under review

உறையூர் கதுவாய் சாத்தனார்

From Tamil Wiki
Revision as of 00:54, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

உறையூர் கதுவாய் சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

உறையூர் கதுவாய் சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். உறையூரில் பிறந்து வாழ்ந்தவர். சாத்தனார் என்னும் பெயர் உடையவர். இவரது பெயருக்கு முன்னோட்டாக அமையும் கதுவாய் என்ற சொல்லுக்கு முரிந்த வாய் என பொருள். புலவரின் பெயருடன் கதுவாய் என்ற சொல் இணைந்ததன் காரணத்தை அறிய இயலவில்லை.

இலக்கிய வாழ்க்கை

உறையூர் கதுவாய் சாத்தனார் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் 370-வது பாடலாக அமைந்துள்ளது. தலைவியுடன் தனக்கு ஏற்பட்டிருக்கும் ஊடலுக்கான காரணத்தை பாணனிடம் தலைவன் கூறுவதாக மருதத் திணையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • அழகிய அணிகளை சூடிய தலைவி சுற்றத்தாரின் உதவியுடன் கடுமையான மகப்பேறு அனுபவத்தை தாண்டி வந்து, குலத்திற்கு நன்மை சேர்க்கும் விதமாக புதல்வனை ஈன்றுள்ளாள்.
  • வெண்சிறு கடுகு எண்ணெய் தடவி பந்தல்கால் நடப்பட்டிருக்கும் விழாவுக்குரிய ஒளிமிக்க வீட்டில் புதுப்பாயில் புதல்வனுடன் தாய் படுத்திருக்கிறாள்.
  • மகபேற்றால் வயிற்று தசைகளில் தோல் வெளுப்பும் வரிவரியான தளும்பும் ஏற்பட்டதால் இளமை நலம் குறைந்துள்ளாள்.

பாடல் நடை

நற்றிணை - 370

திணை : மருதத் திணை துறை: ஊடல்நீட ஆற்றனாய் நின்றான் பாணற்குச் சொல்லியது

 
வாராய் பாண நகுகம் நேரிழை
கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக்கு உதவி
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள்காழ்
விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப்
புதல்வன் ஈன்றெனப் பெயர்பெயர்த்து அவ்வரித்
திதலை அல்குல் முதுபெண் டாகித்
துஞ்சுதி யோமெல் அஞ்சில் ஓதியெனப்
பன்மாண் அகட்டிற் குவளை ஒற்றி
உள்ளினென் உறையும் எற்கண்டு மெல்ல
முகைநாள் முறுவல் தோற்றித்
தகைமலர் உண்கண் புதைத்துவந் ததுவே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Dec-2024, 20:18:21 IST