under review

உஷாதீபன்

From Tamil Wiki
Revision as of 14:04, 14 August 2023 by Madhusaml (talk | contribs)
எழுத்தாளர் உஷாதீபன்
உஷாதீபன்
உஷாதீபன் இளம் வயதில்

உஷாதீபன் (கி. வெங்கடரமணி) (பிறப்பு: டிசம்பர் 10, 1951) எழுத்தாளர், கவிஞர், விமர்சகர். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தனது இலக்கிய முயற்சிகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

கி. வெங்கடரமணி என்னும் இயற்பெயரை உடைய உஷாதீபன், டிசம்பர் 10, 1951-ல், வத்தலகுண்டில், ஏ.பி.கிருஷ்ணய்யர்-கே.பிச்சம்மாள் இணையருக்குப் பிறந்தார். உள்ளூரில் பள்ளிக் கல்வி முடித்தார். புதுமுக வகுப்பு (பி.யூ.சி.) பயின்றார். வணிகவியலில் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

உஷாதீபன், வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவிக் கணக்கு அலுவலராகப் பணியாற்றி, டிசம்பர் 2009-ல் பணி ஓய்வு பெற்றார். மனைவி உஷா பத்மினி. ஒரு மகன்.

இலக்கிய வாழ்க்கை

உஷாதீபன், வத்தலகுண்டில் இருந்த நூலகத்தில் கல்கி, ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதி போன்றோரின் படைப்புகளை வாசித்து இலக்கிய ஆர்வம் பெற்றார். மனைவி உஷாவின் பெயரை இணைத்துக் கொண்டு ‘உஷாதீபன்’ என்ற புனைபெயரில் எழுதினார். முதல் சிறுகதை ‘வறட்டுக் கௌரவம்’ 1982-ல், ஆனந்த விகடனில் வெளியானது. தொடர்ந்து கணையாழி, அமுதசுரபி, கலைமகள், செம்மலர், கல்கி, குமுதம், குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது என தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் எழுதினார். முன்னணி இதழ்களில் கவிதைகள் பல எழுதினார்.

‘உள்ளே வெளியே' என்பது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. தொடர்ந்து பல சிறுகதைத் தொகுப்புகளும், புதினங்களும், இலக்கிய விமர்சன நூல்களும் வெளியாகின. இவரது ‘வாழ்க்கை ஒரு ஜீவநதி’ நூல், மதுரை லேடி பெருமாட்டி கல்லூரியில் இலக்கிய மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. இவரது படைப்புகளை ஆய்வு செய்து பல மாணவர்கள் எம்.ஃபில் மற்றும் பிஹெச்.டி. பட்டம் பெற்றனர்.

உஷாதீபன் திண்ணை தொடங்கி சுவாசம், சொல்வனம், வாசக சாலை, பதாகை வரை பல இணைய இதழ்களிலும், பேசும்புதிய சக்தி, கணையாழி, உயிர்எழுத்து, தினமணிகதிர் என அச்சு இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்

விருதுகள்

  • சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த சிறுகதை பரிசு - ’வெள்ளை நிறத்தொரு பூனை' சிறுகதைக்காக. (1987)
  • சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த சிறுகதை பரிசு - ‘கைமாத்து’ சிறுகதைக்காக (2015)
  • அமரர் ஜீவா-பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழாக்குழு மற்றும் திருப்பூர் தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய நூற்றாண்டு விழாவில் இவரது “வாழ்க்கை ஒரு ஜீவ நதி“ என்ற நூல் பரிசு பெற்றது.
  • கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிப் பரிசு
  • அமுதசுரபி பொன்விழாச் சிறுகதைப் போட்டிப் பரிசு
  • குங்குமம் நட்சத்திரச் சிறுகதைப் பரிசு
  • குங்குமம் இளைய தலைமுறைச் சிறுகதைப் போட்டிப் பரிசு
  • தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றப் பரிசு - “நினைவுத் தடங்கள்“ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு
  • தினமணி கதிர் நெய்வேலி புத்தகத் திருவிழாக் குழு சிறுகதைப் போட்டிப் பரிசு
  • காரைக்குடி புத்தகக் கண்காட்சிக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசு
  • கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது - ”தவிக்கும் இடைவெளிகள்” என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு
  • கிருஷ்ணன்-மணியம் விருது (முழு மனிதன் சிறுகதைத் தொகுப்புக்காக)
சான்றிதழ் பெறும் உஷாதீபன்

இலக்கிய இடம்

உஷாதீபன் 80-களின் எழுத்தாளர். மத்திய தர வர்க்கத்தின் குடும்பப் பிரச்னைகளை மையமாக வைத்து அதிகம் எழுதியிருக்கிறார். இவரது படைப்புகள் நேரடியாக வாசகருடன் உரையாடுபவை. தத்துவச் சிக்கல்களோ, சர்ச்சைக்குரிய சமூகப் பிரச்னைகளோ இவரது படைப்புகளில் இடம் பெறுவதில்லை. மானுட வாழ்க்கையின் யதார்த்த நிகழ்வுகளை எவ்வித ஒப்பனையுமில்லாமல் பாசாங்கின்றி வெளிப்படுத்துபவையாக இவரது படைப்புகள் அமைந்துள்ளன.

உஷாதீபனின் படைப்புகள் குறித்து, அவரது நூல் ஒன்றின் முன்னுரையில் ச.தமிழ்ச்செல்வன், “எவ்விதப் படபடப்பும், ஆர்ப்பாட்டமும், படாடோபமுமின்றி ஆழ்ந்து அடங்கிய அமைதியான குரலில் நேர்த்தியாக இவர் கதை சொல்லுகிறார். ஒவ்வொரு கதையும் ஒரு நடுத்தரவரக்கத்து மனோபாவத்தை விஸ்தாரமாக எடுத்துப் பேசுகிறது. இதுவே இவரது கதைகளின் அடிநாதமாய் - சாரமாய் - ஓடிக் கொண்டிருக்கிறது. அசலான வாழ்வையே அழுத்தமாகப் பேசுகின்றன இவரது படைப்புகள்” என்கிறார்.

உஷாதீபன் நூல்கள்
உஷாதீபன் புத்தகங்கள்
சில யதார்த்தங்கள் - உஷாதீபன், நன்றி: Commonfolks.com

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • உள்ளே வெளியே
  • பார்வைகள்
  • நேசம்
  • வாழ்க்கை ஒரு ஜீவநதி
  • நினைவுத் தடங்கள்
  • சில நெருடல்கள்
  • திரை விலகல்
  • வெள்ளை நிறத்தொரு பூனை
  • தனித்திருப்பவனின் அறை
  • திரை விலகல்
  • செய்வினை செயப்பாட்டு வினை
  • நான் அதுவல்ல
  • நிலைத்தல்
  • தவிக்கும் இடைவெளிகள்
  • பின்னோக்கி எழும் அதிர்வுகள்
  • முழு மனிதன்
  • மனத்தொற்று
  • சில யதார்த்தங்கள்
  • வனம் புகுதல்
  • அமுதம் விரித்த வலை (மின்னூல்)
  • காற்றுக்கென்ன வேலி (மின்னூல்)
  • மாய யதார்த்தம் (மின்னூல்)
  • நகரும் வீடுகள் (மின்னூல்)
  • அன்பே சிவம் (மின்னூல்)
  • அம்மாவின் மனசு (மின்னூல்)
  • ஸ்ருதி லயம் (மின்னூல்)
  • மோகனம் (மின்னூல்)
நாவல்
  • லட்சியப் பறவைகள்
குறுநாவல்
  • கால் விலங்கு
  • மழைக்கால மேகங்கள்
  • புயலுக்குப் பின்னே அமைதி
  • உஷாதீபன் குறுநாவல்கள்
  • உன்னைக் கரம் பிடித்தேன் (மின்னூல்)
  • வாடாமல்லி (மின்னூல்)
  • எதிர்பாராதது (மின்னூல்)
  • விளக்கேற்றியவள் (மின்னூல்)
  • இவளும் ஒரு தொடர்கதை (மின்னூல்)
  • உன்னிடத்தில் எனைக் கொடுத்தேன் (மின்னூல்)
  • பொங்கி வரும் பெரு நிலவு (மின்னூல்)
  • உறவு சொல்ல ஒருவன்(மின்னூல்)
  • துருவங்கள் (மின்னூல்)
  • சொல்லாதே யாரும் கேட்டால் (மின்னூல்)
  • தனித்துவன் (மின்னூல்)
  • எதிர்காற்று
கட்டுரை நூல்கள்
  • காலத்தால் அழியாத கலைஞர்கள் (சினிமாக் கட்டுரை நூல்)
  • பொங்குமாங்கடல்
  • உறங்காக் கடல்
  • நின்று ஒளிரும் சுடர்கள் (சினிமாக் கட்டுரை நூல்)
  • படித்தேன் எழுதுகிறேன்
  • தி.ஜானகிராமன் எனும் ஆளுமை (மின்னூல்)
  • சொல்லத் துடிக்குது (மின்னூல்)
  • இலக்கியத் தேடல் (மின்னூல்)
  • கண்டதைச் சொல்லுகிறேன் (மின்னூல்)
  • என்னை இழந்த பொழுதுகள் (மின்னூல்)
  • பாலும் தெளிதேனும் (மின்னூல்)
சிறார் நூல்
  • சபாஷ் பூக்குட்டி
கவிதைத் தொகுப்பு
  • அ ம் மா

உசாத்துணை


✅Finalised Page