being created

எழுத்தாளன் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 21:49, 7 January 2023 by ASN (talk | contribs) (Page created; Para Added, Images Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எழுத்தாளன் இதழ்
எழுத்தாளன் சிறப்பு மலர் - 1963
திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்கம் - இலக்கிய மாநாடு - 1967

எழுத்தாளன் (1958) திருச்சியில் இருந்து வெளிவந்த இதழ். திருச்சிராப்பள்ளி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் இவ்விதழ் வெளிவந்தது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர், அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார்.

பதிப்பு, வெளியீடு

தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார், திருச்சிராப்பள்ளியில், 1951-ல், திருச்சிராப்பள்ளி எழுத்தாளர் சங்கத்தை நிறுவினார். திருலோக சீதாராம், அகிலன், ஏ.எஸ். ராகவன், துறைவன், டி.என்.  சுகி சுப்பிரமணியன், நீலமேகம், கலைவாணன் ஆகியோர் இச்சங்கம் அமைய உறுதுணையாக இருந்தனர்.

சங்கத்தின் சார்பில் இதழ் ஒன்றை வெளியிட விரும்பிய அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார், 1958-ல், எழுத்தாளன் இதழைத் தொடங்கினார். அவரே இதழின் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் இருந்தார். டி. எல். பஞ்சாபகேசன் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 12 முதல் 16 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழின் விலை நாலணா. ஆண்டுச் சந்தா மூன்று ரூபாய். 1971-க்குப் பின் ஆண்டுச் சந்தா ஐந்து ரூபாய் ஆக உயர்ந்தது. ஆண்டுக் கணக்கு ’கனவு’ என்றும், மாதக் கணக்கு ‘கற்பனை’ என்றும் இவ்விதழில் குறிக்கப்பட்டது.

உள்ளடக்கம்

இதழின் முகப்புப் பக்கத்தில் ’எழுத்தாளன்’ என்ற தலைப்பின் கீழ், ’தமிழ் எழுத்தாளர்களின் சொந்தப் பத்திரிகை’ என்ற முகப்பு வாசகம் இடம் பெற்றது. முகப்பில்

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை

ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்

இயலுகின்ற ஜடப்பொருள்க ளனைத்தும் தெய்வம்

எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்

- என்ற பாரதியின் வரிகள் இடம் பெற்றன. இதழ் தோறும் தலையங்கம் இடம் பெற்றது. கவிதை, கதை, கட்டுரைகள், நாடகங்கள், இலக்கிய நிகழ்வுகள், படைப்பிலக்கியவாதிகள் பற்றிய செய்திகள், இந்திய மொழி எழுத்தாளர்கள் அறிமுகம், அவர்களது எழுத்துக்களைப் பற்றிய மதிப்பீடு, அயல்மொழி இலக்கியங்கள், இலக்கியவாதிகள் பற்றிய அறிமுகம். 'புத்தகப் பூங்கா' என்ற பகுதியில் நூல் மதிப்புரை, 'எழுத்துலகம்' என்ற தலைப்பில் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் பெருமன்றத்தின் செயற்பாடுகள் போன்றவை இவ்விதழில் இடம் பெற்றன.

தமிழோடு கூடவே ஆங்கிலத்திலும் கதை, கட்டுரைகள், நூல் விமர்சனங்கள் இவ்விதழில் வெளியாகின. விளம்பரங்களுக்கும் இவ்விதழ் இடமளித்தது. இலக்கியம் மட்டுமல்லாது, ஆன்மிகம், அரசியல் செய்திகளும் ‘எழுத்தாளன்’ இதழில் இடம் பெற்றன. ‘காங்கிரஸ்’ இயக்கத்தை ஆதரித்துத் தலையங்கம், கட்டுரைகளை எழுதினார் அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார்.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.