under review

பேயாட்டம்

From Tamil Wiki

பேயாட்டம் தமிழகத்தின் ஓர் நிகழ்த்து கலை. தனிக் கலை நிகழ்ச்சியாக மேடையில் நிகழ்கிறது. பேய் பிடித்தவரைப் பூசாரி உடுக்கடித்து விரட்டுவது போல் அமையும். பொது மேடைகளில் தேவராட்டம், ஒயிலாட்டம், கிராமியப் பாடல் நிகழ்ச்சிகள் ஆகியன நிகழும் போது இடைநிகழ்ச்சியாகப் பேயாட்டம் நிகழ்த்தப்படுகிறது.

நடைபெறும் முறை

பேயாட்டத்தில் பேய் பிடித்தவராக ஒரு பெண் நடிப்பார். இவர் அச்சம் கொள்ளும் விதமாக ஒப்பனை செய்துக் கொண்டு, தலைவிரித்துப் போட்டுக் கொண்டு வாயில் தீயை வரவழைத்து ஆவேசமாக ஆடுவார். இவரது ஆட்டத்திற்கு ஏற்ப பம்பை கருவி இசைக்கப்படும். பம்பை இசைக்கப்படும் போது பூசாரி கையில் உடுக்கை எடுத்துக் கொண்டு நுழைவார்.

பூசாரி மாயப் பொம்மை ஒன்றை அந்தரத்தில் பறக்கவிடுவார். பின் பாட்டுப் பாட ஆரம்பிப்பார். பேயை விரட்டும்படி பாடிக் கொண்டே உடுக்கடிப்பார். இந்தப் பாட்டும், ஆட்டமும் உக்கிரத்தோடு அமைந்திருக்கும்.

மேடையில் நிகழும் கலை நிகழ்ச்சியின் தொய்வைப் போக்குவதற்கும், பார்வையாளர்களை உத்வேகமூட்டுவதற்கும் உரிய இடை நிகழ்ச்சியாக இது நிகழ்கிறது. இதில் நடிப்பவர்கள் வேறு நாட்டார் கலைகளை நிகழ்த்துபவராகவும் இருப்பர்.

நிகழும் ஊர்கள்

இந்நிகழ்த்துக் கலை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நிகழ்கிறது.

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்


✅Finalised Page