under review

குன்றம் பூதனார்

From Tamil Wiki
Revision as of 00:55, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குன்றம் பூதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் பரிபாடலில் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

குன்றம் பூதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பூதன் என்னும் இயற்பெயர் உடையவர். குன்றம் என்னும் சிறப்பு அடைமொழி பெயர் திருப்பரங்குன்றத்து முருகனை சிறப்பித்து பாடியதால் வந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

குன்றம் பூதனார் பாடிய பாடல்கள் பரிபாடலில் 9 ,18-வது பாடல்களாக இடம்பெற்றுள்ளன. இவர் பாடிய இரண்டு பரிபாடல்களும் திருப்பரங்குன்றத்து முருகனின் மேல் பாடப்பட்டவை. 9-வது பாடல் முருகனின் பிறப்பையும் வள்ளி, தேவசேனை உடனான திருமணத்தையும் காதல் விளையாட்டையும் கூறி முருகனின் பெருமைகளை சொல்லி வாழ்த்துகிறது. 18-வது பாடல் திருப்பரங்குன்றத்தின் வளத்தையும் முருகனின் போர்வீரத்தையும் கூறுகிறது. பரிபாடல் 9-க்கு பாலையாழ் பண்ணிலும் 18-க்கு காந்தார பண்ணிலும் நல்லச்சுதனார் இசையமைத்துள்ளார்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

பரிபாடல் - 9
  • பெருநிலம் ஆடாமல் இமயமலை வடதிசையில் இருக்க இந்திரன் காத்துவந்தான். இமயம் ஓங்கி உயர்ந்த மலை. தெய்வம் வாழும் மலை. அச்சம் தரும் மலை. தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் படைத்த பெரிய வாரியாகிய கங்கை வானத்திலிருந்து இறங்கும்போது சிவபெருமானின் விரிந்த சடையில் தங்கியதால் சினம் தணிந்தது. கங்கை நீரைத் தலையில் அணிந்தவன் சலதாரி. அவன் நஞ்சைச் தொண்டையில் வைத்திருக்கும் அண்ணல். ஆரல் என்னும் கார்த்திகை மீனிலிருந்து சிவனுக்கு மகனாகப் பிறந்தவனே!
  • கரு கரு இமையும் கண்ணும் கொண்டவள் வள்ளி. அவளை மறித்து அவளது தோளைக் களவு நெறியில் நீ மணந்தாய். அப்போது உடலில் ஆயிரம் கண் கொண்ட இந்திரனின் மகள் தேவசேனை முதுவேனில் காலத்தில் பெய்யும் மழை போன்ற கண்ணீரைத் திருப்பரங்குன்றத்தில் மழையாகப் பொழிந்தாள்.
  • சிறந்தது ஒத்த காதலில் அமையும் காம இன்பமே. அதில் விரும்புபவர்கள் ஒத்துப்போனால் உடலுறவு நிகழும். பிணக்குப் போட்டுக்கொண்டு புலவியால் கற்பு சிறப்படையும். பரத்தை உறவால் புலவி தோன்றும். அப்போது கணவன் இரத்தலும், மனைவி ஈதலும் நிகழும். இது பண்புதான். தமிழ்நெறியில் சுணங்கறை என்னும் பாங்கு உண்டு. சுணங்கு = காலம் தாழ்த்து, அறை > அறு = பேசி அறு. பேசி அறுத்துக் காலம் தாழ்த்துதல் சுணங்கறை. பெண் தன் மாதவிடாய் காலத்தில் செந்நிறப் பூவை நாளணியாக அணிந்துகொண்டு தன் நிலையைப் புலப்படுத்துதல் ஒருவகைச் சுணங்கறை. கணவன் நடுங்கும்படி மனைவி உரையாடுதல் மற்றொரு சுணங்கறை. கணவனுடன் ஊடுதல் இன்னொருவகைச் சுணங்கறை. அதனால் கணவனைப் பிரிய மனமில்லாத மகளிர் கணவனுடன் மாறுபாடு கொண்டு துனி என்னும் பிணக்குச் சண்டை போட்டுக்கொள்வதில் தவறு இல்லை. இது தள்ளாப் பொருள்நெறி.
  • வெள்ளப்புனல் கரையிலிருந்த சந்தன மரங்களைச் சாய்த்துக்கொண்டு பாய்ந்தது. அவன் தன் சந்தனம் பூசிய மார்பில் புனல் கொண்டுவந்த சந்தனத்தின் வைரக்கட்டைகளைப் புகைத்துப் புகை ஊட்டியிருந்தான். பூ மாலையும் ஒளிரும் வயிரமாலையும் அணிந்திருந்தான். ஊடும் மனைவி அவனைத் தொழுது வினவுகிறாள். "மாயா! உன் தவறு ஒன்றும் இல்லை. என்னைப்போல் செம்மை இல்லாதவள் அழகை உண்ணலாமா? உண்டுவிட்டு வந்து திருவுடைய என் மென்தோளில் தங்கி நுகரலாமா" - என்றாள்.
  • நீ இங்கு வந்துவிட்டதால், பல் இளித்தும் உன்னை அடையாத மகளிர், உன் மழை பொழியுமா என்று வருந்திக்கொண்டிருப்பர். அவர்களைப் போய்க் காப்பாற்று. ஐயனே! நான் பிரிவு என்னும் கொடிய நோய் கரையாமல் துன்புற்றபோது ஒருத்தி என்னைக் கைகாட்டி மாறுபாடு கொண்டு என்னை விட்டு விலகி நின்றாள் - என்றாள் மனைவி. அப்போது அவள் முன் நின்ற கணவனாகிய மன்மதவேள் போன்றவன் தன் தலையை அவள் காலடிமேல் வைத்து வணங்கினான். அப்போது அவள் "வருந்தாதே" என்று சொல்லி அவனுக்குத் தன் மார்பைக் கொடுத்தாள். அவன் அணைத்தான். அவள் "என்னை நெருங்காதே" என்று கூறி அவனை அணைத்துக்கொண்டு, தன் மாலையால் அடித்தாள். அப்போது மனைவி வளர்த்த மயிலும், காதல்-மனைவி வளர்த்த மயிலும் இணைந்து பறந்தன. இருவரின் வளர்ப்புக் கிளிகளும் ஒன்றோடொன்று மழலை-மொழி பேசிக்கொண்டன. இருவர் கொண்டையிலும் மலர்த்தேன் உண்ணும் வண்டுகள் இடம் மாறித் தேன் உண்டன. இப்படி வெறியாட்டம் ஆடும் முருகனின் குன்றம் பரிமாற்றம் கொள்ளும் நிலையினதாயிற்று.
  • ஒருவன்மீது காதல் கொண்ட இருவரின் மணமாலைகளும் மாட்டிக்கொண்டன. தலையிலணிந்த மாலைகளும் தடுமாற்றம் கொண்டன. அவர்களின் மார்போடு மார்பு மத்தாகி இடித்துக்கொண்டன. பூங்கோதையால் சுற்றப்பட்ட வரிப் பந்துகளை ஒருவர்மீது ஒருவர் வீசினர். அவர்களின் பேதை நெஞ்சம் பிறிதாகிக் கிடந்தது. அவர்கள் இருவருமே ஊதினாலே தள்ளாடும் மெல்லிய இடையை உடையவர்கள். ஒருவர் தலையை ஒருவர் பிடித்துக்கொண்டு "நூழில்" போர் செய்தனர். அது இரண்டு யானைகள் குளத்துக்குள் சண்டையிட்டுக்கொள்வது போல இருந்தது.
  • இருவரும் வெற்றிக் களிப்போடு வரும் குதிரை போல வந்து ஒருவரோடு ஒருவர் தாக்கிக்கொண்டனர். தேரை வடம் பிடித்து இழுப்பது போலப் பிடித்து ஒருவரை ஒருவர் இழுத்துக்கொண்டனர். வில் வளைவது போல வளைந்து இருவரும் போரிட்டனர். அம்புகள் பாய்வது போலப் பாய்ந்து தாக்கிக்கொண்டனர். அவர்களது தோளில் அணிந்திருந்த வளையல்கள் சக்கரம் போலச் சுழன்றன. இவர்கள் இருவருமே மெல்லிய இயல்பினை உடைய மயில் போன்றவர்கள்.
  • ஒளி மிகுந்த, வலிமை மிக்க, மலை போன்ற, மார்பினை உடைய முருகனை வானவன் மகள் தேவசேனையின் தோழிமார் தம் மலர் போன்ற கண்கள் சுழன்றாட, பொருளில்லாத மடமொழிகளைப் பரிமாறிக்கொண்டு சுனையில் நீராடினர்.
  • சிலர் சுனைப்பூவில் தேன் உண்ணும் வண்டுகள் போல யாழிசை மீட்டினர். சிலர் மயில் போல ஆடினர். சிலர் குயில் போல இசை கூட்டித்தந்தனர். சிலர் ஆரவாரம் செய்தனர். இவை குன்றக் குறமகள் வள்ளி நடத்திய தும்பைப் போர் போன்று இருந்தது.
  • சூரபன்மனை அழித்த போராளியே! உன் குன்றத்தில் ஆடுவோர் தாமே சலிக்கும் அளவு ஆடினர், பாடுவோர் தாமே சலிக்கும் அளவு பாடினர். வல்லாரை வல்லார் கண்டு அடங்கினர். அல்லாரை அல்லார் கண்டு அடங்கினர். இப்படி ஆக்கிய மன்றக் கொடிகள் சுனைக்கரைகளில் பறந்தன.
  • விரும்பும் வேல், வென்று உயர்த்திய கொடி, கற்புக் கடம் பூண்ட இரு மனைவியர் காட்டும் அன்புரிமை - ஆகியவற்றைக் கொண்ட வியக்கத் தக்க குமரனே!
  • உன்னை வாயார வாழ்த்துகின்றோம். நெஞ்சாரப் பரவுகின்றோம். தலை வணங்கித் தொழுகின்றோம். உன் காலணியாக இருக்க விரும்புகின்றோம். இவற்றை எங்களுக்குப் பயனாக நாள்தோறும் தந்து நீ பொலிவாயாக.
பரிபாடல் - 18
  • கார் காலத்தை விரும்பி ஏற்கும் மழைமேகம் போல போரை விரும்பி ஏற்று, நீர் சமன்பட்டுக் கிடக்கும் கடலில் சூரபன்மனைக் கொன்ற வேலை உடையவனே! உன் சிறப்பாகிய குன்றம் நிற்பது போல் உன் திருப்பரங்குன்றம் நிற்கிறது.
  • ஒருவன்மயிலைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதனைக் கண்ட அவள் ஒருத்தி"உன் எண்ணம் தெரிகிறது. என்னை ஏளனம் செய்யாதே" என்றாள். "காதல் கனியே, உன் நெஞ்சிலுள்ள களவு எண்ணத்தைத் தெரிந்துகொண்ட மயில் தன்னால் உன்னைப் போல் காதல் கொள்ள முடியவில்லையே என்று ஏங்கி ஆடுவதைத்தான் பார்த்தேன், நீ என்னை வேறு வகையில் பார்க்கிறாய்" என்று சொல்லி அவன் அவள் ஊடலைத் தணித்தான். இப்படி நிகழும் குன்றம் அது.
  • யாழில் நைவளப் பண் பாடிக்கொண்டு பொய்யை வளமாகப் பேசும் பாண! குன்றம் ஐந்திணை வளங்களும் கொண்டது. மை தீட்டிய மலர்க்கண்ணார் அரவணைத்த வடு உன் தலைவன் மேல் படிந்துள்ளதைப் பார். அவனும் அவளும் ஒருவரை ஒருவர் மொய்த்துக்கொண்ட முயக்கம்அது. நான் கையும் களவுமாக கண்டுபிடித்துவிட்டேன். அவன் மெய்யை வளப்படுத்திய பொன்னணி எங்கே?
  • மரங்கள் தளிர்த்திருக்கின்றன. அதனை உரசிக்கொண்டு மழை மேகங்கள் மேய்கின்றன. இப்படி மலை கண்ணை விரித்துப் பார்க்க வைக்கிறது. அடர்ந்த இருளைக் கொடிமின்னல் கிழிக்கிறது. வெண்ணிறம் சுடரும் வேலை உடையவன் முருகன். அவன் மலையில் தோன்றும் ஞாயிறு நெற்றியில் ஓடை கட்டியிருக்கும் அவன் களிறு போல் தோன்றுகிறது. அவனது அம்பலத்தில் காமவேள் காம மலரம்புகளை எய்கிறான்.
  • முருகனின் வேலிலும் அம்பிலும் அழகு ததும்பும்.நிறைநாழிபோல் அவன் மலையில் காடுகள் நிறைந்திருக்கும். மலையில் உள்ள சுனையில் கார்மேகமும், நீரும் ததும்பும். அவன் அணிந்திருக்கும் பூ அணியில் அழகு செறிந்து ததும்பும். போரில் தோற்றுக் கட்டுண்டு கிடப்பவர் போல காந்தள் மலர் முறுக்முடன் ததும்பும். அவர்களின் கை விரிவது போல காந்தள் மொட்டு விரியும். யாழின் நரம்பு தும்பியானது பூவில் ஊதும் ஓசை போல இசை எழுப்பும். அச்சிரம் போல மழை கால் தொங்கிப் பொழியும். மழை பொழிவை இந்திரனின் வானவில் காட்டும்.
  • வில்லிலிருந்து அம்பு பாய்வது போல மலர்கள் கொட்டும். முருகன் குன்றத்தில் உள்ள மரங்களை யாரும் வெட்டமாட்டார்கள். அவன் முரசு போரில் முழங்குவது போல முழங்கும். மழை மேகங்கள் தொகுதியாகி இடியாக முழங்குவது போல முழங்கும். அருவி கொட்ட அதன் நீர் முத்துக்களால் வரை அணி பெற்றுத் திகழும். தினை கதிர்விட்டிப்பதால் குருவிகளின் ஆரவாரம் கேட்கும். மயில்-எருவை கோத்துக் கூட்டமாக நிறையும்படி வானவில் மலையில் தோன்றும். வரி வரியாக வண்டுகள் மொய்ப்பதால் சுனை கூனி வளையும். யாழின் முறுக்கிய நரம்பில் பண்ணோசை எழும்பும். பூ, விளக்கு, புகையும் அகில், சந்தனம் ஆகியவை மணம் கமழும்.

பாடல் நடை

பரிபாடல் - 18

....................................................................
வில்லுச் சொரி பகழியின் மென் மலர் தாயின
வல்லுப் போர் வல்லாய்! மலைமேல் மரம்.
வட்டு உருட்டு வல்லாய்! மலைய நெட்டுருட்டுச்
சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து,
போர் ததும்பும் அரவம் போல,
கருவி ஆர்ப்ப, கருவி நின்றன குன்றம்.
அருவி ஆர்ப்ப, முத்து அணிந்தன, வரை;
குருவி ஆர்ப்ப, குரல் குவிந்தன, தினை;
எருவை கோப்ப, எழில் அணி திருவில்
வானில் அணித்த, வரி ஊதும் பல் மலரால்,
கூனி வளைத்த சுனை.
புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து,
சுருதியும் பூவும் சுடரும் கூடி,
எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும்,
செரு வேற் தானைச் செல்வ! நின் அடி உறை,
உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்கு
பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே!
.....................................................................

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Nov-2025, 09:11:42 IST