இளம்பூதனார்
இளம்பூதனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
இளம்பூதனார் என்பதில் பூதன் என்பது இவரது இயற்பெயர் என்றும், பூதன் என்ற பெயரில் பல புலவர்கள் இருந்ததால் இவரின் இளவயது கருதி இளம்பூதன் என இவர் அழைக்கப்பட்டார் என்றும் கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
இளம்பூதனார் இயற்றிய ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 334- வது பாடலாக இடம் பெற்றுள்ளது. தலைவனைப் பிரிந்திருந்தால் இழப்பதற்கு உயிர் மட்டுமே உள்ளது என தலைவி உரைப்பதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
பாடலால் அறியவரும் செய்திகள்
குறுந்தொகை 334
- நெய்தல் திணை
- "வரைவிடை ஆற்றகிற்றியோ?'' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.
- சிவந்த வாய் கொண்ட வெண்காக்கைக் கூட்டம் கடலலை தன்னை நனைப்பதில் மகிழ்ந்து பனி பொழிவதை வெறுக்கும் கானல் நிலத்தின் சேர்ப்பன் அவன்
- இந்தப் பனிக்காலத்தில் அவன் நம்மை விட்டு விலகி இருந்தால் நான் இழப்பதற்கு என் உயிரைக் காட்டிலும் வேறு என்ன இருக்கிறது
பாடல் நடை
குறுந்தொகை 334
சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோ
டெறிதிரைத் திவலை யீர்ம்புற நனைப்பப்
பனிபுலந் துறையும் பல்பூங் கானல்
விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பி னொருநம்
இன்னுயி ரல்லது பிறிதொன்
றெவனோ தோழி நாமிழப் பதுவே
உசாத்துணை
குறுந்தொகை 334, தமிழ்த் துளி இணையதளம்
குறுந்தொகை 334, தமிழ் சுரங்கம் இணையதளம்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.