கணியான் கூத்து

From Tamil Wiki
Revision as of 12:57, 20 September 2023 by Navingssv (talk | contribs) (Created page with "கணியான் கூத்து - தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வழக்கில் உள்ள நாட்டார் நிகழ்த்துக் கலை. அண்ணாவி ஒருவர் பாட அவருடன் இருவர் ஆடுவதும், இருவர் மகுடம் இசைப்பதுமாக இந்நிகழ்த்துக்கல...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கணியான் கூத்து - தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வழக்கில் உள்ள நாட்டார் நிகழ்த்துக் கலை. அண்ணாவி ஒருவர் பாட அவருடன் இருவர் ஆடுவதும், இருவர் மகுடம் இசைப்பதுமாக இந்நிகழ்த்துக்கலை அமையும். இந்நிகழ்த்துக்கலை வழிபாடு, புராணம், சடங்குகள் சார்ந்தது. திருநெல்வேலி, தூத்தூக்குடி பகுதியில் வாழும் கணியான் சாதியினர் கணியான் கூத்தை நிகழ்த்துகின்றனர்.

பார்க்க: பேயாட்டம், அம்மன் ஆட்டம்

கணியான் கூத்து

கணியான் கூத்து நாட்டார் தெய்வக் கோவில் விழாக்களில் நிகழும் நிகழ்த்துக் கலை. இக்கலை சுடலைமாடன் கோவிலிலும், அம்மன் கோவில்களிலும் விஷேச நாட்களில் நிகழ்த்தப்படும். கோவிலின் முக்கிய தெய்வம் இருக்கும் அறையின் எதிர்ப் பகுதியில் கணியான் ஆட்டம் நிகழும். இக்கலை சடங்கு சார்ந்தது என்பதால் தெய்வத்தின் நேர் எதிர் நின்று நிகழ்த்தப்பட வேண்டும் என்பது நியதி. அவ்வாறு இடம் இல்லாத கோவில்களில் வலதுபுறமோ, இடதுபுறமோ கூத்து நிகழ்த்தப்படும். கோவிலில் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள இடங்களில் சாமியாடி வரும் போது கரகம், நையாண்டி மேளத்துடன் சேர்ந்து கணியான் குழுவினரும் ஆடி பாடி வருவர்.

கணியான் ஆட்டக்கதையில் பெரும்பாலும் அது நிகழும் கோவில் சார்ந்த மூலத் தெய்வத்தின் கதைகளே பாடப்படும். அதன் பின் கோவிலின் துணை தெய்வங்கள் தொடர்பான கதைகளைப் பாடுவர். முந்தைய காலங்களில் மாடன் கதைகளையும், காளி கதைகளையும் மட்டுமே பாடும் வழக்கம் இருந்தது. வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் ராமாயண, பாரதக் கதைகள் பாடத் தொடங்கிய போது கணியான் அண்ணாவிகளும் அக்கதைகளைப் பாடத் தொடங்கினர்.

ஆட்டமுறை

கணியான் ஆட்டக் குழுவில் எட்டு அல்லது ஐந்து பேர் இருப்பர். எட்டு பேர் கொண்ட குழுவில் அண்ணாவி ஒருவர், பின்பாட்டுக்காரர் இருவர், மகுடக்காரர்கள் இருவர், தாளம்/ சால்ரா அடிப்பவர் ஒருவர், நடனமாடுவர் இருவர் இருப்பர். ஐவர் குழுவில் அண்ணாவி, பின்பாட்டுக்காரர், நடனமாடுபவர் தலா ஒருவரும், மகுடக்காரர்கள் இருவரும் இருப்பர்.

கணியான் ஆட்டத்தின் துணை நிகழ்வாக நடக்கும் கைவெட்டுக்காரர், அம்மன்கூத்து ஆடுபவர், பேயாட்டம் ஆடுபவர் இந்த எண்ணிக்கையில் அடங்க மாட்டார்.

புலவர் என்று பொதுவாக அழைக்கப்படும் அண்ணாவியே குழுவின் தலைவராக இருந்து அதனை வழிநடத்திச் செல்வார்.

நிகழும் மாதங்கள்

நாட்டுப்புறத் தெய்வங்களின் விழாக்கள் பங்குனி முதல் புரட்டாசி வரை நிகழும். பிற மாதஙளில் தனிப்பட்ட காரணங்களால் விழா நிகழ்த்தப்படுவதும் உண்டு. பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பெருமளவும் கொடை நிகழும். ஆடி மாதத்திலும், கார்த்திகை மாத செவ்வாய்க்கிழமைகளிலும் அம்மன் கோவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நிகழும். இக்காலங்களில் கோவில்களில் கணியான் கூத்து நிகழும். குலத் தெய்வ கோவில் திருவிழாவான பங்குனி உத்திரம் நாளிலும் கணியான் ஆட்டம் நிகழ்த்தப்படும்.

சுடலை மாடன் கோவில் விழாக்கள் வியாழன், வெள்ளி, சனி நாட்களிலும், அம்மன் கோவில் விழாக்கள் திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளிலும் நிகழும். கணியான் ஆட்டம் கோவிலின் பொருளாதார நிலைக்கு ஏற்ப ஒரு நாளிலிருந்து மூன்று நாட்கள் வரை நிகழும்.

நிகழும் நேரம்

கணியான் கூத்து பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே நிகழும். இரவு எட்டு மணிக்கு மேல் தொடங்கி அதிகாலை நான்கு, ஐந்து மணி வரை நிகழும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இரவு 12 - 2 க்குள் முடித்துவிட்டு மீதி கதையை மறுநாள் தொடரும் வழக்கம் உள்ளது.

கணியான் கூத்து கதைகள்

நிகழும் ஊர்கள்

கணியான் கூத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்தூக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள நாட்டுப்புறத் தெய்வக் கோவில்களின் விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது. இக்கலை சுடலைமாடன் கோவிலிலும், அம்மன் கோவில்களிலும் நிகழ்த்தப்படும்.

நிகழ்த்தும் சாதியினர்

இந்நிகழ்த்துக்கலையை திருநெல்வேலி, தூத்தூக்குடி மாவட்டங்களில் வாழும் கணியான் சாதியினர் நிகழ்த்துகின்றனர்.

கூத்து பற்றிய ஆய்வு

  • கணியான் கூத்து பற்றி சோமலெ தன் ‘Folklore of Tamilnadu (1973)’ நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் சோமலெ குறிப்பிடும் ஆணும் பெண்ணுமாக இரண்டு கோமாளிகள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவர் என்னும் குறிப்பு தவறானது.
  • பொ.யு. 1976 ஆம் ஆண்டு ஏ.என். பெருமாள் தாமரை மாத இதழில் கணியான் கூத்து பற்றி குறிப்பு எழுதியுள்ளார்.
  • முனைவர் அ.கா. பெருமாள் ராஜபாளையத்திலிருந்து வெளிவந்த யாத்ரா காலாண்டு இதழில் கணியான் ஆட்டம் பற்றி விரிவான கட்டுரையை பொ.யு. 1980 ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.
  • பொ.யு. 1982-ல் அனந்தசயனம் கணியான் கூத்து பற்றி எம்.ஃபில் ஆய்வு செய்துள்ளார்.
  • பொ.யு. 1986-ல் இரா. பாலசுப்பிரமணியம் கணியான் கூத்து பற்றி பாளையங்கோட்டையில் நூல் வெளியிட்டுள்ளார்.
  • பொ.யு. 1988-ல் நாட்டுப்புற இயல் ஆய்வுக் கோவையில் ‘வில்லிசையும் கணியான் கூத்தும்’ என்ற தலைப்பில் முத்து சண்முகம் கட்டுரை எழுதியுள்ளார்.
  • பொ.யு. 1987-ல் நாட்டுப்புற இயல் ஆய்வுக் கோவையில் அனந்தசயனம் ’இறைவழிபாட்டில் கணியான் ஆட்டம்’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.
  • பொ.யு. 1988-ல் ஜெயலட்சுமி கணியான் கூத்து கலைகள், கலைஞர்கள் பற்றி எம்.ஃபில் ஆய்வேட்டை சமர்ப்பித்துள்ளார்.
  • மு. ராமசாமி நடத்திய விழிகள் இதழில் ’கணியான் கூத்தும் சாக்கையர் கூத்தும்’ என்ற கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
  • மகுடாட்டக் கலையில் சமுதாயமும் பண்பாடும் (பொ.யு. 1990) என்ற தலைப்பில் கன்னிகா விசயசிம்மன் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார்.
  • பொ.யு. 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த தென்மாவட்டக் கிராமியக் கலைஞர்கள் மாநாட்டின்போது கணியான் கூத்து கலைஞர்களைப் பேட்டி கண்டு தமிழக இயலிசை நாடக மன்றத்திற்கு கணியான் சமூகம் பற்றிய ஒரு அறிக்கையையும் முனைவர். அ.கா. பெருமாள் சமர்ப்பித்துள்ளார்.