பரூஉமோவாய் பதுமனார்
பரூஉமோவாய் பதுமனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
பரூஉமோவாய் பதுமனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. பதுமனார் என்னும் இயற்பெயர் உடையவர். பருத்த மோவாயினை உடையதால் பரூஉமோவாய் பதுமனார் என்று பெயர் பெற்றிருப்பார் என கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
பரூஉமோவாய் பதுமனார் பாடிய பாடல் குறுந்தொகையில் 101-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டும் பொருட்டு தலைவியை பிரிந்து செல்ல விரும்பாத தலைவன் தனக்கு தானே கூறி கொள்வதாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- இணையர் இருவர் கூடி அடையும் காம இன்பம் இவ்வுலகு மற்றும் தேவர் உலகு ஆகியவற்றை பெறுவதை காட்டிலும் பெரிது என்னும் கருத்து வெளிப்பட்டுள்ளது.
- உவமைகள்: தலைவியின் கண்கள் பூவுக்கும், உடலின் நிறம் பொன்னுக்கும் உவமிக்கப்பட்டுள்ள. அவளது இடை அழகிய வரிகள் மிகுந்தது எனப் பாடல் கூறுகிறது.
பாடல் நடை
குறுந்தொகை - 101
- திணை: குறிஞ்சி
- கூற்று: வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியதூஉமாம்.
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே.
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.