under review

ச.த. சற்குணர்

From Tamil Wiki
Revision as of 17:31, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ச.த, சற்குணர்

ச.த. சற்குணர் (சாமுவேல் தர்மராஜா சற்குணர்) (மே 25, 1877 - டிசம்பர் 23, 1952) தமிழறிஞர். இலக்கண, இலக்கிய ஆராய்ச்சியாளர். சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மயிலை சீனி. வேங்கடசாமி, அ.கு. ஆதித்தர் போன்ற தமிழறிஞர்களை உருவாக்கினார். லத்தீன், கிரேக்கம் உள்ளிட்ட பன்மொழிகள் அறிந்திருந்தார். உ.வே.சா.வின் நன்மதிப்பைப் பெற்ற அறிஞர். இலக்கண ஆக்கம், தமிழ் இலக்கியத் தொகுதி போன்ற நூல்களை எழுதினார்.

பிறப்பு, கல்வி

சாமுவேல் தர்மராஜா சற்குணர் என்னும் ச.த. சற்குணர், மே 25, 1877 அன்று, திருநெல்வேலியில் உள்ள முதலூர் என்ற சிற்றூரில், சாமுவேல் சற்குணர் - ஞானப்பூ அம்மாள் இணையருக்குப் பிறந்தார். 'சா.த. சற்குணர்' என்று தம் பெயரை அமைத்தால் அமங்கலச் சொல் வருவதாகக் கருதி, ச.த. சற்குணர் என்று தம் பெயரை மாற்றி அமைத்துக் கொண்டார். தொடக்க மற்றும் உயர்நிலைக் கல்விகளைத் தம் தம் தந்தையாரிடமே கற்றார். சி.எஸ்.எம். உயர்நிலைக் கலாசாலையில் புகுமுக வகுப்பு படித்தார்.

சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் பயின்றார். வீ.கோ. சூரியநாராயண சாஸ்திரியார், கோபாலாச்சார், மகாதேவ முதலியார், மறைமலையடிகள் போன்றோர் சற்குணருக்குத் தமிழாசிரியர்களாக இருந்தனர். அவர்களிடம் தமிழ் கற்றார். பி.ஏ. வகுப்பில், கல்லூரியில் தமிழில் முதன்மையாகத் தேறியதற்காகச் சேதுபதியின் பொற் பதக்கம் பெற்றார். மதுரைத் தமிழ்ச் சங்கத்துத் தேர்விலும் முதல் பரிசு பெற்றார். வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார். லத்தீன், கிரேக்கம் உள்ளிட்ட பன்மொழிகள் அறிந்திருந்தார்.

தனி வாழ்க்கை

ச.த. சற்குணர் மணமானவர்.

கல்விப் பணிகள்

ச.த. சற்குணர், 1905-ல் சென்னை ஹாரிஸ் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து ஒன்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். 1914-ல், சென்னை வேப்பேரி பவுல் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்த கா. நமச்சிவாய முதலியார் பணி விலகியதால், அப்பள்ளியின் தமிழாசிரியர் பொறுப்பை சற்குணர் ஏற்றார். மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படுத்தியதுடன், செய்யுள்கள் இயற்றுமளவுக்கு அவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

சற்குணரின் திறமையை அறிந்த சென்னை கிறித்தவக் கல்லூரித் தலைவர் மெஸ்டன் துரை, சற்குணரை கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்து பணியாற்றுமாறு அழைத்தார். சற்குணரும் அதனை ஏற்றார். அங்கு பணியாற்றிய காலத்தில், தமிழ்ப் பாடத்தில் 95% மாணவர்களைத் தமிழில் தேர்ச்சி பெற வைத்தார்.

அ.கி. பரந்தாமனார், அ.கு. ஆதித்தர், பண்டிதர் ரா. நடேச நாயகர், பிற்காலத்தில் அறநிலையத்துறை ஆணையராகத் திகழ்ந்த நரசிம்மன் போன்றோர் சற்குணரின் மாணவர்கள்.

ச.த. சற்குணர் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

ஆய்வு

ச.த. சற்குணர் ஆய்வு மனப்பான்மை கொண்டவராக விளங்கினார். புறநானூறு, சீவக சிந்தாமணி, கலித்தொகை குறித்துப் பல ஆய்வுகளை மேற்கொண்டார்.

நூலாக்கம்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக, 'இலக்கண ஆக்கம்' என்ற நூலை எழுதினார். மாணவர்களுக்காக 'தமிழ் இலக்கியத் தொகுதி' என்னும் தமிழ்ப் பாடப் புத்தகத்தை எழுதினார். 'கலைக் கட்டுரைகள்' என்ற நூலை எழுதினார்.

ச. த. சற்குணர், மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் பணிகளிலேயே முழுமையாக ஈடுபட்டதால் அதிகம் நூல்களை எழுதவில்லை.

அமைப்புச் செயல்பாடுகள்

மாணவர் அ. கி. பரந்தாமனாருடன் இணைந்து ஜனவரி 15, 1925-ல், சென்னையில், 'தென்னியந்தியத் தமிழ்க் கல்விச் சங்கம்' என்னும் அமைப்பை நிறுவினார். சற்குணர் தலைவராகவும் அ.கி.பரந்தாமனார் செயலாளராகவும் பணியாற்றினர். சென்னை பல்கலைக்கழக வித்துவான் தேர்விற்கு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சங்கம் முழுக்க முழுக்க சற்குணரின் சொந்தச் செலவில் நடத்தப்பட்டது. அவ்வமைப்பு மூலம் மாணவர்கள் பலர் தமிழ் கற்றனர்.

தமிழர்களுக்குத் தமிழ் மட்டும் போதாது, பல மொழி அறிவும் இருந்தால்தான் தமிழின் சிறப்பைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற கொள்கை உடையவர் ச. த. சற்குணர். தம் மாணவர்கள் பலரையும் அவ்வாறே தமிழோடு பிற மொழிகளையும் கற்க அவர் ஊக்குவித்தார். ஞாயிற்றுக்கிழமை தோறும் புரசைவாக்கம் நகராண்மைப் பள்ளியில் வித்துவான், மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டிதர் பட்டங்களுக்குப் படிப்பவர்களுக்கு இலவச வகுப்புகளை நடத்தினார்.

தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் முயற்சியால் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடந்த தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச. த. சற்குணர், 'கிறித்தவமும் தமிழும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனால் ஊக்கம் பெற்றே மயிலை சீனி. வேங்கடசாமி 'கிறித்தவமும் தமிழும்' என்ற நூலை எழுதினார். அந்த நூலை வேங்கடசாமி எழுதப் பல விதங்களிலும் சற்குணர் உறுதுணையாக இருந்தார்.

பொறுப்பு

  • சென்னை அரசின் பள்ளிப் பாடநூல் தேர்வுக்குழுத் தலைவர்.
  • சென்னைப் பல்கலைக் கழகப் பாடத்திட்டக் குழு உறுப்பினர்.
  • சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்க்குழு உறுப்பினர்.

மணிவிழா

சற்குணரின் மணிவிழா அவரது மாணவரான அ.கி. பரந்தாமனாரின் முயற்சியால் சென்னையில் 1937-ம் ஆண்டில் நடைபெற்றது. மணிவிழாவுக்குத் தலைமை தாங்கி நிகழ்ச்சியைச் சிறப்பித்ததுடன், வாழ்த்துரையும் வழங்கிச் சிறப்பித்தார் உ.வே. சாமிநாதையர். அவ்விழாவை ஒட்டி மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

மறைவு

ச.த. சற்குணர் டிசம்பர் 23, 1952-ல் காலமானார்.

ச.த. சற்குணர் உருவச் சிலை

நினைவு

ச.த. சற்குணரின் நினைவாக அவரது உருவச் சிலை, சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் அமைக்கப்பட்டது.

மதிப்பீடு

ச.த. சற்குணர் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் புலமை பெற்றவராக இருந்தார். மயிலை சீனி. வேங்கடசாமி, அ.கு. ஆதித்தர் போன்ற தமிழறிஞர்களின் உருவாக்கத்தில் சற்குணருக்கு மிக முக்கியப் பங்குண்டு. 'தென்னிந்திய தமிழ்க் கல்விச் சங்கம்' மூலம் பல மாணவர்கள் கல்விபெறக் காரணமானார். வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவும், தமிழ் உயர்வுக்காகவும் உழைத்த முன்னோடித் தமிழறிஞராக ச.த. சற்குணர் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Jul-2025, 18:36:23 IST