being created

ஆனந்த விகடன்

From Tamil Wiki
Revision as of 20:09, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
ஆனந்த விகடன் (பூதூர் வைத்தியநாதய்யர் இதழ்) விளம்பரம். 1926
ஆனந்த விகடன் (எஸ்.எஸ். வாசன் இதழ்) விளம்பரம் - 1930
ஆனந்த விகடன் இதழ் - 1936 (படம் நன்றி: ஸ்ரீதேவி ரங்கராஜ்)
ஆனந்த விகடன் இதழ் முகப்பு - 1935 (நன்றி: ஸ்ரீதேவி ரங்கராஜ்)

ஆனந்த விகடன் (1926) தமிழின் முன்னோடி இதழ்களுள் ஒன்று. இதனை பூதூர் வைத்தியநாதய்யர் தொடங்கினார். 1928-ல் எஸ்.எஸ். வாசன் இவ்விதழின் உரிமையாளரானார். கல்கி, தேவன் தொடங்கி பலர் இதன் ஆசிரியராகப் பணிபுரிந்தனர். ஆரம்பத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து வெளியான இதழ், தற்காலத்தில் பொது வாசிப்புக்குரிய பல்சுவை இதழாக வெளிவருகிறது. ரீ. சிவக்குமார் இதழின் ஆசிரியர்.

பிரசுரம்/வெளியீடு

அக்காலத்தில் பலராலும் விரும்பி வாசிக்கப்பட்ட இதழ் ‘ஆனந்தபோதினி’ அவ்விதழின் பாதிப்பால ’ஆனந்தகுண போதினி’ என்ற இதழ் வெளிவந்தது. அதுபோல நகைச்சுவைக்கு முக்கியமளித்து அக்காலத்தில் ‘மஹா விகடன்’, ’மஹா விகட தூதன்’, ’வினோத விகடன்’, ‘விகட தூதன்’ போன்ற பெயர்களில் இதழ்கள் வெளிவந்தன. அவ்வகையில் ‘ஆனந்த’ மற்றும் ‘விகடன்’ என்ற பெயர்கள் மீது கொண்ட ஈர்ப்பால், சாந்தலிங்க ஐயரின் மகனான பூதூர் வைத்தியநாதய்யர், 1926 பிப்ரவரியில் ’ஆனந்த விகடன்’ இதழைத் தொடங்கினார்.

பூதூர் வைத்தியநாதய்யரின் ஆசிரியத்துவத்தில் 40 பக்கங்களைக் கொண்ட இதழாக ஆனந்த விகடன் வெளிவந்தது. இதழின் சந்தா இரண்டு ரூபாய். வெளிநாடுகளுக்கு இரண்டு ரூபாய் எட்டணா. சந்தா செலுத்துபவர்களுக்கு இனாமாக விநாயக புராண வசனம், பட்டினத்தார் உரை, குமரேச சதகம் உரை போன்ற பக்திப் புத்தகங்களைப் பரிசாக அளிப்பதாக அறிவித்து வாசகர்களை ஈர்த்தார் வைத்தியநாத ஐயர்.

உள்ளடக்கம்

இதழில் தேவாரம், திருவாசகம் , பெரியபுராணக் கட்டுரைகள், ஆன்மிகச் செய்திகள், மகான்களின் கதைகள், கட்டுரைகளோடு நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் அளித்து வெளியிட்டார். ‘முத்தாம்பாள்’ என்னும் நாவலும் இவ்விதழில் தொடராக வெளிவந்தது சுமார் 40 இதழ்கள் வரை வெளிவந்த நிலையில் நிதி நெருக்கடியைச் சந்தித்தது ஆனந்த விகடன்

நிர்வாக மாற்றம்

எஸ். எஸ். வாஸன், ஆரம்ப காலத்தில், எழுத்தாளராக, புத்தக விற்பனையாளராக மட்டுமல்லாமல், விளம்பர முகவராகவும் பணியாற்றினார். அவர், தான், ஆனந்த விகடனுக்கு அளித்த விளம்பரம் வெளியாகாததன் காரணத்தை அறிய விரும்பி இதழை நடத்தி வந்த பூதூர் வைத்தியநாத ஐயரைச் சந்தித்தார். ஐயர் தன் நிதி நெருக்கடி தொடர்பான பிரச்சனைகளைச் சொல்லி, அதனைத் தீர்க்க வாசனின் ஆலோசனையைக் கேட்டார். வாசனும் சில ஆலோசனைகளைத் தெரிவித்தார். வாசன் சொன்ன ஆலோசனைகளைக் கேட்க இயலாத நிலையில் இருந்த பூதூர் வைத்தியநாத ஐய ஐயர், இதழை வாசனே ஏற்று நடத்துமாறு வேண்டினார். வாசனும் அதற்குச் சம்மதித்தார். அதன் படி, ‘ஆனந்த விகடன்’ என்ற பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ரூ. 25 வீதம் (8 X 25 = 200) கொடுத்து, ஐயரிடமிருந்து ஆனந்தவிகடனை விலைக்கு வாங்கினார் வாசன்.

வாசனின் ஆனந்த விகடன்

பிப்ரவரி 1928ல் அதிகாரப் பூர்வமாக ஆனந்தவிகடனின் பொறுப்பை ஏற்று அதன் அதிபர் மற்றும் ஆசிரியரானார் வாசன். பக்கங்களை 64 ஆக ஆக்கியதுமில்லாமல், அதன் ஆண்டு சந்தாவையும் ரூபாய் ஒன்றாகக் குறைத்தார். உடன் இதழின் விற்பனை அதிகரித்தது. அது வரை வெளிவந்த பக்தி, வேதாந்தக் கதை, கட்டுரைகளுக்கு மாறாக தலையங்கம், கவிதை, கதை, கட்டுரை, விவசாயம், மாணவர் பகுதி, சுகாதாரம், பெண் மக்கட் பகுதி, விகடன் பேச்சு, துக்கடாப் பகுதி, துணுக்குகள், தொடர் கதை எனப் பல்வேறு அம்சங்களுடன் இதழ் வெளியானது. நகைச்சுவைத் துணுக்குகள், சிறுகதைகள், சுருக்கக் கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள் எனப் புதிய பரிமாணத்தில் வெளிவந்தது விகடன்.

ஆசிரியர் கல்கி

ஏட்டிக்குப் போட்டி’ என்ற நகைச்சுவைக் கட்டுரை மூலம் விகடனுக்கு அறிமுகமான ‘கல்கி’யை விகடனின் துணை ஆசிரியராக நியமித்தார் வாசன். கல்கி, இதழை இலக்கியம், ஜனரஞ்சகம் கலந்த இதழாக உருமாற்றினார். ‘கர்நாடகம்’ என்ற புனைபெயரில் அவர் எழுதிய கட்டுரைகளும், ‘தியாக பூமி’, ‘கள்வனின் காதலி’ போன்ற தொடர்களும் இதழின் விற்பனை பெருகக் காரணமாயின. விகடன் நடத்திய ‘புதிர்ப் போட்டி’ அனைவராலும் விரும்பப்பட்டது. நாடோடியின் நகைச்சுவை கட்டுரைகளும், எஸ்.வி.வி.யின் வாழ்க்கை அனுபவச் சித்தரிப்புகளும், டி.கே.சி.யின் சித்திரக் காட்சிகளும், பி.ஸ்ரீ.யின் கம்ப சித்திரம், சிவநேச செல்வர்கள், சித்திர ராமாயணம் போன்ற இலக்கியத் தொடர்களும் விகடனின் மதிப்பை வெகுவாக உயர்த்தின. 1932 முதல், வண்ணமிகு ஓவியங்களையும் இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகளையும் கொண்ட தீபாவளி மலர்களை வெளியிட்டு வாசகர்களை ஈர்த்தது விகடன்.

பங்களிப்புகள்

1932 ஆண்டு ஜனவரியிலிருந்து விகடன் மாதமிருமுறையாக மாறியது. பின்னர் மும்முறை இதழாக மாறி, 1933 நவம்பர் முதல் வார இதழாக வெளிவந்தது. கல்கியைத் தொடர்ந்து துமிலன், தேவன், சாவி, மணியன் ஆகியோர் ஆசியராக இருந்து இதழை வளர்த்தனர். உ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ விகடனில் 122 வாரங்கள் வெளியானது. உ.வே.சா.விற்கு ‘தமிழ்த் தாத்தா’ என்ற பட்டம் கொடுத்தது விகடன் தான். தேவனின் ‘துப்பறியும் சாம்பு’வைப் படிப்பதற்காகவே விகடன் வாங்கியோர் பலர். மாலி, ராஜு, தாணு, சில்பி, கோபுலு, ஸ்ரீதர் ஆகியோரின் ஓவியங்களும், நகைச்சுவைத் துணுக்குகளும் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றன. தமிழின் முதன்மை இதழாக விகடன் உயர்ந்தது.

சிறுகதைப் போட்டி

சிறந்த சிறுகதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விகடன் வெளியிட்டது. தமிழ் இதழியல் வரலாற்றில் முதன்முறையாக சிறுகதைப் போட்டி நடத்தியது ஆனந்தவிகடன். அது பற்றி, “தமிழ்நாட்டில் எழுதும் துறையில் ஈடுபட விரும்பும் நேயர்கள் அனைவருக்கும் தங்களுடைய ஆற்றல் முழுவதையும் பயன்படுத்த ஒரு சந்தர்ப்பம் அளிப்பதென விகடன் தீர்மானித்திருக்கிறான். தமிழ்மொழியில் சொந்த மனோதர்மத்தினைக் கொண்டு எழுதப்படும் சிறந்த கற்பனைக் கதைக்கு ரூ. 100 ரொக்கப்பரிசு அளிக்க உத்தேசித்திருக்கிறான்” என்று இதழில் அறிவிப்புச் செய்தது. (ஆனந்தவிகடன், 1933, ஜனவரி 15 இதழ்)

அச்சிறுகதைப் போட்டியில் பலர் கலந்துகொண்டனர். போட்டியில் ராமலிங்கம் என்ற ‘றாலி’ எழுதிய ’ஊமச்சியின் காதல்’என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது. பி.எஸ். ராமையா எழுதிய ‘மலரும் மாலையும்’மற்றும் ஸ்ரீ கண்டன் எழுதிய ‘தோல்வி’ என்ற இரு சிறுகதைகளும் இரண்டாம் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. ‘றாலி’ பின்னர் விகடனின் ஆசிரியர் குழுவில் இணைந்தார். ராமையா, ‘மணிக்கொடி’இதழ் மூலம் சிறந்த இலக்கிவாதியாகப் பரிணமித்தார். ஸ்ரீகண்டன் பல சிறுகதைகளை எழுதிப் புகழ்பெற்றார்.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.