திங்களூர் அருள்மலை நொண்டி நாடகம்
திங்களூர் அருள்மலை நொண்டி நாடகம் (அருள்மலை நொண்டி நாடகம்; திங்களூர் நொண்டி நாடகம்) (பதிப்பு: 1971), சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ஈரோடு மாவட்டம் திங்களூருக்கு அருகில் உள்ள அருள்மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டது. இதனை இயற்றியவர் அவிநாசி நாவலன். இதனை ஏட்டுச் சுவடியிலிருந்து பெயர்த்து எழுதியவர் ம.ப. பெரியசாமித்தூரன்.
வெளீயீடு
திங்களூர் அருள்மலை நொண்டி நாடகம், முதன் முதலில், ம.ப. பெரியசாமித்தூரன் ஆசிரியராக இருந்த ‘காலச்சக்கரம்’ இதழில் தொடராக வெளியானது. பின்னர் சென்னை தமிழ் இசைச் சங்கம் மூலம், டிசம்பர் 1971-ல் பதிப்பிக்கப்பட்டு வெளியானது. இந்த நூலைச் சுவடியிலிருந்து பெயர்த்து எழுதிப் பதிப்பித்தவர் ம.ப. பெரியசாமித்தூரன். இச்சுவடியை தூரனுக்குக் கையளித்தவர் புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர்.
இதே நூல், 1998-ல், ஆசியவியல் நிறுவனத்தால் ஆங்கில மொழிபெயர்ப்புடன் பதிப்பிக்கப்பட்டு வெளியானது. இதன் பொதுப்பதிப்பாசிரியர் ஜி. ஜான் சாமுவேல். பதிப்பாசிரியர் மொ. மருதமுத்து. இணைப் பதிப்பாசிரியர் செ. இராசு. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் கே.ஜி. சேஷாத்ரி.
ஆசிரியர் குறிப்பு
திங்களூர் அருள்மலை நொண்டி நாடகத்தை இயற்றியவர் அவிநாசி நாவலன் என்று அழைக்கப்பட்ட கு. அவிநாசிப் புலவர். இவரது தந்தை பெயர் குள்ளையன். செங்குந்த மரபைச் சேர்ந்த அவிநாசி நாவலன், முருகனின் மீது மிகுந்த பக்திக் கொண்டவர். 18-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்தவராக அறியப்படுகிறார்.
நூல் அமைப்பு
நொண்டி நாடகம் என்னும் நாடக இலக்கிய வகையில் அமைந்த திங்களூர் அருள்மலை நொண்டி நாடக நூலுக்கு, ’அருள்மலை நொண்டி நாடகம்’, ’திங்களூர் நொண்டி நாடகம்’ என வேறு பெயர்களும் உண்டு. நூலின் தொடக்கத்தில் விநாயகர் மீதான காப்புப் பாடல் இடம்பெற்றது. தொடர்ந்து கடவுள் வணக்கம், அவையடக்கம், தோடயம், நூற்பயன் ஆகியன இடம்பெற்றன. தொடர்ந்து நூல் இடம்பெற்றது. நூலின் இறுதியில் வாழ்த்து இடம்பெற்றது.
பாடல்கள் நொண்டி நாடக அமைப்பின் படி ’தரு’ என்னும் நொண்டிச் சிந்து வடிவில் அமைந்துள்ளன. நூலின் இடையிடையே அறுசீர், எண் சீர் விருத்தப்பாக்களும் இடம்பெற்றன. இந்நூலில் ஒரு அகவல் பா, 19 சிந்துப் பாடல்கள், 19 விருத்தங்கள் என 39 பாடல்கள் இடம்பெற்றன.
உள்ளடக்கம்
திங்களூர் அருள்மலை நொண்டி நாடகத்தின் கதைச் சுருக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது.
பகலெத்தி என்பவன் ஒரு திருடன். இவன் களவு தொடர்பான பல வித்தைகளைக் கற்றபின் பல இங்களில் திருடி வாழ்க்கை நடத்தி வந்தான். ஒருநாள் சந்தைப்பேட்டை என்னும் ஊரில் ஒரு திருமணவீட்டில் பொருள்களைத் திருடினான். அப்பொருள்களை விற்று பணமாக்கிக் கொண்டு பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றான். அக்கோயிலில் கெட்டிமுத்தாள் என்ற தாசியின் பரதநாட்டியத்தைக் கண்டான். அவள் மீது மோகம் கொண்டான். அவளும் அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரித்தாள். அவளுடன் இன்பமாக நாடகளைக் கழித்தான்.
சில நாட்களில் பணம் முழுவதையும் அவளிடம் இழந்தான். கையில் பொருள் இல்லாததால் தாய்க்கிழவியாலும், தாசியாலும் ஏசப்பட்டு விரட்டப்பட்டான்.
திருடன் காசிக்குச் சென்று அங்குள்ள அரண்மனையில் திருடினான். பணம் கைக்கு வந்ததும் கெட்டி முத்தாள் மீதான மோகம் மீண்டும் வந்தது. திருடிய பொருளைக் கொண்டுவந்து அவளிடம் கொடுத்து விட்டுச் சில மாதங்கள் இன்பமாக வாழ்ந்தான். மீண்டும் பொருள் அனைத்தையும் இழந்ததால் தாசியால் விரட்டப்பட்டான்.
கள்வன் குதிரைப்பாளையம் என்னும் ஊருக்குச் சென்றான். உசேன் கான்சாகிப் என்னும் படைத்தலைவன், அங்கு கூடாரமிட்டுத் தங்கியிருந்தான். குதிரைகளின் மீது கொண்ட ஈர்ப்பால் குதிரை ஒன்றைக் கள்வன் திருட முற்பட்டான். ஆள் புதியவனாக இருந்ததால் மிரண்ட குதிரை பலவாறாகக் கனைத்துக் குதித்தது. திருடன் பகல்வெத்தியால் அதை அடக்க முடியவில்லை. குதிரையின் சப்தம் கேட்ட வீரர்களால் அவன் சிறைபிடிக்கப்பட்டான்.
படைத்தலைவனின் கட்டளைப்படி திருடன் மாறு கால், மாறு கை துண்டிக்கப்பட்டுக் காட்டில் வீசப்பட்டான். அப்போது அவ்வழியில் வந்த காசி அந்தணர்கள் அவனின் கை, கால் புண்களுக்கு மருந்திட்டு ஆறுதல் கூறினர். திங்களூர் அருள்மலைக்குச் சென்று முருகனை வழிபட்டால் கைகால் மீண்டும் வளரும் என்றுகூறி அவனை ஆற்றுப்படுத்தினர்.
அவ்வாறே நொண்டியாக ஆன கள்வன் பகல்வெத்தியும் முருகனை மனமுருகிப் பாடி இறைவனை வழிபட்டான். முருகனின் அருளால் அவனுக்குக் கை, கால் வளர்ந்தன.
அதன் பிறகு அவன் திருட்டுத் தொழிலைக் கைவிட்டு உண்மையாக வாழ்ந்தான். திருமணம் செய்துகொண்டு மனைவி மக்களுடன் இன்பமாக வாழ்க்கை நடத்தினான்.
திங்களூர் அருள்மலை நொண்டி நாடகம் நூலில் புராணத் தகவல்கள், வரலாற்றுத் தகவல்கள், மக்களின் நம்பிக்கைகள், அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த மக்களின் பழக்கவழக்கங்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றன.
பாடல்
திருடனின் தல யாத்திரை
கோட்டைக் கொத்தளமதில்களும் - சிங்கார
கொம்மைகளும் சித்திரப் பொம்மைகளும்
நாட்டுப்பொற் றாமரைக்குளம் - வைகை
நதியழகும் மதுரைப் பதியழகும்
கண்டேன் விழிகுளிரச் - சொக்கரைக்
கருதிமீ நாட்சியம்மன் தெரிசனமும்
கண்டேன் மனதாரச் சன்னதியை
கூடிப் பணிந்து மேற்கு நாடிச் சென்றேன்
திருடன், முருகனிடம் வேண்டுதல்
திருமகள் மருகா சேனா பதியே
முருகனே ஆறு முகவனே பரனே
மோனமந் திரத்தில் முளைத்தசெந் திருவே
கானக் குறத்தி கணவனே குகனே
குஞ்சரி கணவா குமரா காங்கேயா
சஞ்சல மகற்றும் சடாட்சரப் பொருளே
ஐயுங் கிலியு மான பரனே
மெய்யெங் கிலியும் வீற்றிருந்தவனே
அன்னையும் நீயே அப்பனும் நீயே
என்னுள் ளத்தில் இருப்பவன் நீயே
ஏசுவ துனையே புகழ்வது முனையே
பேசுவ துனையே பிதற்றுவ துனையே
சொல்வது முனையே துதிப்பது முனையே
வல்வினை யதனால் வருந்தினே னுன்சரண்
வேலா யுதனே வெண்ணீ றிடவே
காலது வளரக் காட்சிதந் தருள்வாய்
வாழ்த்து
சீர்பெறு கணக்கர்தட்டார் வாழி - கொங்கு
தேசத்துச் செந்தமிழ்க்கவி ராசர்களும் வாழி
பார்புகழ் நொண்டி நாடகந் தன்னை - தினம்
படித்துப்படித் துக்கொண்டு நடித்தார்கள் வாழி
இன்பமுடன் காதினில் கேட்போரும் - இதை
எழுதிப் படித்தபேர்கள் கிளையெல்லாம் வாழி
தென்புடன் தியாகந்தந்தார் வாழி - அனு
தினமும்புவி யிலுள்ளோர் தினம்தினமும் வாழி
மதிப்பீடு
சிறிலக்கியங்களின் வளர்ச்சிக்குப் பின் பல்வேறு பாடுபொருட்களில், பல்வேறு இலக்கிய வகைமைகளில் நூல்கள் இயற்றப்பட்டன. அவற்றுள் நொண்டி நாடக இலக்கியமும் ஒன்று. 18-ம் நூற்றாண்டில் தோன்றிய நொண்டி நாடக இலக்கிய நூல்களுள் ஒன்றாகவும், சொற் சிறப்பு, பொருள் சிறப்பு, அணி நயம் உள்ளிட்ட பல இலக்கிய நயங்களுடன் இயற்றப்பட்ட சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்றாகவும் திங்களூர் அருள்மலை நொண்டி நாடகம் நூல் மதிப்பிடப்படுகிறது.
உசாத்துணை
- திங்களூர் அருள்மலை நொண்டி நாடகம், ம.ப. பெரியசாமித்தூரன், சென்னை தமிழ் இசைச் சங்க வெளியீடு, முதல் பதிப்பு: 1971, தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்
- திங்களூர் அருள்மலை நொண்டி நாடகம், ஜி. ஜான் சாமுவேல், ஆசியவியல் நிறுவனம், பதிப்பு: 1998, தமிழ் இணைய மின்னூலகம்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.