first review completed

கள்ளுக்கடை சிந்து என்னும் குடியர் சிந்து

From Tamil Wiki
கள்ளுக்கடை சிந்து என்னும் குடியர் சிந்து 1900-ம் ஆண்டுப் பதிப்பு (நன்றி: ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்)
கள்ளுக்கடை சிந்து என்னும் குடியர் சிந்து - 1903-ம் ஆண்டுப் பதிப்பு

கள்ளுக்கடை சிந்து என்னும் குடியர் சிந்து (1900) சிந்து இலக்கிய வகை நூல்களுள் ஒன்று. இந்நூலை இயற்றியவர், சிறுமணவூர் முனிசாமி முதலியார். குடியினால் வரும் கேடுகளை விளக்கி எழுதப்பட்ட நூல்.

பதிப்பு, வெளியீடு

கள்ளுக்கடை சிந்து என்னும் குடியர் சிந்து நூல், சிறுமணவூர் முனிசாமி முதலியார் மற்றும் செஞ்சி ஏகாம்பர முதலியாரால் இயற்றப்பட்டு பா. சிவலிங்கையரின் ஆதிகலாநிதி அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டு 1900-ல் வெளியானது.

இதே தலைப்பில் உள்ள நூல், 1903-ல், சிறுமணவூர் முனிசாமி முதலியாரால் இயற்றப்பட்டு, சென்னை இட்டா பார்த்தசாரதி நாயுடுவின் ஸ்ரீபத்மநாப அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளியானது. இதே தலைப்பில் மற்றுமொரு நூல், சிறுமணவூர் முனிசாமி முதலியாரால் இயற்றப்பட்டு, நாகப்பட்டணம் சுப்பராய முதலியார் குமாரர் தங்கவேலு முதலியார் அவர்களது தனியாம்பாள் அச்சுக்கூடத்தில் 1905-ல், பதிப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்நூலின் பல்வேறு பதிப்புகள் வெளியாகின. ஒவ்வொரு பதிப்பிற்கும் பாடல்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

நூல் அமைப்பு

கள்ளுக்கடை சிந்து என்னும் குடியர் சிந்து நூலில், ஆனந்தக் களிப்பு, கீர்த்தனை, மும்மை நடைச் சிந்து போன்ற வகைமைகள் இடம்பெற்றுள்ளன.

உள்ளடக்கம்

மனைவி தன் குடிகாரக் கணவனைத் திட்டுவதாகவும், அவன் குடிக்கக் காசு கேட்டு அவளை நச்சரிப்பதாகவும், அவள், அவனுக்குக் குடியின் தீமை பற்றி அறிவுறுத்துவதாகவும் கள்ளுக்கடை சிந்து என்னும் குடியர் சிந்து நூலின் பாடல்கள் அமைந்துள்ளன.

பாடல்கள், தெலுங்குச் சொற்களும் கொச்சைச் சொற்களும் மக்களின் பேச்சு வழக்குச் சொற்களும் கொண்டதாய் அமைந்துள்ளன.

பாடல்கள்

கள்ளுக்கு அழைப்பு

ஜாடியே உனக்கொரு கும்பிடு - அந்த
சாராயங் குடித்தாக்கால் பேதியெடுக்குது
புட்டியே உனக்கொரு கும்பிடு - அந்த
பீரைகுடித் தாக்கா சோரைக் கெடுக்குது

கள்ளே உனக்கொரு கும்பிடு - அந்த
கஞ்சாவடித் தாக்கா நெஞ்சை வுலத்துது
மரமே உனக்கொரு கும்பிடு - அந்த
மதத்தை யிழுத்தால் பலத்தைக் கெடுக்குது
எப்போ வருவாயோ கள்ளே - உனக்கு
இதுஞாயமல்லா நீ எழுந்துவா கள்ளே.

கள்ளின் கொடுமை: கணவன் - மனைவி உரையாடல்

கணவன்:

முக்கிமுக்கி கஷ்டப்பட்டு கேளடி பெண்ணே
மூணுபணங் கொண்டுவந்தேன் பாரடி கண்ணே
பக்குவமாய் செலவுநீ பண்ணடி பெண்ணே
பாட்டாக் கள்ளுக்கொரு பணந் தாக்கடி கண்ணே

மனைவி:

கள்ளை மறந்திடடா குடிகாரப் பாவி
காலையில் குடியாதேடா சதிகாரப் பாவி
பிள்ளைக்குட்டி பெத்தாயோடா சண்டாளப் பாவி
பின்னும்புத்தி வல்லையேடா குடிகாரப்ப் பாவி

கணவன்:

சும்மாவுன்னை குடுப்பதில்லை கேளடி பெண்ணே
குடிக்கமட்டும் ஒத்தைபணம் தாக்கடி கண்ணே
சும்மாசும்மா சொன்னேனென்று எண்ணாதே பெண்ணே
சோத்துப்பானை யெகிரிப்பூடுந் தவறினால் கண்ணே

மனைவி:

சோத்துபானை எகரிபோனால் கேளடா பாவி
சூத்துதாண்டா காஞ்சிபோகுங் குடிகார பாவி
நேத்து சொன்ன சத்தியத்தை மறந்தாயே பாவி
நெஞ்சிமட்டும் நெட்டிவிட்டு வந்தாயே பாவி

கணவன்:

குடியருக்கு சத்தியங்க ளேதடி பெண்ணே
கூச்சலிங்கே போடவேண்டாம் கேளடி கண்ணே
படியடித்தும் போதைகொஞ்சங் காணாண்டி பெண்ணே
பணமிருந்தால் பட்டைகுடித்து வருவண்டி கண்ணே

மனைவி:

பட்டை மூஞ்சிலிடிவிழக் குடிகார பாவி
பாட்டாவுடன் பட்டை சேர்ந்தால் மோசண்டா பாவி
கஷ்டப்பட்டு பணத்தை வீணா யழிக்காதே பாவி
காலங்கருப் பானதினால் சொன்னேண்டா பாவி

குடிக் கூத்து

தருமஞ் செய்யாதிரு மனமே - நாளை
கருமத்தை செய்தாலே கடைதேற லாமே.

பரிபூர ணானந்த போதம் - நேற்று
பகலெல்லாம் மழைபெய்து சுவரெல்லா மோதம்

சாராய புட்டியை நம்பு - அதை
சாப்பிட்டால் கொடுக்குதே அளவற்ற தெம்பு
கையிக்கி செலவில்லை கொம்பு - யாரை
கண்டதே குத்தினால் கயளுதே கெம்பு

பெற்றதாய் சொல்லைக் கேளாதே - உந்தன்
பெண்டாட்டி பிள்ளைக்கி கஞ்சி வார்க்காதே
உற்றாரை ஊரில் சேர்க்காதே உந்தன்
ஆயுசுக்கும் ஒருகாசு தருமஞ் செய்யாதே

பெற்ற தாயாரை தடிகொண்டு மாட்டு - பெற்ற
தகப்பனையும் பாட்டளையும் வீட்டைவிட் டோட்டு
உற்றாரை உறவாரை மாட்டு - இந்த
ஊரிலுள்ளோர் மேலே கச்சையுங் கட்டு

தருமஞ் செய்யாதிரு மனமே - நாளை
கருமத்தை செய்தாலே கடை தேறலாமே.

மதிப்பீடு

கள்ளுக்கடை சிந்து என்னும் குடியர் சிந்து நூல், குடியின் கொடுமையை, அதனால் குடும்பத்துள் விளையும் குழப்பங்களை, உறவுகளுக்குள் நேரும் சிக்கல்களை விரிவாக விளக்கிக் கூறுகிறது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.