சத்திநாதனார்
From Tamil Wiki
சத்திநாதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
சத்திநாதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சத்திநாகனார் என்றும் சில ஏட்டுப் பிரதிகளில் குறிக்கப்படுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
சத்திநாதனார் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 119-வது பாடலாக அமைந்துள்ளது. தலைவியை கூடிப் பிரிந்த தலைவன், தனக்கு நேர்ந்த துன்பத்தை பாணனிடம் உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- வெண்ணிற கூர்மையான பற்களையுடைய குட்டி பாம்பின் தீண்டலால் பேருருவம் கொண்ட யானை துன்பத்திற்கு உள்ளாகும்.
- உவமை: தலைவன் யானைக்கும் தலைவி குட்டி பாம்பிற்கும் உவமிக்கப்பட்டனர்.
பாடல் நடை
குறுந்தொகை - 119
- திணை: குறிஞ்சி துறை: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்குந் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.
சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள் முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள்எம் அணங்கி யோளே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- குறுந்தொகை - 119:Nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Dec-2024, 10:52:14 IST