under review

நபிமணி மாலை

From Tamil Wiki
Revision as of 16:04, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)

நபிமணி மாலை (1972) இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் கா. அப்துல்கபூர்

வெளியீடு

நபிமணி மாலை 1972-ல் பதிப்பிக்கப்பட்டது. உருது மொழியில் உள்ள பாடல்களைப் போன்று தமிழிலும் நூல்கள் இயற்றப்பட வேண்டும் என்ற காயிதே மில்லத் மற்றும் எம். முகம்மது இஸ்மாயில் சாகிப் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க கா. அப்துல்கபூரால் இயற்றப்பட்டது. சென்னை வண்டலூர் பிறைப்பள்ளியில் கா. அப்துல்கபூர் முதல்வராகப் பணியாற்றும்போது இயற்றப்பட்டது. இப்பாடலின் சில கண்ணிகள் நாகூர் ஹனீபாவால் பாடப்பட்டு இசைத்தட்டாகவும், ஒலி நாடாவாகவும் வெளிவந்தது.

பாமாலை - 18' என்ற இஸ்லாமிய மாலை இலக்கியங்களின் தொகுப்பு நூலிலும் நபிமணி மாலை நூல், அப்துல்கபூர் இயற்றிய பிற மாலை இலக்கிய நூல்களுடன் இணைந்து இடம்பெற்றது. பாமாலை 18 நூலை தக்கலையில் உள்ள பொன்மொழிப் பதிப்பகம், 1999-ல் வெளியிட்டது.

நூலமைப்பு

நபிமணி மாலை, நபிகளின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளைக் கூறும் நூல். 126 கண்ணிகளைக் கொண்டது. ஒவ்வொரு கண்ணியிலும் 'நபி' என்ற சொல் இடம்பெற்றது.

உள்ளடக்கம்

நபிமணி மாலை நபிகள் நாயகத்தைப் புகழ்ந்து பாடப்பட்ட மாலை இலக்கிய நூல். இந்நூலில் நபிகள் நாயகத்தை கா. அப்துல் கபூர், தூதர் நபி, நாதர் நபி, வேதர் நபி, நீதர் நபி என்று பலவகையில் புகழ்ந்து பாடியுள்ளார்.

நபி ஹீரா குகையில் தவமிருந்து வானவர் தலைவர் ஜிப்ரீல் மூலம் பெற்ற திருமறையின் உயர்வு, மெஹ்ராஜ் என்னும் விண்பயண நிகழ்வு, இஸ்லாமியர்களின் கடமைகள், நபியின் சிறப்பான குண நலன்கள், பெருமை, புகழ், ஈகைச் சிறப்பு, தவ ஆற்றல், சிந்தனைகள், அறிவுரைகள் எனப் பல செய்திகளைக் கூறும் நூலாக நபிமாணி மாலை நூல் இயற்றப்பட்டுள்ளது.

பாடல்

ஆளும் இறைவன் தூதர் நபி
அன்பே வடிவாம் நாதர் நபி

அன்பால் நெஞ்சை உழுத நபி
பண்பாம் உரத்தைப் போட்டநபி

அடிமைத் தளையை அறுத்தநபி
அரசச் செல்வம் வெறுத்த நபி

கொடிய பகையை வெறுத்த நபி
கொள்ளும் ஆசை மறுத்த நபி

தாயின் உயர்வைப் போற்று நபி
தாய் நாட்டன்பை ஏற்று நபி

ஆயின் உலகின் ஊற்று நபி
அண்டர் வாழ்த்தும் நபி

கல்லடி பட்டு மலர்ந்த நபி
சொல்லடி பட்டும் உயர்ந்த நபி

பல்லடி பட்டுப் பெயர்ந்த நபி
நல்லடியார்கள் நயந்த நபி

பாலைப் புலவர் பருகு நபி
பைந்தமிழ் காஸிம் உருகு நபி

ஆலிப் புலவர் முருகு நபி
அல்கஸ் ஸாலீ மெருகு நபி

மதிப்பீடு

நபிமணி மாலை, இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. நாயக மாலையில் கூறாது விட்ட பல செய்திகளைக் கூறும் நூலாக நபிமணி மாலை அமைந்துள்ளது.

உசாத்துணை

  • இந்திய இலக்கியச் சிற்பிகள்: கா. அப்துல்கபூர், எழுத்தாக்கம்: ஹ.மு. நத்தர்சா, சாகித்ய அகாதமி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2005.
  • பாமாலை 18, கா. அப்துல்கபூர், பொன்மொழி பதிப்பகம், தக்கலை, முதல் பதிப்பு: 1999


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jun-2025, 14:11:33 IST