அருணாசலக் கவிராயர்
- கவிராயர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கவிராயர் (பெயர் பட்டியல்)
To read the article in English: Arunachala Kavirayar.
அருணாசலக் கவிராயர் (1711 - 1779) கர்நாடக இசையில் பல தமிழ்க் கீர்த்தனைகளை இயற்றிப் பாடிய இசை முன்னோடி.
கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1711 - 1779), மாரிமுத்தாப் பிள்ளை (1712 - 1787), முத்துத்தாண்டவர் (1525 - 1600).
இராமாயணக் கதையை 258 இசைப்பாடல்கள் கொண்ட நாடகவடிவில் எழுதிய இராமநாடகக் கீர்த்தனை இவரது மிக முக்கியமான படைப்பு.
பிறப்பு, இளமை
அருணாசலக் கவிராயர் 1711-ம் ஆண்டு (சகம் 1634-ம் ஆண்டு), சீர்காழிக்கு அருகே உள்ள தில்லையாடியில் கார்காத்த வேளாளர் குலத்தில் நல்லதம்பி-வள்ளியம்மை இணையருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார்.
இவரது பன்னிரண்டாம் வயதில் பெற்றோர் காலமான பிறகு அண்ணனிடம் வளர்ந்தார். மாயூரம் அருகே உள்ள தருமபுரம் ஆதினத்தில் இருந்த துறவிகளிடமும் அம்பலவாணக் கவிராயர் என்னும் இசைக் கலைஞரிடமும் தமிழ்க் கல்வியும், சமயக் கல்வியும், வடமொழியும் பயின்றார். பதினெட்டாம் வயது வரை அங்கே இருந்து சைவத்திருமுறைகளையும், தமிழ் சாஸ்திரங்களையும், வடமொழி ஆகமங்களையும் கற்றார். மேலும் பன்னிரு ஆண்டுகள் தமிழ் பயின்றார்.
முப்பதாவது வயதில் கருப்பூர் என்ற ஊரைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார்.
தனிவாழ்க்கை
இவர் காசுக்கடை எனப்படும் வட்டிக்கு விடும் தொழிலில் ஈடுபட்டார். சீர்காழி பகுதிகளில் கம்பராமாயணத்தையும் பிற புராணங்களையும் பிரசங்கம் செய்தார். ஒருமுறை வணிகத்துக்காக புதுவை செல்ல நேர்ந்த போது வழியில் தருமை ஆதீனத்தில் தங்கினார். அங்கு அருணாசலக் கவிராயருடன் இளமையில் பயின்ற சிதம்பரநாதர் கட்டளைத் தம்பிரானாக இருந்தார். சீர்காழிக்கு ஒரு பள்ளுப் பிரபந்தம் எழுதத் தொடங்கி நேரமின்மையால் தன்னால் அதை எழுத முடியவில்லை என்பதால் அருணாசலத்தை எழுதுமாறு கூறினார். அன்றிரவே அவர் சீகாழிப்பள்ளு என்ற அந்நூலை எழுதி முடித்தார். அவரது புலமையைக் கண்ட சிதம்பரநாதர், கவிராயரை சீர்காழிக்கு வரவழைத்து குடும்பத்தோடு தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார். அருணாசலக் கவிராயர் 42-ஆவது வயதில் சீர்காழிக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்தார்[1].
இசைப் பணி
சீர்காழியில் வாழ்ந்த காலத்தில் அசோமுகி நாடகம், சீகாழிப்புராணம், சீகாழிக்கோவை, சீகாழிக்கலம்பகம், சீர்காழி அந்தாதி, தியாகேசர் வண்ணம், சம்பந்தர் பிள்ளைத்தமிழ், அனுமார் பிள்ளைத்தமிழ் போன்ற பல நூல்களை அருணாசலக் கவிராயர் இயற்றினார்.
இராமநாடகக் கீர்த்தனை
அருணாச்சல கவிராயரின் முதன்மைப் படைப்பாக இராமநாடகக் கீர்த்தனை கருதப்படுகிறது. இதுவே தமிழில் எழுதப்பட்ட முதல் இசைநாடக நூல் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
சீகாழி தலபுராணம்
அருணாசலக் கவிராயரின் சீகாழி தலபுராணம் 31 அதிகாரங்களும் 1550 பாடல்களும் கொண்டது சிறந்த . சீகாழியின் பன்னிரு பெயர்களின் சிறப்பை விளக்கும் பாடல்கள் பாராட்டப்பட்டவை. சிதம்பரநாத முனிவரின் விருப்பத்தை ஏற்றுச் செய்தார் என்று கூறப்படுகிறது. சிதம்பரநாத முனிவர் இதற்குச் சிறப்புப் பாயிரம் கொடுத்துள்ளார் . இது அச்சாகியுள்ளது .
அனுமார் பிள்ளைத்தமிழ்
அருணாச்சலக் கவிராயரால் பாடப்பட்ட இந்த அனுமார் திரிநேத்திர மாருதி (முக்கண் அனுமார்) என்று குறிப்பிடப்படுகின்றார் . பத்துப் பருவங்களிலாக நூறு பாடல்கள் கொண்டது.1899 ல் இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது
அசோமுகி நாடகம்
ராமாயணத்தின் ஒரு துணைக்கதையின் நாடக வடிவம்.இலக்குமணன் மீது காமம் கொண்டு அவனை பிடிக்க முயன்றபோது அவனால் கொல்லப்பட்ட ஓர் அரக்கி அசோமுகி . இந்நூல் இப்போது கிடைப்பதில்லை. அச்சேறவில்லை என ஆய்வாளர் தெரிவிக்கிறார்கள்.
காழி அந்தாதி
சீகாழியைப் போற்றி அந்தாதியாக எழுதப்பட்ட சிற்றிலக்கியம். இது அச்சேறியுள்ளது
காழிப்பள்ளு
சிதம்பரநாத முனிவரால் தொடங்கப்பட்டு அவர் விருப்பப்படி அருணாசலக் கவிராயரால் பாடி முடிக்கப்பெற்ற பள்ளு. இதில் ஐந்து பாடல்களே கிடைத்தன என்று மு. அருணாசலம் கூறுகிறார்
காழிக்கோவை
சீகாழியைப் பற்றிய சிற்றிலக்கியம். இது அச்சேறவே இல்லை. கிடைப்பதில்லை.
காழிக் கலம்பகம்
சீர்காழியைப் பற்றிய கலம்பக நூல். அச்சேறவில்லை, இன்று கிடைப்பதில்லை
தியாகேசர்வண்ணம்
வர்ணம் என்னும் வகையைச் சேர்ந்த இந்தப் பிரபந்தநூல் இலிங்கப்பச் செட்டியார் என்பவரின் மகன் தேப்பெருமாள் செட்டியாரின் முன் அரங்கேற்றப்பட்டது என்பது கவிராயர் அவரைப் போற்றிப் பாடியுள்ள கணி கொண்ட பஞ்சலட்சணம் எனத் தொடங்கும் சீட்டுக் கவியில் இருந்து தெரிகிறது. இந்நூலும் அச்சேறியதாக தெரியவில்லை.
கீர்த்தனங்கள்
இவர் ஸ்ரீரங்கநாதர் மீது பாடிய "ஏன் பள்ளி கொண்டீரைய்யா"[2] தமிழிசை மேடைகளில் மிகவும் புகழ்பெற்றது.
பல்லவி
ஏன் பள்ளி கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கனாதரே நீர் (ஏன்)
அனுபல்லவி
ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே-
அவதரித்த இரண்டாற்று நடுவிலே (ஏன்)
சரணம் 1
கௌசிகன் சொல் குறித்ததற்கோ? - அரக்கி
குலையில் அம்பு தெறித்ததற்கோ?
ஈசன் வில்லை முறித்ததற்கோ? – பரசு
ராமனுரம் பறித்ததற்கோ?
மாசில்லாத மிதிலேசன் பெண்ணுடனே
வழி நடந்த இளைப்போ?
காசில்லாத குகனோடத்திலே
கங்கைத் துறை கடந்த இளைப்போ?
மீசுரமாம் சித்ரகூட சிகரத்தின்
மிசை நடந்த இளைப்போ?
காசினிமேல் மாரீசனோடிய கதி
தொடர்ந்த இளைப்போ?
ஓடிக்களைத்தோ - தேவியைத்
தேடி இளைத்தோ? மரங்கள் ஏழும்
துளைத்தோ? - கடலை கட்டி
வளைத்தோ? - இலங்கை என்னும்
காவல் மாநகரை இடித்த வருத்தமோ?
ராவணாதிகளை முடித்த வருத்தமோ?(ஏன்)
இப்பாடல் மேலும் இரண்டு சரணங்கள் கொண்டது.
"யாரோ இவர் யாரோ" என்ற கீர்த்தனை எம்.எஸ். சுப்புலட்சுமியாலும்[3] டி.கே. பட்டம்மாளாலும் பாடப்பட்டு ஒலி நாடா மூலம் மிகப் பிரபலமடைந்தது. "எனக்குன் இருபதம்" என்ற கீர்த்தனையை ராகமாலிகையில் பாடி பிரபலப்படுத்தினார் டி.கே. பட்டம்மாள், "இராமனுக்கு மன்னன்" என்ற கீர்த்தனை திரைநடிகையும் பாடகியுமான பானுமதி பாடியிருக்கிறார். "ஏன் பள்ளி கொண்டீர்" கீர்த்தனை என்.சி. வசந்தகோகிலம் பாடிய ஒலிநாடாவால் பிரபலமடைந்தது[4]. மஹாராஜபுரம் சந்தானம், மதுரை மணி ஐயர், டி.என். சேஷகோபாலன் போன்ற பல புகழ்பெற்ற கர்நாடக இசை வல்லுனர்கள் இவர் பாடல்களை பாடியிருக்கின்றனர்.
பொதுவாக கச்சேரியின் இறுதியில் மங்களப் பாடலாக 'நீ நாம ரூபமுலகு நித்திய ஜய மங்களம்’ என்ற பாடலை பாடுவார்கள். அருணாசலக்கவிராயர் தமிழில் ஒரு மங்களப்பாடலை எழுதியிருக்கிறார்[5]:
எடுப்பு / பல்லவி
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்- நல்ல
திவ்விய முகச் சந்திரனுக்கு சுப மங்களம்
தொடுப்பு / அனுபல்லவி
மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு இரவிகுல சோமனுக்கு
இப்பாடல் இரு சரணங்கள் (சஹானா, மத்யமாவதி ராகங்களில்) கொண்டது.
மறைவு
இவர் 1778-ம் ஆண்டு (சகம் 1701, விகாரி வருடம்), ஆனி மாதம் காலமானார்.
படைப்புகள்
- இராமநாடகக் கீர்த்தனை
- சீகாழி தலபுராணம்
- அனுமார் பிள்ளைத்தமிழ்
- அசோமுகி நாடகம்
- சீகாழி அந்தாதி
- சீகாழிப்பள்ளு
- சீகாழிக்கோவை
- காழிக் கலம்பகம்
- தியாகேசர் வண்ணம்
கீர்த்தனைகள்
அருணாசலக் கவிராயரின் பாடல்களில் புகழ்பெற்றவை சில
- யாரோ என்றெண்ணாமலே - சங்கராபரணம் - ஆதி தாளம்
- யாரோ இவர் யாரோ- பைரவி, சாவேரி - ஆதி தாளம்
- ராமனுக்கு மன்னன் – இந்தோளம் - ஆதி தாளம்
- யாரென்று ராகவனை - யதுகுலகாம்போதி - ஆதி தாளம்
- ஸ்ரீராம சந்திரனுக்கு – மத்தியமாவதி - ஆதி தாளம்
- எனக்குன்இரு[6] – இராகமாலிகை - ஆதி தாளம்
- ஏன் பள்ளி கொண்டீர் – மோகனம் - ஆதி தாளம்
- தில்லைத் தலம் போல - சௌராஷ்டிரம் - ஆதி தாளம்
- துணை வந்தருள் புரிகுவாய் - மேஷகல்யாணி - மிஸ்ரசாப்பு தாளம்
- வந்தனர் எங்கள் கலியாண - மத்தியமாவதி - அடசாப்பு தாளம்
உசாத்துணை
- ராமநாடக இசைப்பாடல்கள் மின்னூல்
- கல்கி விமர்சனம் படங்கள் உதவி நன்றி: http://periscope-narada.blogspot.com/2014/07/yaro-ivar-yaro-critical-review-of.html
- சுதேசமித்திரன் படங்கள் உதவி நன்றி: https://s-pasupathy.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF
- யாரோ இவர் யாரோ மதுரை மணி ஐயர்
- யாரோ இவர் யாரோ – டி கே பட்டம்மாள்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:06:19 IST