எழுத்து கவிதை இயக்கம்

From Tamil Wiki
Revision as of 20:29, 15 February 2022 by Jeyamohan (talk | contribs)

எழுத்து கவிதை இயக்கம் ( 1959 -1965) எழுத்து சிற்றிதழை ஒட்டி உருவான கவிதை இயக்கம். வசனக்கவிதை என்ற பேரில் யாப்பற்ற கவிதை பாரதியால் எழுதப்பட்டு பின்னர் மணிக்கொடி எழுத்தாளர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அதற்கு புதுக்கவிதை என்னும் பெயர் உருவானதும், அதன் வடிவ இலக்கணங்கள் உருவானதும், அதன் முன்னோடிக் கவிஞர்கள் அறிமுகமானதும் எழுத்து இதழ் வழியாகவே. எழுத்து கவிஞர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி கவிதைமுறை கொண்டவர்களானாலும் எழுத்து உருவாக்கிய கவிதைவடிவம் பொதுவானது. அதுவே பின்னாளில் தமிழ்ப் புதுக்கவிதைக்கான அடிப்படையாக ஆனது. (பார்க்க எழுத்து)

வரலாறு

தமிழில் புதுக்கவிதைக்கான அடித்தளத்தை அமைத்தவர் சி.சுப்ரமணிய பாரதியார். அவர் 1922ல் வசனத்தில் எழுதிய கவிதைகள் தமிழில் புதுக்கவிதையின் தோற்றத்திற்கு அடித்தளம் அமைத்தன. உபநிஷதங்களின் மொழியாக்கம், வால்ட் விட்மானின் புல்லின் இதழ்கள் ஆகியவை அவருக்கு முன்னுதாரணமாக அமைந்தவை. பின்னர் ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன் ஆகியோர் மணிக்கொடி இதழிலும் கலாமோகினி இதழிலும் வசன கவிதைகளை எழுதினார்கள். அவை புதுமைப்பித்தன் போன்ற நவீன இலக்கிய முன்னோடிகளால்கூட ஏற்கப்படவில்லை.