under review

மாரிமுத்தாப் பிள்ளை

From Tamil Wiki
மாரிமுத்தாப் பிள்ளை ஒவியம் - எஸ்.ராஜம்
மாரிமுத்தாப் பிள்ளை ஒவியம் - எஸ்.ராஜம்

மாரிமுத்தாப் பிள்ளை (மாரிமுத்துப்பிள்ளை / தில்லைவிடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை) (1712-1787) கர்நாடக இசையில் பல தமிழ் கீர்த்தனைகளை இயற்றிப் பாடிய இசை முன்னோடி.

கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை (1712-1787), முத்துத்தாண்டவர்(1525-1600).

தமிழ் இசைப்பாடல்கள் தவிர 'புலியூர் வெண்பா', 'சிதம்பரேசர் விறலிவிடுதூது', 'தில்லைப்பள்ளு' போன்ற பல நூல்களையும் இயற்றியிருக்கிறார்.

பிறப்பு, இளமை

மாரிமுத்தாப் பிள்ளை 1712--ம் ஆண்டு (சிதம்பரத்துக்கு அருகே உள்ள தில்லைவிடங்கன் என்ற சிற்றூரிலே சைவ வேளாளர் குலத்தில் தெய்வப்பெருமாள் பிள்ளையின் மகனாகப் பிறந்தார்.

சிவகங்கநாத தேசிகர் என்பவரிடம் தமிழ்க் கல்வியும், சமயக் கல்வியும் பயின்றார்.

தனிவாழ்க்கை

மாரிமுத்தாப் பிள்ளையின் முதல் மகன் பெருமாள் பிள்ளையும், மூன்றாவது மகன் குமாரசாமிப் பிள்ளையும், பேரர் ஐயாத்துரைப் பிள்ளையும் தமிழ்ப் புலவர்களாக இருந்தார்கள். மாரிமுத்தாப் பிள்ளையின் கொள்ளுப் பேரர் வேலுச்சாமிப் பிள்ளை இவரது சில நூல்களை அச்சிட்டார். வேலுச்சாமிப் பிள்ளை, மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்வி பயின்றவர், வெண்பாப் புலி என பட்டம் பெற்றவர்.[1]

மாரிமுத்தாப் பிள்ளை இவருடைய சமகாலத்தவரான அருணாசலக் கவிராயரை சந்தித்து நட்பு கொண்டிருந்திருக்கிறார்.

இசைப் பணி

மாரிமுத்தாப் பிள்ளை சில நூறு இசைப்பாடல்கள் இயற்றியிருப்பதாகத் தெரிந்தாலும் இன்று அவற்றில் 25 மட்டுமே கிடைத்திருக்கிறது.

25 கீர்த்தனைகளை 17 ராகங்களில் அமைத்திருக்கிறார். ஆனந்தபைரவி, தேவகாந்தாரி, சௌராஷ்டிரம், மத்யமாவதி, மோகனம், ஆரபி, பைரவி, புன்னாகவராளி ஆகியவற்றில் இரண்டு கீர்த்தனைகள் வீதமும், பூர்வி கல்யாணி, பியாகடை, செஞ்சுருட்டி, யதுகுலகாம்போதி, சாவேரி, காம்போதி, தோடி, சுருட்டி ஆகியவற்றில் ஒவ்வொன்று வீதமும் இயற்றியிருக்கிறார்.

தாளங்களில் திரிபுடை, ரூபகம், சாபு, ஏகதாளம், மற்றும் ஆதி தாளங்களை பயன்படுத்தி இருக்கிறார்.

இவருடைய கீர்த்தனைகளில் சில பாடல்கள் இன்றும் இசைக்கச்சேரிக்கும், பரதநாட்டியத்துக்கும் பரவலாகப் பயன்பட்டு வருகின்றன. "காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே[2]" இவற்றுள் மிகவும் புகழ்பெற்றது.

ராகம்: யதுகுல காம்போதி

பல்லவி

பல்லவி
காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே என்னைக்
கை தூக்கியாள் தெய்வமே

அனுபல்லவி
வேலைத் தூக்கும் பிள்ளை தனைப் பெற்ற தெய்வமே
மின்னும் புகழ்சேர் தில்லை பொன்னம்பலத்தில் ஒரு (காலை)

சரணம்1
செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி
அங்கத்தில் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி
கங்கையைத் திங்களை தரித்த சடைமேல் தூக்கி
இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத (காலை)

சரணம்2
நந்தி மத்தளம் தூக்க நாரதர் யாழ் தூக்க
தோம் தோம் என்றயன் தாளம் சுருதியோடு தூக்க
சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னி மேல் கரம் தூக்க
முந்தும் வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க (காலை)

இவர் இசைப்பாடல்களில் இரண்டு பாடல்கள், நாட்டியப் பதங்களாக அமைந்தவை. ஒன்று 'ஏதுக்கித்தனை மோடி தானுமக்கு என்றன் மேலையா[3]' என்ற சுருட்டி ராகப் பாடல். இரண்டாவது 'என்ன காரியத்துக்கு இப்பேயாண்டி மேல் இச்சை கொண்டாய் மகளே' என்ற தர்மவதி ராகத்தில் அமைந்த பதம்.

இவர் தனது 25 கீர்த்தனைகளோடு முத்துத்தாண்டவர் இயற்றிய கீர்த்தனைகளையும் அன்றே அச்சிட்டதால்தான் இவை கிடைக்கின்றன. ஆனால் அந்தக் காலகட்டத்தில் வெளியிடப்பட்ட பதிப்புகளில் மாரிமுத்தாப்பிள்ளை குறித்த தகவல்கள் இல்லை. பின்னர் இவரது கொள்ளுப்பேரன் வேலுசாமிப் பிள்ளை பதிப்பித்த சில பிரபந்தங்களில் இருந்தே இவரைக் குறித்த வரலாறு சிறிது தெரிய வருகிறது.

மறைவு

மாரிமுத்தாப் பிள்ளை 1787--ம் ஆண்டு (சகம் 1709, பிலவங்க வருடம்) மறைந்தார்.

படைப்புகள்

புலியூர் வெண்பா
புலியூர் வெண்பா
இசைப்பாடல்கள்

சிதம்பரம் நடராஜர் இவர் இயற்றியுள்ள பாடல்களில் சில:

 • தில்லை சிதம்பரமே அல்லால் வேறில்லை தந்திரமே - ராகம்: ஆனந்தபைரவி
 • எந்நேரமும் ஒரு காலை தூக்கிக்கொண்டு[4] – ராகம்: தோடி, தாளம்: ஆதி
 • தெரிசித்தபேரைப் பரிசுத்தராக்க - ராகம்: சௌராஷ்டிரம், தாளம்: ஆதி தாளம்
 • தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை[5] - ராகம்: பூர்வி கல்யாணி, தாளம்: ஏக தாளம்
 • எந்தத் தலத்தையு மிந்தத் தலத்துக்கிணை சொல்லக் கூடாதே - ராகம்: தேவகாந்தாரி, தாளம்: ஆதி தாளம்
 • எந்நாளும் வாசமாம் சிதம்பரஸ்தலத்திலே - ராகம்: பியாகடை, தாளம்: ஆதி தாளம்
பிற நூல்கள்

இசைப்பாடல்கள் தவிர வேறு சில நூல்களும் இயற்றியிருக்கிறார். அவற்றுள் சில:

 • புலியூர் வெண்பா[6] (புலியூர் – சிதம்பரம்) - சிதம்பரம் மீது பாடப்பட்ட நூறு வெண்பாக்கள். முதல் இரண்டடிகளில் தலத்தின் பெருமையைச் சொல்லி, பின் இரண்டடிகளை திரிபிலும் யமகத்திலுமாக அமைத்திருக்கிறார்.
 • தில்லைவிடங்கன் ஐயனார் நொண்டிநாடகம் - 18-ம் நூற்றாண்டில் அதிகம் பாடப்பட்ட ஒரு பிரபந்த வகை. ஒருவன் தாசி மீதான் மோகத்தில் மூழ்கி, அவளுக்காகப் பொன் திருடி, அரசனால் கையும் காலும் வெட்டப்பட்டு, முடிவில் தில்லைவிடங்கன் ஐயனாராகிய செல்வராக மூர்த்தியின் அருள்பெற்று வாழ்ந்த கதையை அந்த நொண்டியே வந்து உரைப்பது போல ஒரு சிந்துப்பாட்டாக சொல்லும் பிரபந்தம்
 • அன்னீத நாடகம்[7]
 • வருணாபுரி ஆதிமூலேசர் குறவஞ்சி (வருணாபுரி - தில்லைவிடங்கன்)

கிடைக்காத நூல்கள்:

 • சிதம்பரேசர் விறலிவிடுதூது
 • தில்லைப் பள்ளு
 • சித்திரக்கவிகள்
 • சிங்காரவேலர் பதிகம்
 • வருணாபுரிப் பள்ளு
 • நொண்டி நாடகம்
 • விடங்கேசர் பதிகம்
 • தனிப்பாடல்கள்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page