அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர்

From Tamil Wiki
அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர்

அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர் ( பொ.யு. 1877 - 1949), முன்னோடி தமிழ் நூல் வெளியீட்டாளர் மற்றும் இதழாசிரியர். வி. குப்புஸ்வாமி ஐயர் நிறுவிய நூல் வெளியீட்டு நிறுவனத்தின் பெயர் அல்லயன்ஸ்.

பிறப்பு / இளமை

அல்லயன்ஸ் ஐயர் என்று அழைக்கப்படும் வி. குப்புஸ்வாமி ஐயர், தஞ்சாவூர் மாவட்டம் மாயவரம் வட்டத்தில் அமைந்துள்ள கோமல் என்ற கிராமத்தில் 1877- ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்கள்  வைத்தியநாத ஐயர் மற்றும் பாலாம்பாள். கோமல் கிராமத்திலேயே பள்ளிப் படிப்பை முடித்த  வி. குப்புஸ்வாமி ஐயர் 1896- ஆம் ஆண்டு தனது 19- ஆம் வயதில் சென்னைக்கு வந்தார். அந்த ஆண்டிலேயே மற்றொருவரின் உதவியுடன் 'ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி' என்னும் சிறு நிறுவனத்தை தொடங்கி பேனா, பென்சில், குறிப்பேடு போன்ற எழுதுபொருட்களை விற்பனை செய்தார். அத்துடன், தேசியத் தலைவர்களைப் பற்றிய சில நூல்களையும் வெளியிட்டார். இளைஞர்களிடையே இந்த நூல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அல்லயன்ஸ் தொடக்கம்

வி. குப்புஸ்வாமி ஐயர் 1901- ஆம் ஆண்டு 'அல்லயன்ஸ் கம்பெனி' என்ற பெயரில் நூல் வெளியீட்டு நிறுவனத்தை தொடங்கினார். நூல்கள் அதிகம் விற்காத அக்காலத்தில் தேசியத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை தெளிவாக எழுதி குறைந்த விலையில் வெளியிட்டார். இராமாயணம், மகாபாரதம் முதலான இதிகாசங்களை சிறுவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் எளிமையான வடிவத்தில் வெளிக்கொணர்ந்தார்.

தேசியப் போராட்ட நூல்கள்

வி. குப்புஸ்வாமி ஐயர், தேசியப் போராட்டம் தொடர்பான நூல்களை ஏராளமாக வெளியிடத் தொடங்கினார். இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டு சம்பவங்களையும் தமிழில் புத்தகங்களாக வெளியிட்டு வந்தார். அப்போது அல்லயன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஹரிபுரா காங்கிரஸ், திரிபுரா காங்கிரஸ், நாகபுரி காங்கிரஸ் தொடர்பான புத்தகங்கள் இன்றளவும் ஆவணங்களாகத் திகழ்கின்றன.

தேசத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய பத்திரிகையாளர்கள் அல்லது எழுத்தாளர்களைக் கொண்டு எழுதப்பட்டு நூல்  வெளியிடப்பட்டதால், இந்த நூல்களின் நம்பகத்தன்மை மேம்பட்டது. மேலும் இந்த நூல்களை எழுதியவர்களும் தேசியத்தின் மீது உண்மையான  பற்றுக் கொண்டிருந்தனர்.

"தினமணி' நாளிதழின் முன்னாள் ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம், எம்.எஸ். சுப்பிரமணியம், சுந்தர ராகவன் போன்ற பல எழுத்தாளர்கள் எழுதிய நூல்களையும் அல்லயன்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

அப்போது, "தேசசேவை ஒன்றையே கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட இந்நூல்கள், பொருளாதார நெருக்கடியைத் தந்தாலும், மன நிம்மதியைத் தந்தது'' என்று  அல்லயன்ஸ் குப்புஸ்வாமி ஐயர் தெரிவித்துள்ளார். அதையறிந்த  ராஜாஜி, தன்னுடைய எழுத்துக்களை  எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வெளியிட வி. குப்புஸ்வாமி ஐயருக்கு அனுமதி வழங்கினார். ராஜாஜி எழுதிய நூல்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்ததால், 'அல்லயன்ஸ்' வெற்றிகரமான நிறுவனம் ஆனது.

மொழி பெயர்ப்புகள்

1937- ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அனுமதியுடன், அவர் எழுதிய "இளைஞனின் கனவு', "புது வழி' என்ற இரண்டு நூல்களை வி. குப்புஸ்வாமி ஐயர்   தமிழில்  பிரசுரித்தார். ஆங்கிலேய அரசு அந்நூல்களுக்குத் தடை விதித்து. ஆனால், தடை வருவதற்கு முன்பே இரண்டு நூல்களின் பிரதிகளையும் சிலோன், சிங்கப்பூர், மலேசியா, பர்மா ஆகிய இடங்களுக்கு வி. குப்புஸ்வாமி ஐயர் அனுப்பிவிட்டிருந்தார். அதனால், சுபாஷ் சந்திர போஸ் மலேசியா சென்றிருந்த போது, அவரது அன்பர்கள் இந்த நூல்களை இலவசமாக அச்சிட்டு அங்கிருந்த தமிழர்களுக்கெல்லாம் வழங்கினார்கள் என்றும். அதன் மூலம் சுபாஷ் சந்திர போஸின் மீது பற்று ஏற்பட்ட ஏராளமான தமிழர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தனர் என்று கூறப்படுகிறது.

பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய "ஆனந்த மடம்' என்ற நூலை "அல்லயன்ஸ்' கம்பெனி தமிழில் வெளியிட்டது. வந்தே மாதரம்' என்னும் முழக்கம் இடம் பெற்றிருந்ததால் இந்நூலையும்   ஆங்கிலேய அரசு தடை செய்தது.

சரத் சந்திரர், ரவீந்தரநாத் தாகூர் ஆகியோரின் நூல்களை வங்காள மொழியில் இருந்தும், பிரேம் சந்தின் நூல்களை ஹிந்தி மொழியில் இருந்தும், வி.ஸ. காண்டேகரின் நூல்களை மராத்தி மொழியில் இருந்தும் முதன்முதலில் தமிழில் மொழிக்கு மொழி பெயர்த்து வெளியிட்டது வி. குப்புஸ்வாமி ஐயர்தான்.

பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களது வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிடும் போது, பாபு ராஜேந்திர பிரசாத் அவர்கள் சென்னைக்கு வந்திருந்தார். அவருக்கு நேர அவகாசம் இல்லாமையால் ரயில் வண்டியில் இருந்து இறங்கியவுடன், பிளாட்பாரத்திலேயே  நூலை வெளியிட்டு விட்டு சென்றார்.

"கவியரசி சரோஜினி தேவி' என்கிற நூலை வெளியிட்டபோது,சரோஜினி நாயுடு 'அல்லயன்ஸ்' வி. குப்புஸ்வாமி ஐயருக்கு வெண்முத்து ஒன்றை பரிசாக வழங்கினார்.

சுதந்திர போராட்ட வீரரும் எழுத்தாளருமான தி.ஜ.ர. (ரங்கநாதன்) அவர்கள் "ஆசிய ஜோதி ஜவஹர்' என்ற நூலை எழுதி அல்லயன்ஸ் குப்புஸ்வாமி ஐயர்  வெளியிட்டதோடு, அந்த நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து   ஜவஹர்லால் நேருவுக்கு அனுப்பினார். "வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதுபவர்கள், கட்டாயம் இந்த நூலைப் படிக்கவேண்டும். மிகவும் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது' என்று பாராட்டி ஜவஹர்லால் நேரு கடிதம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

1932 - ஆம் ஆண்டு ப்ரெஞ்ச் எழுத்தாளர் ரோமெய்ன் ரோலண்டு (Romain Rolland) எழுதிய "மகாத்மா காந்தி' என்ற நூலை அவரது அனுமதியுடன் தமிழில்  அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர் வெளியிட்டார். மேலும்,  வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம், சென்னை உப்பு சத்தியாகிரகம் ஆகிய நிகழ்வுகளையும் நூல்களாக வெளியிட்டார்.  இவற்றையெல்லாம் அறிந்த   மகாத்மா காந்தி 28.01.1946-இல் சென்னை ஹிந்தி பிரசார சபையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று, அங்கு அமைக்கப்பட்டிருந்த  அல்லயன்ஸ் கடைக்கு விஜயம் செய்து ஒவ்வொரு நூலாகப் பார்த்து  விவரங்களைக் கேட்டறிந்து, வி. குப்புஸ்வாமி ஐயரைப் பாராட்டினார்.

சுதந்திரநாள் கொண்டாட்டம்

வி. குப்புஸ்வாமி ஐயர்,  1947- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15- ஆம் நாள் சுதந்திர தினத்தன்று, அந்தத் திருநாளைக் கொண்டாட "தேசிய கீதம்' என்ற நூலை அச்சிட்டு இலவசமாக வழங்கினார்.

நூற்றாண்டு விழா

அல்லயன்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா 2001- ஆம் நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய 'துக்ளக்' இதழின் ஆசிரியர் 'சோ' ராமசாமி "பேரைப் பாருங்களேன் "அல்லயன்ஸ்!' சாதாரணமா அல்லயன்ஸ் - என்றால் ஒரு தேர்தல் வரைக்கும்கூடத் தாங்காது..! நூறு ஆண்டுகள் தாங்கின "அல்லயன்ஸ்' இந்தியாவிலேயே இது ஒன்றுதான் இருக்கும்" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

இதழ்

அல்லயன்ஸ் வி.'குப்புஸ்வாமி ஐயர்,  "விவேகபோதினி' என்ற மாத இதழை 1908- ஆம் ஆண்டு தொடங்கி 1932- ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடத்தினார். இந்த இதழில்  பால கங்காதர திலகர், மதன் மோகன் மாளவியா, மகாதேவ கோவிந்த ரானடே, மகான் மணி ஐயர், சுப்பிரமணிய ஐயர் போன்ற தேச பக்தர்களின் வரலாறுகளைத் தொடராக வெளியிட்டு, பிறகு புத்தகங்களாகவும் வெளியிட்டார்.

மறைவு

அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர் 1949- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23- ஆம் நாள் காலமானார்.

உசாத்துணை

  • தமிழ் வளர்த்த பெருமக்கள், என் ஸ்ரீநிவாசன், அல்லயன்ஸ் நூற்றாண்டு வெளியீடு
  • இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அல்லயன்ஸ், தினமணி இணைய இதழ் பதிவு ஆகஸ்ட் 15, 2021; https://www.google.com/amp/s/m.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2021/aug/15/alliance-in-the-indian-freedom-struggle-3680010.amp