இதயநாதம் (நாவல்)
இதயநாதம் (1952 ) ந.சிதம்பரசுப்ரமணியன் எழுதிய நாவல். இசையை அடிப்படையாகக் கொண்டது. தமிழில் இசைப் பின்னணியுடன் எழுதப்பட்ட முதல் நாவல் என விமர்சகர்களால் கருதப்படுகிறது.
எழுத்து, வெளியீடு
ந. சிதம்பர சுப்ரமணியன் 1952ல் எழுதிய இந்நாவலை ஸ்டார் பிரசுரம் வெளியிட்டது. இது அவருடைய முதல் நாவல்.
கரு
இதயநாதம் இசையை யோகமாகப் பயின்றவரான ஓர் இசைமேதையின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. இது மகா வைத்தியநாதையர் வாழ்க்கையால் தூண்டுதல் பெற்று எழுதப்பட்டது என்று சொல்லப்படுகிறது. சிறுவன் கிட்டு சங்கீத யோகியான சபேசய்யரிடம் எப்படியோ வந்து சேர்கிறான். அவருக்கு தகுந்த சீடனாக வளர்கிறான். அவர் மறைவுக்கு பிறகு புகழ் பெற்ற வித்வானாக ஆகிறார். நீலாவை மணக்கிறார். கச்சேரி செய்யாமல் இசைக்காக அர்ப்பணித்து வாழவேண்டும் என எண்ணுகிறார். தாசி பாலாம்பாளுக்கு இசை கற்பிக்கிறார். அவருடைய குரல் போய்விடுகிறது. இசையை தனக்குள்ளே கேட்டுக்கொண்டு மோனத்தில் ஆழ்ந்துவிடுகிறார்.
இலக்கிய இடம்
இதய நாதம் நாவலை ஜெயமோகன் 'பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகளில் ஒன்றாக வகைப்படுத்துகிறார்.[1]
இதயநாதம் தமிழில் இசையைக் களமாக வைத்து எழுதப்பட்ட நாவல்களில் முதலாவது நாவல். பின்னர் வந்த நாவல்களுக்கு இதுவே முன்னுதாரணமானது எனப்படுகிறது.
உசாத்துணை
வெளிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Aug-2025, 13:30:50 IST