under review

காசிக்கலியன் கவிராயர்

From Tamil Wiki
Revision as of 03:44, 26 July 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

காசிக்கலியன் கவிராயர் (பொ.யு. பதினாறாம் நூற்றாண்டு) வரதுங்கராமன் என்னும் வீரபாண்டியனின் அவைப்புலவராக இருந்தவர். அவர் இயற்றிய பஞ்சரத்னமாலைப் பாடல்கள் தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

காசிக்கலியன் கவிராயர் தென்காசியில் 16-ம் நூற்றாண்டில் பிறந்தவர். முற்காலத்தில் தென்காசியில் பிறந்தவர்கள் தங்கள் பெயருக்கு முன்னர் 'காசி' என்ற பெயரினை வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அம்முறையில் இவர் பெயர் காசிக்கலியன் கவிராயராயிற்று. வரதுங்கராம பாண்டியரின் அவைக்களத்தின் தலைமைப்புலவராக இருந்தார். அவர் பாடிய பஞ்சரத்னமாலையின்

'கற்றுணர்ந்தோன்காசிக் கலியன் கவிராயன்
மற்றடந்தோள் வேல்வீர மாறனுக்குச்--சொற்புனைந்தான்
நா மங் கலமும் நவிற்றுகுடை மங்கலமும்
வாண்மங் கலமும் வகுத்து (பஞ்சரத்னமாலை 5)

என்ற இறுதிப்பாடல் மூலம் அவரது பெயர் அறியப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

தென்காசியில் முடிசூடிக்கொண்ட வரதுங்கராம பாண்டியன் என்னும் வீரபாண்டியன்மீது முடி சூட்டுமங்கலநாளில் நாண்மங்கலம்(நாள் மங்கலம்), குடைமங்கலம், வாண்மங்கலம் இவற்றைக் கொண்ட பஞ்சரத்னமாலையைப் பாடினார். இச்செய்தி தென்காசி விஸ்வநாதர் கோயில் கோபுரத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாண்டியன் முடிசூடிகொண்ட வருடம் கலி 4689-ம் ஆண்டு (பொ.யு. 1587) என அறியவருகிறது.

ஐந்து வெண்பாக்கள் தென்காசி விசுவநாதர் கோயிலின் அம்மன் சன்னதியின் சுற்றுப்பிரகாரத்திலுள்ள கல்வெட்டொன்றில் பொறித்து வைக்கப் பெற்றுள்ளன. முதல் வெண்பா அபிராமன் என்ற அரசன்(வரதுங்கன்) வீரபாண்டியன் என்ற அபிஷேக நாமம் பெற்று முடிசூடிக் கொண்டதனைச் சொல்லுகின்றது 2, 3, 4 -ஆவது வெண்பாக்கள் முறையே குடைமங்கலம்(அரசனின் வெண்கொற்றக்குடையைப் போற்றுதல்), வாண்மங்கலம்(வாள் மங்கலம்-அரசனின் வாளைப் போற்றுதல்), நாண் மங்கலம் (நாள் மங்கலம்-அரசன் முடிசூட்டிய நாளைப் போற்றுதல்) என்ற புறத்துறைகளில் பாடப்பெற்றவை. இறுதி வெண்பாவில் அரசனுடைய சிறப்புகளைச் சொல்லி, இப்பாக்களைப் பாடிய தன்னுடைய பெயரையும் கூறியுள்ளார்.

பாடல்கள்

முடிசூட்டிய காலம்

நண்புற றெதிர்ந் தகலி நாலா யிரத்தறுநூற்
றெண்பத்தொன்பானி லிருங்கடல்சூழ்-மண்பெற்று
மின்னுமகு டம்புனைந்தான் வேல்வர மாறனென
மன்னவர்கோமானபிரா மன்

குடை மங்கலம்

சேணுலவு வெண்டிங்கட் செல்வனெனத் தண்ணென்று
நீணிலமோ ரேழும் நிழற்றுமே -பேணிவந்து
பூவேந்த ரேத்தும் புகழ்வீர பாண்டியனங்
கோவேந்தன் கொற்றக் குடை.

வாண் மங்கலம்

பற்றலர்மண் கொள்ளும் பணிந்தார்க் காசளிக்கும்
கொற்ற முயர்க்குமறங் கூருமே -விற்றடந்தோள்
வில்லவனை வென்றுகொண்ட வீரமா றன்செழியன்
வல்லமெறிந்தானேந்து வாள்.

நாண் மங்கலம்

சீர்கொண்ட செங்கமலை வாழத் திரையாடைப்
பார்கோண்ட வாள்வீர பாண்டியனென்-றேர்கொண்ட
கானுலா மாலைக் கனகமகு டம்புனைந்தான்
மானவே லானபிரா மன்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Jul-2025, 21:06:00 IST