under review

அ.கு. ஆதித்தர்

From Tamil Wiki
Revision as of 12:22, 8 May 2024 by Logamadevi (talk | contribs)

அ.கு. ஆதித்தர் (அ. குமரகுருபர ஆதித்தர்; அழகானந்த குமரகுருபர ஆதித்தர்) (பிறப்பு: டிசம்பர் 21, 1901) கவிஞர், எழுத்தாளர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். ‘மகாகவி’, ‘கம்பரப்பர்’ என்று போற்றப்பட்டார்.

பிறப்பு, கல்வி

அழகானந்த குமரகுருபர ஆதித்தர் என்னும் அ.கு. ஆதித்தர், திருச்செந்தூரை அடுத்துள்ள காயாமொழிப் பட்டணத்தில், டிசம்பர் 21, 1901 அன்று, அழகானந்த ஆதித்த நாடார் - வடிவம்மாள் இணையருக்குப் பிறந்தார். உள்ளூரில் பள்ளிக் கல்விகற்றார். மேற்கல்வியை மெய்ஞ்ஞானபுரம் நெல்லை சி.எம். கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை ச.த. சற்குணரிடம் கற்றார்.

தனி வாழ்க்கை

அ.கு. ஆதித்தர் மணமானவர். அருப்புக்கோட்டை, செங்கல்பட்டுப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

அரசியல்

அ.கு. ஆதித்தர், காந்தியத்தின் மீது பற்றுக் கொண்டார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். படிப்பை நிறுத்திவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய கீதங்களை இயற்றி, அதனைத் தமிழ்நாடெங்கும் பயணப்பட்டுப் பாடி விடுதலைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

அ.கு. ஆதித்தர், கம்பர் மீது பற்றுக் கொண்டு கம்பராமாயாணம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். ஆய்வின் முடிவுகளை 'கம்பர் கவிநயம்', 'கம்பர் கவித்திறன்', 'கம்பர் 1000' எனப் பல நூல்களாக எழுதினார்.

பாட, இலக்கண உரை நூல்கள்

அ.கு. ஆதித்தர், மாணவர்களுக்கான உரை விளக்க நூல்களை எழுதினார். பள்ளிப் பாட நூல்களுக்குக் கட்டுரைகள் எழுதினார். தொல்காப்பியம் குறித்து மிக விரிவான பல ஆய்வுகளை மேற்கொண்டார். தொல்காப்பியம் – சொல்லுக்கு ‘ஆதித்த உரை’ எழுதிப் பதிப்பித்தார். ஆதித்தரின் ’தொல்காப்பியம் உரிச்சொல் விளக்கம்’ மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த நூல்.

மொழிபெயர்ப்பு

அ.கு. ஆதித்தர், காளிதாசரின் வடமொழி நாடகங்களையும், ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்தார். அ.கு. ஆதித்தரின் 'சகுந்தலா' நாடகத்திற்கு உ.வே.சா. மதிப்புரை அளித்துச் சிறப்பித்தார். ஷேக்ஸ்பியரின் ஒன்பது நாடகங்களை தமிழ்க் கவிதையாக மொழி பெயர்த்தளித்தார். ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோவை ‘உத்தமன்’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தளித்தார்.

அ.கு. ஆதித்தரின் மொழியாக்கப் பணிகளில் குறிப்பிடத்தகுந்த்து கிரேக்க மொழிக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்த மகாகவி ஹோமரின் இலியட் படைப்பைத் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்ததுதான். இவர் ஹோமரின் படைப்பை ஆங்கிலத்தில் எட்வட்ர்ட் ஏர்ல் டெர்பி (Edward Earl of Derby) என்பவர் மொழிபெயர்த்த நூலை மூலமாகக் கொண்டு மொழியாக்கமாகத் தமிழில் ‘எல்லியம்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

அது குறித்து ஆதித்தர் ’எல்லியம்’ நூலில், "தர்பிக்கோமான், மூலநூலை விட்டு விலகாமல் கூட்டாமல் குறைக்காமல் ஆங்குற்றாவாறே எழுதியிருப்பதாகத் தம் முகவுரையில் கூறியுள்ளார். அதனால் யான் அவர் நூலைத் தேர்ந்தெடுத்தேன். 2900 ஆண்டுகளாகத் தமிழில் வெளிவராத ஒரு காவியம் 1980-ல் வெளிவருகின்றது. 1955-ல் எல்லியம் மொழிபெயர்ப்புத் தொடங்கி 22.06.1960-ல் முடிந்துள்ளது. ஏறக்குறைய 20 ஆண்டுகள் என் கையெழுத்துப் பிரதி நெடுந்துயில் கொண்டு 1980-ல் என் எண்பதாம் வயதை ஒட்டி வெளிவருகின்றது" என்று குறிப்பிட்டார்.

அ.கு. ஆதித்தர், பல மாணவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்பித்தார். கபீர்தாசர் பாடல்கள், காளிதாசர் உவமைகள் உள்ளிட்ட பல நூல்களை எழுதினார் பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார்.

விருதுகள்

  • கம்பரப்பர்
  • மகாகவி

மறைவு

அ.கு. ஆதித்தர் மறைவு பற்றிய விவரங்களை அறிய இயலவில்லை.

மதிப்பீடு

அ.கு. ஆதித்தர், தமிழாசிரியராக மட்டுமல்லாமல் ஆண்டாள், அண்ணா, காமராசர் போன்றோர் மீது குறிப்பிடத்தகுந்த சிற்றிலக்கிய நூல்களை எழுதியவராகவும், சிறந்த மொழியாக்கங்களைத் தந்த மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

  • ஆத்ம விளக்கு
  • பாவை பள்ளியெழுச்சி
  • 30 குறளின் மெய்ப்பொருள்
  • அருணாசலசுவாமி அம்மானை
  • இலக்கணச் செப்பம்
  • கம்பர் 1000
  • கம்பர் கவிநயம்
  • கம்பர் கவித்திறன்
  • காந்தி அம்மானை
  • காமராசர் உலா
  • சகுந்தலா நாடகம்
  • தொல்காப்பியச் செல்வி
  • தொல்காப்பியம் உரை
  • தொல்காப்பியச் சொல்லகராதி
  • தொல்காப்பியம் உரிச்சொல் விளக்கம்
  • வீரசிம்மன்
  • நான்கு நாடகங்கள்
  • கடவுள் அனுபூதி
  • பள்ளி எழுச்சி
  • பரமரகசிய மாலை
  • கடவுள் வணக்கம்
  • மாணவர் கடவுள் வணக்கம்
  • தொழுகை முறை
  • நவரசக் கம்ப நாடகம்
  • ஆண்டாள் பிள்ளைத் தமிழ்
  • இரணியன் வதைப் பரணி
  • இலக்கணச் செப்பம்
  • கபீர்தாசர் பாடல்கள்
  • காளிதாசர் உவமைகள்
  • எல்லியம்
  • ஆகமன் (மூலம்: ஜூலியஸ் சீசர். அக்கிலஸ், அகமெம்னோன்)
  • உத்தமன்
  • அறிஞர் அண்ணாத்துரைக் கோவை

மற்றும் பல

உசாத்துணை


✅Finalised Page