீள் கதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எனப் பலவற்றை இதழ் தோறும் வெளியிட்டது. 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் இவ்விதழில் வெளியாகியுள்ளன. ஆசிரியர் கோமல் சுவாமிநாதன் மூத்த எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமல்லாது, இளையோர்களின் சிறுகதைகளையும் தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவித்தார்.

சுபமங்களாவில் வெளியான சிறுகதைகள் இலக்கிய அமைப்பால் கவனிக்கப்பட்டன. கதா, இலக்கியச் சிந்தனை முதலிய அமைப்புகள் சுபமங்களாவில் வெளியான சிறுகதைகளுக்குப் பரிசளித்துச் சிறப்பித்தன. நீண்ட காலமாக எழுதி வரும் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல், புத்திலக்கியம் படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுத்துலகில் இயங்கிய எழுத்தாளர்களுக்கும் சுபமங்களா இடமளித்தது. ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் இருவரது குறிப்பிடத்தகுந்த, நவீன இலக்கியச் சிறுகதைகள் சுபமங்களாவில் வெளிவந்தன. ஜெயமோகனின் ஜகன் மித்யை, ரதம், மூன்று சரித்திரச் சிறுகதைகள் சுபமங்களாவில் வெளியானவையே. எஸ். ராமகிருஷ்ணனின் தாவரங்களின் உரையாடல், காலாட்படை பற்றிய குற்றப் பத்திரம் போன்ர சிறுகதைகள் சுபமங்களாவில் வெளியாகின  சோ. தர்மன் என்னும் படைப்பாளி பரவலாக வாசக கவனம் பெற்றது சுபமங்களா மூலம் தான்.

சுபமங்களாவில் தன் படைப்புகள் குறித்து ஜெயமோகன்

சுபமங்களாவில் தான் சிறுகதை எழுதியது குறித்து ஜெயமோகன், “ரப்பர் அப்போது வெளியாகி மிகப்பரவலாக வாசிக்கப்பட்டிருந்தது. ரப்பரை வெளியிட்ட அகிலன் கண்ணன் [தமிழ் புத்தகாலயம்] எனக்கு ஃபோன் செய்து சுபமங்களாவுக்கு நான் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கோமல் சுவாமிநாதனுக்கு ஒரு கதையை அனுப்பும்படி விலாசம் அனுப்பினார். எனக்கு கோமலை அப்போது அறிமுகமில்லை. அவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பில் இருந்தார். தண்ணீர் தண்ணீர் சினிமாவுக்குப்பின் புகழுடன் திகழ்ந்தார். ஆனால் சுபமங்களா என்னும் பெயர் குழப்பம் அளித்தது. இடதுசாரிகளின் இதழ் என்றால் அப்படிப்பட்ட பெயர் இருக்க வாய்ப்பில்லை

கோமலை கவரும் கதை என்றால் அது ஒரு வறுமைச்சித்தரிப்பாகவே இருக்கமுடியும் என தோன்றியது. அதை மிக எளிதாக என்னால் எழுத முடியும். அகிலன் கண்ணன் என்னிடம் அது ஒரு நடுவாந்தர இதழ் என்றும், அதற்கேற்ப எழுதலாமே என்றும் சொன்னார். ஆகவே ஒரு வீம்பு வந்தது. ஜகன்மித்யை கதையை எழுதி அனுப்பினேன். அது அன்றைய சிறுகதை வகைமை எதற்குள்ளும் அடங்குவதல்ல.

சிலநாட்களுக்குப்பின் கோமல் என்னை ஃபோனில் அழைத்து அறிமுகம் செய்துகொண்டார். கதையைப் பாராட்டி அதைப்போல எழுதி அனுப்பும்படிச் சொன்னார். சுபமங்களாவை நான் ஆர்வத்துடன் பற்றிக்கொண்டேன். அதில் பல பெயர்களில் தொடர்ந்து எழுதினேன். கதைகள் மட்டும் என்பெயரில். மூன்றுசரித்திரக் கதைகள், ரதம், மண், வெள்ளம என பலகதைகள் அதில் வெளிவந்தன. எனக்கு முன் எழுதிய சிற்றிதழ் எழுத்தாளர்கள் எவருக்கும் இல்லாத தனி அடையாளத்தை எனக்கு சுபமங்களா உருவாக்கியளித்தது. [1]” என்கிறார்.